

மனதில் தோன்றும் கற்பனைகளை எல்லாராலும் அழகிய ஓவியங்களாக மாற்ற முடியுமா? முடியும் என்கிறது NightCafe Studio என்கிற செய்யறிவுத் தளம். வரைவதில் முன் அனுபவம் இல்லாதவர்கள்கூட எளிய கட்டளைகளைக் (Prompts) கொண்டு ஓவியங்களையும் புகைப்படங்களையும் சிறிய காணொளிகளையும் உருவாக்க இந்தத் தளம் உதவுகிறது.
ஒரே இடத்தில் பல மாதிரிகள்
GPT Image, Nano Banana, Flux, Ideogram, Seedream போன்ற பல்வேறு மாதிரிகளைப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பயனர்களுக்கு NightCafe Studio வழங்குகிறது. மேலும், Google Veo, Seedance, Kling போன்ற காணொளி உருவாக்க மாதிரிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இதனால் ஒரே விஷயத்தை வெவ்வேறு கலை வடிவங்களில் எளிதாக உருவாக்கிப் பார்க்க முடிகிறது.
ஒரே கதாபாத்திரம், பல காட்சிகள்
ஒரு கதாபாத்திரம் எல்லாக் காட்சிகளிலும் ஒரே தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே ‘Consistent Characters’ எனும் வசதி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரே கதாபாத்திரத்தை வெவ்வேறு சூழல்களில் இருக்குமாறு உருவாக்கலாம். சிறார் கதைகள், காமிக்ஸ், காட்சிவழிக் கதை சொல்லல் போன்றவற்றுக்குப் பெரிதும் உதவுகிறது. மேலும், ஏற்கெனவே உருவாக்கிய படங்களில் புதிய பொருள்களைச் சேர்ப்பது, பின்னணியை மாற்றுவது போன்ற திருத்தங்களையும் கட்டளைகள் மூலமே மேற்கொள்ளலாம்.
தினமும் ஒரு புதிய கலை சவால்
கலை ஆர்வலர்கள் ஒன்றிணையும் தளமாகச் செயல்படும் NightCafe Studio-வில் தினமும் வெவ்வேறு கருப்பொருள்களில் போட்டிகள் (Daily Challenges) நடத்தப்படுகின்றன. பயனர்கள் தங்கள் படைப்புகளைப் பகிரவும், பிறரது படைப்புகளைக் கண்டு ரசிக்கவும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் இவை வாய்ப்பளிக்கின்றன. மேலும், ‘Promptle’ எனகிற விளையாட்டில் கொடுக்கப்பட்ட படத்தைக் கட்டளைகள் மூலம் குறிப்பிட்ட விதத்தில் படமாக மாற்ற முயற்சி செய்யலாம். இது பயனர்களின் கட்டளை எழுதும் திறனை வளர்க்கிறது.
கட்டணமில்லாமல் கலைப்படைப்புகள்
நாள்தோறும் வழங்கப்படும் கட்டணமில்லாப் புள்ளிகளைப் (Free Daily Credits) பயன்படுத்தி படங்களை உருவாக்க முடியும். அதே நேரம், மேம்பட்ட மாதிரிகள், அதிகத் தெளிவுடைய படங்கள், காணொளி உருவாக்கம் போன்ற வசதிகளைப் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். பேனர்கள், கதாபாத்திரங்கள், கொடிகள், டாட்டூ வடிவமைப்புகள் போன்றவற்றை உருவாக்குவதற்கும் தனித்தனியான கருவிகள் இதிலுள்ளன.
தரத்தை மேம்படுத்தும் வசதி
பயனர் உருவாக்கிய படங்களை மேலும் தெளிவாக மாற்ற ‘Upscaling’ என்ற வசதி உள்ளது. இதன்மூலம் படங்களைத் தெளிவாக்கவும் அளவை அதிகரிக்கவும் முடியும். மேலும், உருவாக்கிய படங்களைத் தனிப்பட்ட தொகுப்புகளில் சேமித்தும் வைக்கலாம்.
ஏனைய செய்யறிவுத் தளங்களில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
பல்வேறு செய்யறிவு மாதிரிகளையும், கலை ஆர்வலர்களுக்குத் தேவையான வசதிகளையும் ஒரே இடத்தில் வழங்குவதுதான் NightCafe Studioவின் சிறப்பம்சம். ஒரே கட்டளையைப் பல மாதிரிகளில் பயன்படுத்தி, அவை உருவாக்கும் படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் வசதியும் இத்தளத்தில் உள்ளது. மேலும், அன்றாட கலைச் சவால்கள், விளையாட்டுகள் மூலம் கலை உருவாக்கத்தைத் தொடர்ச்சியான பழக்கமாக நாம் மாற்றிக்கொள்ள முடியும்.
யாருக்கெல்லாம் பயன்படும்?
ஓவியர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள், வடிவமைப்பாளர்கள் எனப் பலருக்கும் இத்தளம் பயன்தரும். குறிப்பாக, ஆசிரியர்கள் பாடங்களுக்கான காட்சிகளை உருவாக்கவும், எழுத்தாளர்கள் கதாபாத்திரங்களை வடிவமைக்கவும், மாணவர்கள் தங்கள் கற்பனைகளுக்குக் காட்சி வடிவம் கொடுக்கவும் இத்தளத்தைப் பயன்படுத்தலாம். செய்யறிவையும் மனிதப் படைப்பாற்றலையும் இணைக்கும் NightCafe Studio, கலை உருவாக்கத்தை மேலும் எளிமையானதாகவும் சுவாரசியமானதாகவும் மாற்றுகிறது.
இணையத்தளம்: https://nightcafe.studio
எடுத்துக்காட்டாக ஒரு கட்டளை:
A vibrant futuristic classroom filled with enthusiastic students, friendly AI robots, glowing holograms, floating books, colorful planets, and creative technology. Bright neon blue, purple, pink, yellow, and green colors. Magical lighting, stunning 3D animation, energetic atmosphere, inspiring educational adventure.
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.