

செயற்கை நுண்ணறிவு உலகில், சிக்கலான தொழில்நுட்பங்களைவிட மனிதர்களின் மன உளைச்சலையும் பணிச்சுமையையும் நேரடியாகக் குறைக்கும் எளிய கருவிகளே மிகப்பெரிய வரவேற்பைப் பெறுகின்றன.
அன்றாட வாழ்க்கையிலும் அலுவலகத்திலும் திட்டமிடுதலின் (Planning) அவசியம் என்ன என்பதை நாம் அறிவோம். சரியான திட்டமிடல் இருந்தாலே எடுத்துக்கொண்ட பணி முக்கால் பங்கு முடிந்ததுபோல்தான். ஆனால், நாம் அனைவருமே திட்டமிடுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளவே செய்கிறோம். குறிப்பாக, புதியதொரு திட்டத்தைத் தொடங்கும்போது, ‘இதை எங்கு தொடங்குவது, எப்படி முழுமையாக்கி முடிப்பது?’ என்கிற பதற்றம் நமக்கு ஏற்படும்.
மேலும், கவனச் சிதறல் சவால் (ADHD), மனக்கவலை (Anxiety), நரம்பியல் தொடர்பாக மாறுபட்ட பண்புகள் (Neurodivergent) கொண்ட மாணவர்களும், அதிக பணிச்சுமையால் திணறும் ஆசிரியர்களும், தொழில்முறை நிபுணர்களும் திட்டமிடுதல் சார்ந்த பல்வேறு சவால்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கின்றனர். இந்தச் சிக்கலுக்கு மிக எளிமையான, வியப்பளிக்கும் தீர்வுகளை அளிக்கிறது ‘Goblin Tools’ என்னும் செய்யறிவுத்தளம்.
மிகப் பிரபலமாக இருக்கும் சாட்ஜிபிடி (ChatGPT), கிளாட் (Claude) போல நீண்ட கட்டுரைகளை எழுதுவதோ வண்ணமயமான படங்களை உருவாக்குவதோ இந்தத் தளத்தின் நோக்கமல்ல. மாறாக, பெரியதொரு சவாலான வேலையை, எளிதில் செய்யக்கூடிய சிறுசிறு நடைமுறைப் படிகளாகப் பிரித்துத் தருவதே இதன் முதன்மைச் சிறப்பு.
பெரிய இலக்குகளைச் சிறிய படிகளாக மாற்றும் - ‘Magic ToDo’ ‘கட்டுரை ஒன்றை எழுத வேண்டும்’ என்றோ, ‘அலுவலக அறையைச் சீரமைக்க வேண்டும்’ என்றோ நாம் இந்தத் தளத்தில் உள்ளிட்டால், இதன் ‘Magic ToDo’ அம்சம் அந்தப் பெரிய இலக்கை 5 முதல் 10 எளிய படிநிலைகளாகத் தானாகவே உடைத்துத் தருகிறது. இதில் உள்ள ‘Spicy Level’ (மிளகாய்க் குறியீடு) வசதியின் மூலம், ஒரு வேலையை எந்த அளவுக்கு நுணுக்கமான சிறிய படிகளாகப் பிரிக்க வேண்டும் என்பதையும் நாமே தேர்வுசெய்ய முடியும்.
நேரத்தைக் கணித்து வேலையை ஒழுங்கமைக்கும் - ‘Estimator’ - ‘Compiler’ – ‘Taskmaster’ இதன் ‘Estimator’ அம்சம் நாம் செய்ய வேண்டிய ஒவ்வொரு சிறிய வேலைக்கும் தோராயமாக எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பதைக் கணித்துக் கூறுகிறது. ‘Compiler’ அம்சம் நம் மனதில் தோன்றும் எண்ணங்களையும் குழப்பமான குறிப்புகளையும், வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலாக (To-Do List) மாற்றித் தருகிறது. இதில் இருக்கும் ‘Taskmaster’ வசதி ஒவ்வொரு வேலையையும் எப்போது ஆரம்பித்து எப்போதைக்கு முடிக்கிறோம், இன்னும் எவ்வளவு நேரம் எஞ்சியுள்ளது என்பதைக் கூறுகிறது.
உரையாடலையும் தொனியையும் மேலாண்மை செய்யும் - ‘Formalizer’ & ‘Judge’ இதன் ‘Formalizer’ என்கிற அம்சம் நாம் அவசரத்தில் எழுதும் சாதாரண சொற்றொடர்களை, தொழில்முறை சார்ந்த (Professional), கனிவான, பொருத்தமிகு வரிகளாக மாற்றித்தருகிறது. அதேபோல, ‘Judge’ எனும் அம்சம் நாம் எழுதிய மின்னஞ்சல், தகவலின் தொனி (Tone) சரியாக இருக்கிறதா, அது வாசிப்பவருக்கு எவ்வாறு போய்ச்சேரும் என்பதைப் பகுப்பாய்வு செய்து வழிகாட்டுகிறது. பெரிய இலக்குகளைக் கண்டு மலைத்து நிற்காமல், சிறுசிறுபடிகளாக அவற்றை மாற்றுவதன் மூலம் விரைந்து இலக்கை அடைவதே Goblin Tools நமக்கு அளிக்கும் முக்கிய நன்மை.
யாருக்கு இது மிகவும் பயன்படும்? - ஆசிரியர்கள், சிறப்புக் கல்வியாளர்கள் (Special Educators), சிகிச்சையாளர்கள் (Therapists), மனநல ஆலோசகர்கள், மாணவர்கள், ஒரே நேரத்தில் பல பொறுப்புகளைக் கையாளும் எவருக்கும் இந்தக் கருவி சிறந்ததொரு எண்ணிலக்க (Digital) உதவியாளராக இருக்கும். https://goblin.tools/
| மேலும் கற்கலாம்... |
- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்