

இன்றைய டிஜிட்டல் உலகில் நிரலாக்கம் (Coding), ரோபோடிக்ஸ் (Robotics), செய்யறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்பங்களைச் சிறு வயதிலேயே கற்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், ஆரம்பநிலை மாணவர்கள் பைதன் (Python) போன்ற மொழிகளைக் கற்பதில் சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்தச் சவாலுக்கான சிறந்த தீர்வை வழங்கி, குழந்தைகளும் மாணவர்களும் விளையாட்டாகவே கோடிங் கற்றுக்கொள்ள உதவும் முன்னணி கல்வி தளம்தான் PictoBlox AI.
ஸ்கிராட்ச் (Scratch) போன்ற எளிய பிளாக்-அமைப்பிலான நிரலாக்க முறையையும் (Block-based Coding), செய்யறிவுத் தொழில்நுட்பங்களையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கருவி, மாணவர்கள் தாங்களே சொந்தமாக விளையாட்டுகளையும் ரோபாட்களையும் வடிவமைக்க உதவுகிறது.
பிளாக்-பேஸ்டு பைதன் கோடிங் (Block & Python Coding):
PictoBlox தளத்தில் உள்ள வண்ணமயமான கட்டிகளை (Blocks) ஒன்றிணைப்பதன் மூலம் நிரலாக்கத்தைக் கற்றுக்கொள்ளலாம். ஓரளவுக்குத் தேர்ச்சிபெற்ற பிறகு, ஒரே கிளிக்கில் அந்த பிளாக்குகளை நேரடியாக பைதன் (Python) குறியீடுகளாக மாற்றிப் பார்க்கலாம். இது ஆரம்ப நிலையில் இருந்து உயர்தர நிரலாக்கக் கல்வி நிலைக்குச் செல்ல உதவும் பாலம்போல் அமைந்துள்ளது.
செய்யறிவும் இயந்திரக் கற்றலும் (AI & Machine Learning Extensions):
இந்தக் கருவியில் செய்யறிவு, இயந்திரக் கற்றல் அம்சங்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் கணினியின் மூலமாகப் படங்களைப் பயிற்சி செய்து (Train Models), முகம் (Face), சைகை (Gesture) ஆகியவற்றை வகைப்படுத்ததுதல், பொருள்களைக் கண்டறிதல், குரல் உணர்தல் உள்ளிட்ட செய்யறிவு சார்ந்த திட்டங்களை எளிதாகச் செய்துபார்க்க முடியும்.
ரோபோடிக்ஸும் ஹார்ட்வேர் ஒருங்கிணைப்பும் (Robotics & Hardware Integration):
PictoBlox தளத்தை வெறும் கணினித்திரையுடன் சுருக்கிவிடாமல், Arduino, ESP32 உள்ளிட்ட பல்வேறு STEM வன்பொருட்களுடனும் இணைக்க முடியும். மாணவர்கள் எழுதும் குறியீடுகள் வழியே நிஜ உலக ரோபாட்களையும் சென்சார்களையும் கட்டுப்படுத்திப் பார்க்க இயலும் என்பதால் அவர்களின் ஆர்வம் பல மடங்கு அதிகரிக்கிறது.
கிளவுட் அடிப்படையிலான வகுப்பறை மேலாண்மை (Cloud LMS for Educators):
ஆசிரியர்களுக்கென பிரத்யேகமான ‘PictoBlox Classroom’ வசதி உள்ளது. இதன் மூலம் மாணவர்களின் திட்டப்பணிகளை மதிப்பீடு செய்யவும், வீட்டுப்பாடங்களை வழங்கவும், மாணவர்களின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும்.
ஆக்கமுறை செய்யறிவும் ஊடாடும் அம்சங்களும் (Generative AI & Interactive Features):
அரட்டைச் செயலிகளையும் (Chatbots), புகைப்படங்களையும் உருவாக்கும் கருவிகளை மாணவர்களே வடிவமைக்க உதவும் ஆக்கமுறை செய்யறிவு அம்சங்களும் இதில் உள்ளன.
ஆக்மென்டெட் ரியாலிட்டியும் IoT ஒருங்கிணைப்பும் (AR & IoT Integration):
ஆக்மென்டெட் ரியாலிட்டி (AR), ஐஓடி (IoT) கருவிகளுடன் இணைத்துக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இதனால் மாணவர்கள் தங்கள் டிஜிட்டல் படைப்புகளை நிஜ உலகச் சூழலுடன் நேரடியாக இணைத்துச் சோதித்துப் பார்க்கலாம்.
பிற செய்யறிவுக் கருவிகளில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
Scratch போன்றவை எளிய விளையாட்டுகளை மட்டுமே வடிவமைக்க உதவுகின்றன. PictoBlox AI தளமோ நிரலாக்க முறைகளோடு இயந்திரக் கற்றல், IoT, ரோபோடிக்ஸ் உள்ளிட்டவற்றையும் ஒரே இடத்தில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.
யாருக்கு இது மிகவும் பயன்படும்?
பள்ளி மாணவர்கள், STEM கல்வி பயிற்றுநர்கள், கணினி அறிவியல் ஆசிரியர்கள், சிறு வயது முதலே தொழில்நுட்பக் கல்வியில் ஆர்வம் கொண்ட குழந்தைகள்.
குழந்தைகளின் ஆர்வத்தைச் செய்யறிவின் துணையுடன் படைப்புகளாக மாற்றியமைக்க உதவுவதில் PictoBlox AI-இன் பங்கு அளப்பரியது. https://pictoblox.ai/
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.16