

2025-26-ம் நிதியாண்டுக்கான தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பின் உறுப்பினர்கள் கணக்கில் இருக்கும் பணத்துக்கான வட்டி எப்போது வரவு வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
2025-26-ம் நிதியாண்டுக்கு பிஎஃப் கணக்குக்கான வட்டி 8.25% வழங்கப்படும் என்று மத்திய அரசு கடந்த 1-ம் தேதி அறிவித்தது. வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதே நிலைதான் தொடர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பிஎஃப் கணக்குக்கான வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
2020-21-ம் ஆண்டில் அதிகபட்சமாக ஆண்டுக்கு 8.50% வட்டி வழங்கப்பட்டது. அதன்பின் கொரோனா காலத்தில் வட்டி 8.10% ஆகக் குறைக்கப்பட்டு, 2022-ம் ஆண்டில் 8.15% என சற்று உயர்த்தப்பட்டு, 2023-ம் ஆண்டில் இருந்து 8.25 சதவீதமாகவே இருந்து வருகிறது.
பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்துக்கு ஏற்ப மாதத்துக்கு 0.688% வட்டி மாதந்தோறும் கணக்கிடப்படும். ஒவ்வொரு மாதமும் பிஎஃப் கணக்கில் இருக்கும் தொகைக்கு ஏற்ப வட்டி கணக்கிடப்பட்டு, நிதியாண்டு இறுதியான மார்ச் 31-ம்தேதி ஒட்டுமொத்தமாக, கணக்கில் ஆண்டுக்கு ஒருமுறை வட்டி வரவு வைக்கப்படும்.
பிஎஃப் கணக்குக்கு 2025-26-ம் ஆண்டுக்கான வட்டியை மத்திய அரசு வரவு வைக்கும்பட்சத்தில் ஏறக்குறைய 34 கோடி உறுப்பினர்கள் பயன்பெறுவார்கள்.
வட்டி எப்போது வரவு வைக்கப்படும்?
மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியது: “பிஎஃப் அமைப்பில் இருக்கும் 34 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு வட்டி ரூ.1.44 லட்சம் கோடி செலுத்தப்பட இருக்கிறோம். இந்த வட்டி வரும் 15-ம் தேதிக்குள் அவர்களின் பிஎஃப் கணக்கில் 8.25 சதவீத வட்டி வரவு வைக்கப்படும்.
உறுப்பினர்கள் அனைவரும் வரும் 15-ம் தேதிக்குள், தங்கள் பிஃஎப் வட்டித் தொகையை தங்கள் கணக்கில் பார்த்துக் கொள்ள முடியும். இதற்கு முன்பு, வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டால், அது முறைப்படி உறுப்பினர்கள் கணக்கில் வரவு வைக்க அக்டோபர் அல்லது நவம்பர் மாதமாகிவிடும். இப்போது அவ்வாறு இல்லை.
சிஐடிஇஎஸ் முறையை செயல்படுத்திபின், உறுப்பினர்கள் பிஎஃப் தளத்தை அணுகுவது எளிதாக இருக்கும். அதன் செயல்பாடு மேம்பட்டதாக இருக்கும். உறுப்பினர்களுக்கு வெளிப்படைத் தன்மையுடனும், விரைவாகவும் சேவைகள் கிடைக்கும்.
இந்த புதிய நவீன தொழில்நுட்ப செயல்பாட்டை நடைமுறைக்கு கொண்டுவந்து விட்டோம். இதன்படி பிஎஃப் கணக்கில் உள்ள உறுப்பினர்கள் அனைவரின் கணக்குகள், விவரங்கள் மையப்படுத்தப்பட்ட டேட்டாபேஸுக்குள் (தகவல் தொகுப்பு) கொண்டுவரப்பட்டுள்ளன.
இதன்படி பிஎஃப் உறுப்பினர் ஒருவர் நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த பிஎஃப் அலுவலகத்திலிருந்தும் தங்கள் கோரிக்கையை அனுப்பலாம். பிஎஃப் கணக்கிலிருந்து உறுப்பினர்கள் பணம் எடுக்கும் முறையை வகைப்படுத்தியுள்ளோம்.
அத்தியாவசியத் தேவை அதாவது நோய், கல்வி, திருமணம், வீடு கட்டுதல், வீட்டுத் தேவை, எதிர்பாரா சூழல் ஆகியவை என பிரித்துள்ளோம். பணம் எடுக்கும் செயல்முறையும் எளிதாக்கி, அனைவரும் புரியும் வகையில் மாற்றயிருக்கிறோம். பிஎஃப் இருப்புத் தொகையில் உறுப்பினர்கள் 75% வரை எடுக்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.
