Published : 24 Feb 2021 03:16 AM
Last Updated : 24 Feb 2021 03:16 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழக அரசின் வரி விதிப்பு காரணம் அல்ல நிதித்துறை செயலர்எஸ்.கிருஷ்ணன் விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசின் வரி விதிப்பு காரணம் அல்ல என்று தமிழக நிதித்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் கூறினார்.

தமிழகத்தின் 2021-22 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் வரி நிர்வாகம், எதிர்கொண்டுள்ள சவால்கள் உள்ளிட்ட விவரங்களை செய்தியாளர்களிடம் தமிழக நிதித்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி விதிப்பு வரம்பில் தமிழக அரசு கடந்த ஆண்டு மே 3-ம் தேதி மாற்றங்கள் செய்தது. விலை உயரும்போது, அது மக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் வரி விகிதம் மாற்றப்பட்டது. அதேசமயம், உற்பத்தி வரி, கூடுதல் வரி (செஸ்) ஆகியவற்றை மத்திய அரசு கணிசமாக உயர்த்தியது. இதனால், மத்திய அரசு மூலம் கிடைக்க வேண்டிய வருமானம் ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலத்தில் 48 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக குறைந்தது. ஆனால் மத்திய அரசின் வரி விதிப்பு காரணமாக இவற்றின் விலை உயர்ந்தது.

 2 சதவீத வளர்ச்சி

கரோனா பெருந்தொற்று காரணமாக நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் மைனஸ் 7.7 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு கணித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் வளர்ச்சி விகிதம் 2.02 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடும் விதமாக வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதால் அத்துறையில் வளர்ச்சி 1.26 சதவீதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தின் வரி மூலமான வருமானம் 18 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், மூலதன செலவுகளை தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது. மாநிலத்தின் வருமானம் ரூ.6 ஆயிரம் கோடி குறையும். அதேபோல மூலதன செலவு பற்றாக்குறை ரூ.2 ஆயிரம் கோடியை ஈடுகட்ட வேண்டும். இதனால் நிதிப் பற்றாக்குறை ஜிடிபி-யில் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை இருக்க அனுமதிக்கப்படுகிறது. இதன்படி ரூ.95 ஆயிரம் கோடி வரை கடன் பெறலாம். அடுத்த நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 4 சதவீதமாக கட்டுக்குள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் வரும் நிதி ஆண்டில் கடன் பெறுவது குறையும்.

புதிதாக வரி வருவாய் ஏதும் இல்லாத சூழலில் அடுத்த 6 மாதங்களுக்கு மாநில அரசின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய நிதி அனுமதி கோரும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடன் அதிகரிக்கிறது என்று கவலைப்படுவதைவிட அதே சமயத்தில் வளர்ச்சி எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும்.

தற்போது வேளாண், உணவு உற்பத்தி, மீன்வளம், பால் வளம் சார்ந்த துறைகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இதேபோல தொழில் துறையில் முதன்மை நிறுவனங்களின் செயல்பாடும் சிறப்பாக உள்ளது.

 பயிர்க்கடன்

விவசாயிகளுக்கான பயிர்க் கடன்ரத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டது. ஆனால் அதற்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 5 ஆண்டுகளுக்கான நடவடிக்கை. நபார்டிடம் பெறப்பட்ட ரூ.4,100 கோடியை முழுமையாக அரசு திரும்ப செலுத்தினால் மட்டுமே அடுத்து வரும் காலங்களில் பயிர்க்கடன் பெற முடியும். இது அரசு துறைகள் ரீதியான நடவடிக்கை. இதற்கும் விவசாயிகளுக்கு கடன் ரத்து ரசீது வழங்குவதற்கும் தொடர்பு கிடையாது. அனைத்து விவசாயிகளுக்கும் கடன் ரத்து ரசீது வழங்கப்படும்.

 வரி வருவாய் பங்கு

மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு கிடைக்கும் வரி வருவாய் பங்கும் குறைந்துள்ளது. 21 சதவீத பங்காக கடந்த 2019-ல் மத்திய அரசிடம் இருந்து ரூ.32,849 கோடி கிடைத்தது. இது கடந்த ஆண்டு ரூ.23,029 கோடியாக குறைந்துள்ளது.

 மானிய ஒதுக்கீடு

மாநில அரசு அதிக அளவில் மானியமாக ஒதுக்குவது உணவு மற்றும் மின்சாரத்துக்கானது. இதற்கு அடுத்தபடியாக மாணவர்களுக்கு இலவச பேருந்து பாஸ் வழங்குவது உள்ளிட்டவற்றுக்கும் மானியம் அளிக்கப்படுகிறது. வரி வருமானம் 18 சதவீதம் குறைந்துள்ள நிலையில் கரோனா பெருந்தொற்றை சமாளிக்க சுகாதாரத் துறைக்கு கூடுதலாகரூ.2,500 கோடி செலவிடப்பட்டுள்ளது.

 சவால்கள்

பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் புதிய வரி விதிப்புகள், புதிய நலத்திட்ட அறிவிப்புகள் இடம்பெறாது. இந்நிலையில் கரோனா தொற்றில் இருந்து மீண்டு, வளர்ச்சியை முடுக்கிவிட மூலதன செலவுகளைத் தொடர வேண்டிய சூழல் உள்ளது. வளர்ச்சி 2 சதவீதம் இருக்கும் என்றாலும், அடுத்து பொறுப்பேற்கும் அரசு நிதிப் பற்றாக்குறை சவாலை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x