

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய சாட்டிலைட் ஃபோனை பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் 17 ப்ரோவை விட அதிகமான இந்த சாட்டிலைட் ஃபோனின் விலைதான் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய இந்த சாட்டிலைட் ஃபோன்தான் இப்போது டிரெண்டாகி சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. வழக்கமான செல்போன்களில் இருந்து இந்த சாட்டிலைட் ஃபோன் எவ்வாறு மாறுபட்டது, எப்படி இயங்குகிறது, இதை முதலில் கண்டுபிடித்தது யார், இதை யார் பயன்படுத்தலாம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை காண்போம்.
சாட்டிலைட் ஃபோன் என்றால் என்ன?
சாட்டிலைட் ஃபோன் அல்லது சாட்ஃபோன் (satphone) என்பது தரைவழி செல்போன் கோபுரங்களில் இருந்து வரும் சிக்னல்களை சார்ந்து இயங்காது. மாறாக, பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு, அதிலிருந்து சிக்னல்களைப் பெற்று இயங்கும். வழக்கமான செல்போன் அல்லது ஸ்மார்ட்போன், பூமியின் மீது பதிக்கப்பட்டுள்ள தரைவழி ஆன்டெனாக்களுடன் இணைக்கப்படும்.
ஆனால், சாட்டிலைட் ஃபோனோ வானில் இருக்கும் செயற்கைக்கோள் கோபுரத்துடன் இணைந்து தகவல்களை பரிமாறுகிறது. இதனால்தான் மொபைல் டவர் இல்லாத இடங்களான அடர்ந்த காடுகள், மலைப் பிரதேசங்கள், பனிப் பிரதேசம், உயரமான மலைகள், பள்ளத்தாக்குகள், கடற்பகுதி, ஆழமான சுரங்கம், குகைகள், சர்வதேச கடல் பகுதி ஆகியவற்றில் துல்லியமாக இயக்க இவை பெருமளவு உதவுகின்றன.
பயன்பாட்டுக்கு வந்தது எப்போது?
ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் பணியாற்றிய அமெரிக்கப் பொறியாளர் ராய் இ.ஆன்டர்சன் என்பவர்தான் முதன்முதலில் செயற்கைக்கோளில் இருந்து சென்போன்களை இயக்க முடியும் என்பதை கண்டுபிடித்தார். அதற்கு முன்பாக, 1962-ம் ஆண்டில் ஏடி அன்ட் டி (AT&T) மற்றும் பெல் லேப்ஸ், பிரிட்டன், பிரான்ஸ் அரசுகள் சேர்ந்து தயாரித்து ஏவப்பட்ட டெல்ஸ்டார் 1 செயற்கைக்கோள் மூலம் ஆரம்பகால குரல் பரிமாற்றங்கள் செய்து காட்டப்பட்டன. இதை அடிப்படையாக வைத்தே 1980-களில் ராய் இ.ஆன்டர்சன் செயற்கைக்கோளில் இருந்து சிக்னல்களைப் பெற்று பேச முடியும் என்பதை நிரூபித்தார்.
அமெரிக்காவின் தொலைத்தொடர்பு நிறுவனமான மோட்டோரோலா 1990-களில் வர்த்தக ரீதியான சாட்டிலைட் ஃபோனை மேம்படுத்தி, பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்தது. 1987-ம் ஆண்டு அமெரிக்கப் பொறியாளர்கள் பேரி பெர்டிகர், ரூடி காடியோ ஆகியோர் ‘இரிடியம் திட்டத்தை’ தொடங்கினர். இதன் மூலம், பூமியில் தாழ்வான தொலைவில் சுற்றிவரும் செயற்கைக்கோளுடன் இணைந்து பேச முடியும் என்பதே 1998-ம் ஆண்டு வெற்றிகரமாக செய்து காண்பித்தனர்.
இயங்குவது எப்படி?
வழக்கமான செல்போன்கள் போன்று சாட்டிலைட் ஃபோன்கள் இயங்குவதில்லை. வழக்கமான செல்போன்களில் அழைப்பு செய்தால், அது தரைவழி மொபைல் டவரில் இருந்து சிக்னலை எடுத்து, மற்றொரு டவருக்கு தகவல்களை அனுப்பும். ஆனால், சாட்டிலைட் ஃபோன்கள், பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்கின்றன.
