Published : 23 Nov 2020 03:11 AM
Last Updated : 23 Nov 2020 03:11 AM

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஓராண்டில் 2.6 கோடி குடும்பத்துக்கு சுத்தமான குடிநீர்; உ.பி.யில் குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி தகவல்

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஓராண்டில் 2.6 கோடி குடும்பங்கள் குழாய் வழியாக சுத்தமான குடிநீரைப் பெற்றுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநிலத்தின் விந்தியாஞ்சல் பகுதியில் உள்ள மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் ஊரகக் குடிநீர் விநியோக திட்டங்களுக்கு காணொலி வாயிலாக நேற்று அடிக்கல் நாட்டினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியின்போது கிராம தண்ணீர் மற்றும் சுகாதார குழுவின் உறுப்பினர்களோடு பிரதமர் உரையாடினார். மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல் மற்றும் அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இத்திட்டங்களுக்காக ரூ.5,555.38 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 24 மாதங்களுக்குள் இதற்கான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:

நாடு விடுதலை அடைந்த பின்பு பல தசாப்தங்களாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பகுதி ஒன்று இருக்கிறது என்றால், அது இந்த விந்தியாஞ்சல் பகுதியே ஆகும். அதிக அளவு வளங்களைக் கொண்ட பகுதியாக இருந்தபோதிலும், விந்தியாஞ்சலம் மற்றும் புந்தேல்கண்ட் பகுதிகள் பற்றாக்குறை வசதிகளை கொண்ட பகுதியாகவே இருந்து வந்துள்ளன. அதற்கு அதிக முக்கியத்துவம் தராமல் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன.

இந்த பகுதியில் பல்வேறு ஆறுகள் ஓடியபோதிலும், வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாகவே அறியப்பட்டு வந்துள்ளன. இதனால் இந்த பகுதியில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஓராண்டில் 2.6 கோடி குடும்பங்கள் குழாய் வழியாக சுத்தமான குடிநீர் பெற்றுள்ளனர். இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் அதை மேலும் விரைவுபடுத்தும்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் தொடங்கப்பட்டது முதல் உத்தரபிரதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள் உட்பட ஏராளமானோர் பயன் பெற்றுள்ளனர்.ஜல் ஜீவன் இயக்கத்தின் வாயிலாக தங்களது வீடுகளிலேயே குடிதண்ணீர் கிடைப்பதால் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கை மிகவும் சுலபமாகி உள்ளது.

அசுத்தமான குடிநீரால் ஏழைக் குடும்பங்களிடையே நிலவி வந்த காலரா, டைபாய்டு, மூளையில் ஏற்படும் வீக்கம் போன்ற பல்வேறு நோய்கள் குறைந்திருப்பது இந்தத் திட்டத்தின் மற்றொரு முக்கிய பலன்.இந்த திட்டங்களின் வாயிலாக தண்ணீர் பஞ்சம் மற்றும் நீர்ப்பாசன பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.

குழாய் தண்ணீர் விந்தியாஞ்சல் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராமங்களை அடையும்போது, இங்கு வசிக்கும் குழந்தைகளின் சுகாதாரம் மேம்படுவதுடன் அவர்களது உடல் மற்றும் மன நலனும் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x