Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

மெட்ரோ, ஜவுளி பூங்கா, நதிநீர் இணைப்புக்கு நிதி பெற்றுத் தர அமித்ஷாவிடம் முதல்வர் கோரிக்கை

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம், ஜவுளிப் பூங்கா, கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கான அனுமதி மற்றும் நிதியை பெற்றுத்தரும்படி மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் முதல்வர் பழனிசாமி கடிதம் அளித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில், தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்க அர்ப்பணிப்பு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். பின்னர், தான் தங்கியிருந்த லீலா பேலஸ் ஓட்டலுக்கு சென்றார். அவரைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார், தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திர நாத் ஆகியோர் ஓட்டலுக்கு சென்று, அமித்ஷாவை சந்தித்தனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.

இதற்கிடையில், நிகழ்ச்சியில் அறிவித்தபடி, 3 கோரிக்கை கடிதங்களை அமித்ஷாவிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார். அந்த கடிதங்களில் கூறியிருப்பதாவது:

மெட்ரோ ரயில் திட்டம்

மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் 118.9 கி.மீ. தொலைவுக்கு ரூ.61,843 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்துக்கான பங்கு மூலதனமாக வழங்கப்படும் 15 சதவீதத்துக்கு பதில், 10 சதவீதத்தை மானியமாக வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது, தற்போதைய மத்திய, மாநில அரசுகளின் பங்கு தொடர்பான திட்டத்தை பாதிக்கும். எனவே, மூலதன செலவில் மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீதத்தை ஏற்கும் வகையில் அதற்கான அனுமதியை விரைவில் மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும், மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டத்தின் திருத்திய மதிப்பீடு மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. அதற்கான தொகையையும் விரைவில் அளிக்க வேண்டும்.

ஜவுளிப் பூங்கா

மத்திய ஜவுளித் துறை மெகா ஜவுளி தொழில் பூங்காக்களை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்த முடிவு செய்துள்ளது. ஜவுளி உற்பத்தியில் முன்னணி மாநிலமான தமிழகம், ஜவுளிப் பூங்கா அமைக்க விருப்பம் தெரிவித்து, தருமபுரி, விருதுநகர் மாவட்டங்களில் இடங்களை தேர்வு செய்துள்ளது. பூங்கா அமைப்பதற்கு தேவையான நிலம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

இதுதவிர, சென்னைக்கு அருகில் மிகப்பெரிய மருந்து பூங்கா மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி பூங்காவை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கைமத்திய மருந்து துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொழிற்சாலை பங்குதாரர்கள், முதலீட்டாளர்களும் தயாராக உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிடம் பேசி, இத்திட்டங்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியை பெற்றுத்தர வேண்டும்.

நதிநீர் திட்டங்கள்

கோதாவரி - காவிரி (கல்லணை) இணைப்பு திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தேசிய நீர் மேம்பாட்டு முகமை தயாரித்து, மாநிலங்களின் கருத்துகளை கேட்டுள்ளது. இத்திட்டத்தின் தேவையை உறுதி செய்ததுடன், கல்லணைக்கு பதில் கட்டளைக் கால்வாய் வரை நீட்டிக்க கோரி, கடந்த பிப்ரவரி மாதம் தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த மத்திய ஜல்சக்தி அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும். அதே போல், காவிரியில் கட்டளை கால்வாய் முதல் - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு அனுமதி மற்றும் நிதியை பெற்றுத்தர வேண்டும்.

இதுதவிர, காவிரி மற்றும் உபநதிகளை புனரமைக்கும் நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்த ரூ.10,700 கோடிக்குதிட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் நிதி தேவைப்படுகிறது. எனவே, இதற்கு ஒப்புதல் அளிக்க ஜல்சக்தி அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அக்கடிதங்களில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x