சாட்டிலைட் ஃபோனில் ஒருவருக்கு கால் செய்தால், அந்த சிக்னல் விண்வெளியில் உள்ள ஒரு செயற்கைக்கோளுக்குச் செல்கிறது. அது, அதனை பூமியில் இருக்கும் நிலையத்துக்கு அனுப்புகிறது. அந்த நிலையம், அந்த அழைப்பை வழக்கமான தொலைபேசி அமைப்புடனோ அல்லது மற்றொரு சாட்டிலைட்டுடனோ இணைக்கிறது.
இரு வழிகளில் சாட்டிலைட் ஃபோன்கள் இயங்குகின்றன. முதலாவது, குறைந்த புவி நீள்வட்டப் பாதை (Leo Earth orbit). இந்த வகையில் பூமியில் இருந்து 400 முதல் 1,000 மைல் உயரத்தில் சுற்றிவரும் செயற்கைக்கோள்கள் மூலம் தொடர்பு கொண்டு பரிமாற்றங்கள் செய்வதாகும். இவற்றின் சிக்னல் துல்லியமாகவும், தெளிவாகவும் இருப்பதால் குறைந்த பேட்டரி சக்தியே போதுமானது. ஆனால், வேகமாக நகரும் தன்மையில் சாட்டிலைட் இருப்பதால், ஒவ்வொரு முறையும் கால் செய்யும்போது அடுத்தடுத்த செயற்கைக்கோளுக்கு நம்மை மாற்ற வேண்டியிருக்கும்.
இரண்டாவதாக, ஜியோசிங்ரனைஸ் எர்த் ஆர்பிட் (Geo) வகை செயற்கைக்கோள்களாகும். இந்த வகை செயற்கைக்கோள்கள், பூமத்திய ரேகையிலிருந்து 35,700 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும். பூமி சுழலும் அதே வேகத்தில் இந்த செயற்கைக்கோள்கள் சுற்றுவதால், நிலையாக இருப்பதுபோன்று வானிலை தெரியும். இந்த வகை செயற்கைக்கோள்கள் தடையில்லா சிக்னல்களையும், ஒவ்வொரு முறையும் வேறு செயற்கைக்கோளுக்கு மாற வேண்டிய தேவையில்லை. ஆனால், கால் செய்யும்போது அது இணைப்பை ஏற்படுத்த சிறிது நேரம் எடுக்கும்.
சாட்டிலைட் ஃபோனின் சிறப்பம்சங்கள்
1. சுரங்கம், கனிமவளங்கள் வெட்டி எடுத்தல் பகுதி, உயரமான மலைப்பகுதி, அடர்ந்த காடுகள், பூகம்பம் ஏற்பட்ட பகுதி, கடல் பகுதி, ஆழ்ந்த கடற்பகுதி ஆகியவற்றில் பயணிக்கும்போது சாதாரண டவர் கிடைக்காது. அப்போது சாட்டிலைட் ஃபோன்கள் பயன்படும்.
2. மொபைல் நெட்வொர்க் இல்லாத இடத்துக்கு செல்லும்போது தொடர்புகொள்ள, அங்கு சாட்டிலைட் ஃபோன்கள் பயன்படும்.
3. எந்த ஓர் இடத்தில் இருந்தும், எந்த தடையும், தாமதமும் இன்றி, வாய்ஸ் கால் செய்ய முடியும்.
4. ஆபத்தான நேரம், அசாதாரண சூழல், பூகம்பம் ஏற்பட்ட நேரம், மொபைல் டவர் செயல் இழந்த நேரம், கடலில் புயல் காலம், தீவிரமான மழைக் காலம், போன்ற இக்கட்டான சூழலிலும், அவசர காலத்திலும் சாட்டிலைட் ஃபோன்கள் மூலம் யாரையும் தொடர்பு கொள்ளலாம்.
5. கடினமான சூழல்கள், பல்வேறு தட்பவெப்ப நிலை, காலைநிலையை தாங்கும் வகையில் சாட்டிலைட் ஃபோன் வடிவமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக குறைவாகவே பேட்டரி செலவாகும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
6. வாய்ஸ் கால் செய்ய முடியும், எஸ்எம்எஸ் அனுப்ப முடியும், எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது குறித்து தகவல்களை அனுப்பலாம், மற்றவர்களும் நாம் இருக்கும் இடத்தை கண்டறியவும் இந்த சாட்டிலைட் ஃபோன் உதவும்.
விலை எவ்வளவு?
பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்திய சாட்டிலைட் ஃபோனின் விலை ரூ.1,34,166.
யாரெல்லாம் பயன்படுத்தலாம், வாங்கலாம்?
