

கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்த ஏஐ (AI) நிறுவனத்தில் தனது தந்தையையே மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தி அழகு பார்க்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
‘ஏஐ சிறுவன்’ என்று அறியப்படும் ரவுல் ஜான் 12-ஆம் வகுப்பு வணிகவியல் படித்துக்கொண்டே அசுர சாதனை நிகழ்த்தியுள்ளார். 15-க்கும் மேற்பட்ட பயனுள்ள ஏஐ செயலிகளின் உருவாக்கம், சொந்தமாக ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம், 15 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு, 3 டெட்எக்ஸ் (TEDx) உரைகள், ஐநா பொதுச் செயலாளரின் பாராட்டு எனப் பல சாதனைகளை இவர் படைத்துள்ளார்.
ரீல்ஸ்களிலும் கேம்களிலும் நேரத்தை வீணடிக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், ஸ்மார்ட்போன் மூலம் செயற்கை நுண்ணறிவு உலகையே ஆளும் ரவுலின் ஊக்கமளிக்கும் கதையைப் விரிவாகப் பார்ப்போம்.
இளமையும் கல்வியும்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 2007-ஆம் ஆண்டு பிறந்தவர் ரவுல் ஜான் அஜு. எர்ணாகுளம் இடைப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்போது 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். எவ்வித முறையான கணினி பயிற்சியும் இன்றி, தனது 9-ஆவது வயதிலேயே சுய கற்றல் மற்றும் இணையத் தேடல்கள் மூலம் ஏஐ மற்றும் கோடிங் நுட்பங்களை தானே படிக்கத் தொடங்கினார்.
இவரது தந்தை அஜு ஜோசப் அமேசான், அடோப், விப்ரோ, ஐபிஎம் போன்ற முன்னணி ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய மூத்த தொழில்நுட்ப வல்லுநர். தந்தை அடோப் நிறுவனத்தில் பணியாற்றியபோது கிடைத்த பிரீமியம் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தும் உரிமையை ரவுலுக்கு அளித்தார். இதுதான் ரவுலின் ஏஐ பயணத்துக்கு மிகப் பெரிய தூண்டுகோலாக அமைந்தது.
12 வயதில் செய்த சாதனை
தனது 12-ஆவது வயதிலேயே ரவுல் பள்ளியின் அறிவியல் கண்காட்சிக்காக ‘மீபோட்’ (MeBot) என்ற மனித ரோபோவை உருவாக்கி, அதை இயக்கி அனைவரையும் அசத்தினார். தொடர்ந்து தனது சுய கற்றல் மூலம், சட்ட உதவிக்கான ‘நியாயசதி’ (NyayaSathi), அவசரக்கால வழிகாட்டியான ‘ரெஸ்க்யூ ஏஐ’ (RESQ AI), ZapGap, Investo AI என 15-க்கும் மேற்பட்ட சமூகப் பயன்பாடு மிக்க செயலிகளை ரவுல் உருவாக்கி அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தார்.
ரவுலுக்கு 12 வயதாக இருந்தபோது, பிரபல ‘வொயிட்ஹேட் ஜூஆர்’ (WhiteHat Jr) ஆன்லைன் நிறுவனத்தில் கோடிங் ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பித்தார். நேர்காணல் செய்த அதிகாரிகள் இவ்வளவு சிறிய பையன் எப்படிப் பாடம் எடுப்பான் என வியந்தனர். ஆனால் இவரது கோடிங் திறமையைப் பார்த்து மெய்சிலிர்த்து, அவருக்கு ‘யங் பயனீர் அவார்ட்’ (Young Pioneer Award) விருதை வழங்கி கவுரவித்தனர்.
சொந்த நிறுவனத்தில் தந்தைக்கு வேலை!
ரவுலின் ஆர்வம் மற்றும் செயலிகளின் கண்டுபிடிப்பைப் பார்த்த பின், ‘AI Realm Technologies’ என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தந்தை தொடங்கினார். இதன் நிறுவனராகவும் தலைவராகவும் ரவுல் செயல்பட்டு வருகிறார். இதில் 15 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ரவுல் தனது தந்தை அஜு ஜோசப்புக்கு நிறுவனத்தில் வேலை வழங்கி மாத ஊதியமாக ரூ.2 லட்சம் வழங்குகிறார்.