நீண்டகால சிக்கல்
பிஎஃப் அமைப்பில் சமீபத்தில் அதிநவீன தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு, உறுப்பினர்களுக்கு எளிதாக சேவை செய்ய, அனைத்தும் நவீனமாக்கப்பட்டது. இதற்காக மத்திய அரசு மையப்படுத்தப்பட்ட ஐடி சேவை (சிஐடிஇஎஸ்) திட்டத்தை செயல்படுத்தியது. இந்த சிஐடிஇஎஸ் திட்டத்தின் மூலம் பிஎஃப் உறுப்பினர் தன்னுடைய கணக்கை எளிதாக எங்கிருந்தும் இயக்க முடியும். உறுப்பினர்கள் தங்களின் பாஸ்புக் அப்டேட், கோரிக்கைகள், பணம் பெறுதல் உள்ளிட்டவற்றை எந்தவிதமான தடையும், தாமதமும் இன்றி விரைவாகப் பெறலாம்.
இதற்கு முன், ஒவ்வொரு பிரிவுக்கும், ஒவ்வொரு மண்டல அலுவலகம் என தனித்தனியாக பிஎஃப் தகவல் தளங்களுடன் பரவலாக்கப்பட்ட அமைப்பைக் கொண்டிருந்தது. பிஎஃப் உறுப்பினர்கள் ஒரு மண்டல அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒரு மண்டல பிஎஃப் அலுவலகத்துக்கு உட்பட்ட பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓர் உறுப்பினர் தன்னுடைய கணக்கில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது கோரிக்கைகளை தாக்கல் செய்யவோ தான் கணக்கு வைத்திருக்கும் அந்த குறிப்பிட்ட மண்டலத்துக்குத்தான் செல்ல வேண்டியிருந்தது.
உறுப்பினர் உயிரிழந்துவிட்டால் குடும்பத்தினர் பணப்பலன் பெறவும், பிற கோரிக்கைகளுக்காகவும், அந்தந்த மண்டல அலுவலகத்தைதான் நாட வேண்டிய இருந்தது. உறுப்பினர்களுக்கு ஒவ்வொருமுறையும் மண்டல அலுவலகம் செல்வது கடினமாக இருந்தது.
மாற்றங்கள் என்னென்ன?
ஆனால், தற்போது பிஎஃப் அமைப்பில் மையப்படுத்தப்பட்ட ஐடி சேவை மூலம், நாடு முழுவதும் ஒரே தகவல் தளம் என்ற கட்டமைப்பின் கீழ் வந்துள்ளது. இந்த சிஐடிஇஎஸ் மூலம், பிஎஃப் உறுப்பினர் தன்னுடைய கோரிக்கையை தாக்கல் செய்யவோ அல்லது எந்தவிதமான தேவைக்கோ குறிப்பிட்ட மண்டல அலுவலகத்துக்குத்தான் செல்ல வேண்டிய அவசியமில்லை. எந்த பிஎஃப் அலுவலகத்திலும் சென்று தங்களின் கோரிக்கையைத் தாக்கல் செய்து தெளிவு பெறலாம்.
கேஒய்சி (KYC) விவரங்களைப் புதுப்பித்தல், கணக்கில் உள்ள பணத்தை அறிதல், எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதை அறிதல், பாஸ்புக் அப்டேட் உள்ளிட்ட ஏராளமான சேவைகளை இந்த நவீன வசதி மூலம் இணையம் வழியாகவே பெறலாம். உறுப்பினர்கள் எப்போதும்போல, தங்களின் யுஏஎன் எண்ணைப் பயன்படுத்தியே அப்டேட்களை பார்க்கலாம்.
நவீனப்படுத்தப்பட்ட தளத்தின் மூலம், உறுப்பினர்கள் தங்கள் விவரங்கள், பிஎஃப் இருப்புத் தொகை, கோரிக்கையின் நிலை, ஓய்வூதியத்திற்குரிய பணிக்கால விவரங்கள் மற்றும் பணம் எடுத்த விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். இந்த தளத்தின் வாயிலாகவே உறுப்பினர்கள் தங்களின் கோரிக்கைகளை தாக்கல் செய்யலாம். கோரிக்கைகள் மீது அதிகாரிகள் எழுப்பும் கேள்விகளுக்கு மின்னணு முறையில் பதில் அளிக்கலாம். நேரடியாக அலுவலகம் செல்ல வேண்டிய தேவை குறைகிறது.
மேலும், பிஎஃப் உறுப்பினர்கள், கோரிக்கையை தாக்கல் செய்யும் போது ஏதேனும் தவறுகள் இருந்தால், அதில் உள்ள ஏஐ (AI) தொழில் நுட்பம் மூலம் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு சரிசெய்யப்படும். இதன்மூலம் உறுப்பினர்கள் தெளிவான தகவல்களை வழங்கி விரைவாக தீர்வு பெறலாம். உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து எடுக்கக் கூடிய தகுதியான தொகை, எவ்வளவு பணம் எடுக்கலாம், உறுப்பினர் உயிரிழப்புக்குப் பின் கிடைக்கும் பண விவரங்கள், எப்போது கிடைக்கும் போன்ற விவரங்களையும் அறியலாம்.