இந்தியாவில் சாட்டிலைட் ஃபோன்கள் பயன்பாட்டுக்கு மத்திய பாதுகாப்புத் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சாதாரண செல்போன்கள் போல் அனைவரும் இதனை வாங்கவிட முடியாது.
இதன்படி, யாருக்கெல்லாம் தடையற்ற தகவல்கள் தொடர்பு தேவையோ அவர்கள் மட்டும் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன் அனுமதியுடன் வாங்கலாம். மொபைல் நெட்வொர்க் இல்லாத இடத்தில் பணியாற்றும் அமைப்புகள், நபர்கள் இதை மத்திய தொலைத்தொடர்பு துறை அனுமதியுடன் வாங்கலாம்.
குறிப்பாக பாதுகாப்புத் துறை, கடற்படையினர், மீனவர்கள், பேரிடர் மீட்புத் துறையினர், சுரங்கப் பணியில் இருப்போர், தொழிற்சாலையில் பணியாற்றுவோர், மலை ஏற்றத்தில் இருப்போர், மலைப்பகுதிக்கு யாத்திரை செல்பவர்கள் இந்த சாட்டிலைட் ஃபோனை மத்திய அரசு அனுமதியுடன் பயன்படுத்தலாம்.
சாட்டிலைட் ஃபோன்கள் மூலம் சட்டவிரோத செயல்கள் நடப்பதற்கும், திட்டம் தீட்டுவதற்கும் பயன்படுத்த முடியும், தீவிரவாதிகள் எளிதாக பயன்படுத்தக்கூடும் என்பதால் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பிளான்கள் என்னென்ன?
சாட்டிலைட் ஃபோன்களை போஸ்ட்பெய்டு திட்டத்தில் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு மாதக் கட்டணமாக நிலையாக ரூ.3,500-க்கு 16 நிமிடங்கள் டாக்டைம், எஸ்எம்எஸ் சேவை, ரூ.5,835-க்கு 30 நிமிடங்கள் டாக் டைம், எஸ்எம்எஸ் சேவை, ரூ.11,670-க்கு 60 நிமிடங்கள் டாக்டைம், எஸ்எம்எஸ் சேவை என திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வணிக ரீதியாக பயன்படுத்துவோருக்கு ஆண்டுக்கு ரூ.64,185 கட்டணம் செலுத்தினால், 360 நிமிடங்கள் டாக்டைம் இலவசமாகக் கிடைக்கும். அரசு அமைப்புகள் சாட்டிலைட் ஃபோனைப் பயன்படுத்தினால், நிமிடத்துக்கு ரூ.18 பேசவோ அல்லது எஸ்எம்எஸ் அனுப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களுக்கு நிமிடத்துக்கு ரூ.25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ப்ரீபெய்டு திட்டத்தின்படி, ரூ.200, ரூ.500, ரூ.1000, ரூ.5000, ரூ.10,000 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம்.
சாதாரண ஸ்மார்ட்போனை, சாட்டிலைட் ஃபோனாக மாற்றமுடியுமா?
நேரடியாக மாற்ற முடியாது. ஆனால், சாட்டிலைட் தொலைத்தொடர்பு கருவிகள் சாட்டிலைட் ஹாட்ஸ்பாட், ஸ்லீவ்ஸ் மூலம், அதாவது ‘இரிடியம் கோ’, ‘மோட்டோரோலா டெபி சாட்டிலைட் லிங்க்’, ‘துரயா சாட்ஸ்லீவ்’ பயன்படுத்தி சாதாரண செல்போனை ப்ளூடூத், வைஃபை மூலம் சாட்டிலைட் ஃபோனாக மாற்றலாம். மொபைல் டவர் இல்லாத காடுகள், மலைப்பகுதிகள், கடல்பகுதி ஆகியவற்றில் இருந்து குறுஞ்செய்தி, அவசரகால செய்தி அனுப்பலாம்.
சமீபத்தில் ஸ்டார்லிங்க், டி-மொபைல் போன்ற நிறுவனங்கள் எந்தவிதமான கூடுதல் கருவிகள் இல்லாமல் 4ஜி அல்லது 5ஜி ஸ்மார்ட்போன்களை, சாட்டிலைட்டுடன் இணைக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. ஆப்பிள் ஐஃபோன் 14 ப்ரோ மாடலுக்குப் பின் வந்த நவீன மாடல்கள் அனைத்திலும், அவசர காலத்துக்கு குறுஞ்செய்தி அனுப்பும் முறை அனைத்தும் சாட்டிலைட் உதவியுடன் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.