தந்தையை வேலைக்கு அமர்த்தியது குறித்துப் கேட்டபோது, “தொழில்நுட்பத்தை நான் கைபேசியில் கற்றுக்கொள்ள முடியும், ஆனால் பெருநிறுவனங்களை நிர்வகிக்கும் அனுபவம் என் தந்தையிடம் மட்டுமே உள்ளது. அவர் எனது நிறுவனத்துக்கு சிறந்த முறையில் வழிகாட்டியாக இருந்து வருகிறார்” என்று முதிர்ச்சியுடன் பதில் அளித்தார்.
பயிற்சியாளராகவும் சர்வதேச அங்கீகாரம்
ரவுல் தான் தொடங்கிய ‘திங்க்கிராஃப்ட் அகாடெமி’ மூலம் உலகளவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும், ஐஐடி, ஐஐஎம் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் ஊழியர்களுக்கும் ஏஐ குறித்துப் பயிற்சி அளித்துள்ளார். பொதுவாக பெரியவர்கள் பேசத் தயங்கும் TEDx சர்வதேச மேடையில் தனது 15 வயதிற்குள் 3 முறை சிறப்புப் பேச்சாளராகப் பங்கேற்றுப் பேசியுள்ளார்.
ரவுலின் சாதனைகளைக் கேள்விப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், இவரை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்தார். சந்திப்பில் “எதிர்காலத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்கு ஏஐ தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்” என்ற திட்டத்தை ரவுல் விளக்கினார். இதைக் கேட்ட குத்தேரஸும் ஐநா அதிகாரிகளும் பாராட்டித் தள்ளினர்.
ஏன் வணிகவியல் பாடம்?
கணினிப் பிரிவில் இத்தகைய ஆர்வம் இருந்தும், ரவுல் 12-ஆம் வகுப்பில் கணினி அறிவியலை எடுக்காமல் வணிகவியலைத் தேர்ந்தெடுத்துப் படித்து வருகிறார். இது குறித்துக் கேட்டபோது, “ஏஐ நுட்பங்களை இணையம் வழியே சுயமாகவே கற்கலாம். ஆனால், ஒரு தொழிலை எப்படி நடத்துவது என்பதைப் புரிந்துகொள்ள வணிகவியல் படிப்பதே சிறந்தது” என்று கூறி வியப்பில் ஆழ்த்தினார். சமூக வலைதளங்களில் “Raul the Rockstar” (@raul_the_rockstar) என்ற பெயரில் இவருக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.
ரவுல் வாழ்க்கை சொல்லும் செய்தி
வயது என்பது ஒரு எண் மட்டுமே. திறமைக்கும் சாதனைகளுக்கும் வயது தடையில்லை என்பதை ரவுலின் வாழ்க்கை நிரூபித்துள்ளது. தொழில்நுட்பத்தைப் பொழுதுபோக்காகப் பயன்படுத்தாமல், “இதை வைத்து என்ன செய்ய முடியும்?” என்ற படைப்புச் சிந்தனைதான் அவரை வெற்றியாளராக்கியது.
இன்றைய குழந்தைகள், பதின்வயதினர் மற்றும் இளைஞர்கள் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களை வெறும் ரீல்ஸ் பார்ப்பதற்கும் ஆன்லைன் கேம்கள் விளையாடுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் மதிப்பெண்களுக்காகவும் தேர்வுக்காகவும் மட்டுமே பெற்றோராலும் பள்ளி நிர்வாகத்தாலும் பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.
பள்ளிப் பாடங்களைத் தாண்டி இணையத்தில் உள்ள இலவசக் பயிற்சிகள் மூலம் புதிய விஷயங்களைக் கற்கலாம். இவற்றை மேம்போக்காகப் படிக்காமல், சிறு சிறு திட்டங்களைச் சொந்தமாகச் செய்து பார்க்கும்போது நிச்சயமாகத் தன்னம்பிக்கையும் திறமையும் வளரும்.
மனப்பாடக் கல்வியையும் மதிப்பெண்களையும் தாண்டிச் சுயமாகப் புதிய விஷயங்களைக் கற்பதும், தோல்விகளைக் கண்டு பயப்படாமல் முயற்சியைத் தொடர்வதும் மட்டுமே ரவுல் போன்ற பெரிய உயரத்தை அடையச் செய்யும்!