இணை​ய​வழிக் கல்​விக் கருவியை நாமே உருவாக்​கலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 33

இணை​ய​வழிக் கல்​விக் கருவியை நாமே உருவாக்​கலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 33
Updated on: 
2 min read

செய்​யறிவு மாதி​ரி​களை உரு​வாக்​கு​வதற்கு நிரலாக்க அறிவு அவசி​யம் என நினைக்​கிறீர்​களா? ஒரு வரி நிரல்​கூட எழுதாமல் நமக்​கென ஓர் இயந்​திரக்​கற்​றல் மாதி​ரியை உரு​வாக்​கிக்​கொள்ள முடியும். அதற்கு கூகுள் உரு​வாக்​கிய ‘Teachable Machine’ என்​கிற கட்​ட​ணமில்லா இணை​ய​வழிக் கருவி துணைபுரி​கிறது.

இணைய உலா​வி​யிலேயே (Web Browser) செயல்​படும் இந்​தக் கருவி, TensorFlow, பரிமாற்​றக் கற்​றல் (Transfer Learning) நுட்​பங்​களைப் பயன்​படுத்​திப் படங்​கள், ஒலிகள், உடல் தோரணையை அடை​யாளம் காணும் மாதி​ரி​களை எளிதாக உரு​வாக்​கப் பயனர்​களுக்கு உதவு​கிறது.

படங்​களை அடை​யாளம் காணுதல் (Image Project)

கணி​னி​யில் இருக்​கும் கேம​ராவையோ ஏற்​கெனவே எடுக்​கப்​பட்ட புகைப்​படங்​களையோ பயன்​படுத்தி வெவ்​வேறு பொருள்​களை அடை​யாளம் காணும் மாதி​ரியை உரு​வாக்​கலாம். உதா​ரண​மாகப் பழுத்த, பழுக்​காத வாழைப்​பழங்​களின் படங்​களை வழங்கி, அவற்றை வேறு​படுத்​திக் கண்​டறிவதற்​கான பயிற்​சி​யைக் கணி​னிக்கு அளிக்​கலாம்.

ஒலிகளை வகைப்​படுத்​து​தல் (Audio Project)

மைக்ரோஃபோன் மூலம் கைதட்​டல், விசில், இரைச்​சல் போன்ற ஒலிகளைப் பதிவுசெய்து, அவற்றை அடை​யாளம் காணும் மாதி​ரி​களை உரு​வாக்​கலாம். இதன்​மூலம் ஒலி அடிப்​படை​யில் இயங்​கும் எளிய செயலிகளை வடிவ​மைக்க முடியும்.

உடல் தோரணைகளைக் கண்​டறிதல் (Pose Project)

கேமரா முன் நின்று கைகளை உயர்த்​து​வது, நேராக நிற்​பது போன்ற உடல் தோரணைகளைக் காட்டி, செய்​யறிவு மாதி​ரிக்​குப் பயிற்சி அளிக்​கலாம். இந்த முறையைப் பயன்​படுத்தி உடல் அசைவு​களால் கட்​டுப்​படுத்​தப்​படும் விளை​யாட்​டுகளைக்​கூட உரு​வாக்க முடியும்.

எளிய படி​நிலைகளில் செய்​யறிவு மாதிரி

இந்​தக் கருவி கீழ்க்​கண்ட படி​நிலைகளில் செயல்​பட்டு மாதி​ரி​களைப் பயனர்​களுக்கு வழங்​கு​கிறது.

Gather (தரவு சேகரிப்பு): முதலில் அடை​யாளம் காணவேண்​டிய படங்​கள், ஒலிகள், உடல் தோரணைகளின் எடுத்​துக்​காட்​டுத் தரவுகளைச் சேகரித்து, தனித்​தனி வகைகளாகப் பிரித்​தல்.

Train (மாதி​ரிக்​குப் பயிற்சி அளிப்​பது): அந்​தத் தரவு​களைக் கொண்டு மாதி​ரிக்​குப் பயிற்சி அளித்​தல். பிறகு, பயிற்சி முடிந்​ததும் புதிய தரவு​களை வழங்கி அதன் செயல்​பாட்​டைச் சோதித்​தல்.

Export (மாதி​ரியைப் பயன்​படுத்​து​வது): உரு​வாக்​கப்​பட்ட மாதி​ரியைப் பதி​விறக்​கம் செய்தோ, இணை​யத்​தில் பதிவேற்​றம் செய்தோ பயன்​படுத்​து​தல்.

