Published : 04 Feb 2021 03:13 AM
Last Updated : 04 Feb 2021 03:13 AM

நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளரும் ஆல்ரவுண்டருமான ரிச்சர்ட் ஹாட்லி, டெஸ்ட் போட்டிகளில் தனது 400-வது விக்கெட்டை வீழ்த்திய நாள் இன்று (பிப்ரவரி 4)

நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளரும் ஆல்ரவுண்டருமான ரிச்சர்ட் ஹாட்லி, டெஸ்ட் போட்டிகளில் தனது 400-வது விக்கெட்டை வீழ்த்திய நாள் இன்று (பிப்ரவரி 4). 1990-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவர் இச்சாதனையைப் படைத்தார்.

நியூஸிலாந்து அணிக்கு கிடைத்ததிலேயே மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான ரிச்சர்ட் ஹாட்லி, 1973-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தனது முதல் போட்டியில் 2 விக்கெட்களை மட்டுமே எடுத்த அவர், அடுத்தடுத்த போட்டிகளில் விஸ்வரூபமெடுத்து, சர்வதேச பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார்.

86 டெஸ்ட் போட்டிகளில் அவர் வீழ்த்திய விக்கெட்களின் எண்ணிக்கை 431. இதில் 36 முறை அவர் 5 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்திய ஹாட்லி, 3 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். ஒருசில வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிவிட்டு, வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் சொதப்புவார்கள். ஆனால் ரிச்சர்ட் ஹாட்லி அப்படி இல்லை. நியூஸிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 201 விக்கெட்களை எடுத்த ஹாட்லி, வெளிநாடுகளில் 230 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். இதில் 21 இன்னிங்ஸ்களில் 5 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தி எதிரணியினருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளிலும் நியூஸிலாந்து அணிக்கு அஸ்திவாரமாய் இருந்த ஹாட்லி, 158 விக்கெட்களை கொய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 431 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற ஹாட்லியின் சாதனையை வேண்டுமானால் பலரும் முறியடித்திருக்கலாம். ஆனால் 102 முதல்தர போட்டிகளில் 5 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற ஹாட்லியின் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x