தனியுரிமையும் தொழில்​நுட்ப ஒருங்​கிணைப்​பும்

வெப்​கேம், மைக்ரோஃபோன் மூலம் சேகரிக்​கப்​படும் தரவு​கள் புற சேவையகங்​களுக்​குச் செல்​லாமல், இணைய உலா​வி​யிலேயே பயிற்​சியை மேற்​கொள்ள முடியும். ஆயினும், கூகுள் டிரைவில் சேமிக்​கும்​போதோ மாதி​ரியை இணை​யத்​தில் பதிவேற்​றும்​போதோ தொடர்​புடைய தரவு​கள் சேவையகங்​களுக்​குச் செல்​லக்​கூடும்.

உரு​வாக்​கப்​பட்ட மாதி​ரி​களை TensorFlow.js, p5.js, Node.js போன்ற மென்​பொருள் தொழில்​நுட்​பங்​களு​டனும், Arduino, Google Coral போன்ற வன்​பொருள் சார்ந்த தளங்​களு​டனும் இணைத்​துப் பயன்​படுத்த முடியும்.

திட்​டங்​களைச் சேமித்​தல்

உரு​வாக்​கப்​படும் திட்​டங்​களை கூகுள் டிரைவ் அல்​லது சொந்​தக் கணி​னி​யில் சேமித்து வைக்​கலாம். பின்​னர் அவற்றை மீண்​டும் திறந்து பயிற்​சித் தரவு​களை மாற்​றவும், புதிய வகைகளைச் சேர்க்​கவும், மாதி​ரியை மறு​பயிற்சி செய்​ய​வும் முடியும். இதன் வழியே ஏற்​கெனவே உரு​வாக்​கிய திட்​டத்​தைத் தொடர்ந்து மேம்​படுத்த முடி​கிறது.

பிற கரு​வி​களில் இருந்து இது எவ்​வாறு வேறு​படு​கிறது?

பைத்​தன் போன்ற வழக்​க​மான மென்​பொருள்​களு​டன் ஒப்​பிடும்​போது, Teachable Machine கரு​வியால் நிரலாக்​கமின்றி செய்​யறிவு மாதி​ரி​களை உரு​வாக்க முடி​கிறது. இருப்​பினும், சிக்​கலான ஆய்​வு​களுக்​கும், பெரிய தரவுத்​தொகுப்​பு​களுக்​கும் இதைவிட மேம்​பட்ட கரு​வி​கள் தேவை என்​பதை ஞாபகத்​தில் கொள்​வது அவ​சி​யம்.

யாருக்​குப் பயன்​படும்?

மாணவர்​கள், ஆசி​ரியர்​கள், செய்​யறி​வுத் தொழில்​நுட்​பத்​தைப் புதிதாகக் கற்​பவர்​களுக்கு இது பயனுள்ள கரு​வியாக இருக்​கும். குறிப்​பாக, வகுப்​பறை​யில் இயந்​திரக்​கற்​றலைச் செயல்​வழி​யில் கற்​பிக்க விரும்​பும் ஆசி​ரியர்​களுக்கு இந்​தக் கருவி உற்ற துணைவனாக விளங்​கு​கிறது.

செய்​யறிவு எப்​படிக் கற்​றுக்​கொள்​கிறது? எவ்​வாறு செயல்​படு​கிறது? என்​பதை அறிய விரும்​புவோருக்கு Teachable Machine நல்​லதொரு தொடக்​க​மாக இருக்​கும். இணை​யத்​தளம்: https://teachablemachine.withgoogle.com/

செய்​யறிவு விதி: ரகசிய கட​வுச்​சொற்​களை​யும், API விசைகளை​யும் (API Keys) செய்​யறி​வுத் தளங்​களில் பதிவேற்​று​வதைத் தவிருங்​கள். ரகசி​யக் கோப்​பு​களை எப்​போதும் பாது​காப்​பாக வைத்​துக்​கொள்​ளுங்​கள். மாறாக, இவற்​றில் அலட்​சி​யம் காட்​டினால் பெரிய ஆபத்​தில் சிக்​கிக்​கொள்​வீர்​கள். செய்​யறிவு உல​கில் கவனம் மட்​டுமே உங்களைக் காக்கும்.

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்​நுட்ப எழுத்​தாளர்.

இணை​ய​வழிக் கல்​விக் கருவியை நாமே உருவாக்​கலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 33
நாமே இணையத்தளத்தை வடிவமைக்கலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 32

X