மாறிய யூடியூப் ‘அல்காரிதம்’ - அதிக வியூஸ், வருமானம் பெற என்ன வழி?

மாறிய யூடியூப் ‘அல்காரிதம்’ - அதிக வியூஸ், வருமானம் பெற என்ன வழி?
Updated on
3 min read

எவ்வளவு முயன்றும் உங்கள் யூடியூப் வீடியோக்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை (Got more Views) உயரவில்லையா? வருமானம் வரவில்லையா?

ஆனால், இனிமேல் உங்கள் வீடியோக்களின் பார்வைகள் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும். யூடியூப் நிறுவனம் தனது வியூஸ்களைக் கணக்கிடும் முறையில் (YouTube Algorithm Change) மிகப் பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது.

 இந்த புதிய நடைமுறை ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 24-ம் தேதிக்குப் பிறகு பதிவேற்றம் செய்யப்படும் புதிய வீடியோக்களுக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும். அதற்கு முன்பு பதிவேற்றப்பட்ட பழைய வீடியோக்களுக்கு இந்த புதிய கணக்கீட்டு முறை பொருந்தாது.

கன்டென்ட் கிரியேட்டர்களின் உழைப்புக்கு ஏற்ற பலனை அதிவேகமாக வழங்க யூடியூப் நிறுவனம் எடுத்துள்ள இந்த புதிய முயற்சி, சேனல்களில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது, அதிக வருமானம் (YouTube Monetization) ஈட்ட மாற்றம் செய்ய வேண்டிய யுக்திகள் என்னென்ன ( Increase YouTube Views and Revenue) என்பது குறித்து சற்று தெளிவாகப் பார்க்கலாம்.

யூடியூப் புதிய விதிகளும் விளக்கமும்

புதிய மாற்றத்தின்படி (YouTube New Rules) ‘ஒரு வீடியோவின் வியூ என்பது அது ஓடத் தொடங்கும் கணத்தில் இருந்தே கணக்கிடப்படும். இந்த மாற்றம், அனைத்து வடிவங்களிலும் வியூஸ் கணக்கை ஒரே சீராக்கி, கன்டென்ட் கிரியேட்டர்கள் தங்களின் ஒட்டுமொத்தப் பரவலை நன்கு புரிந்துகொள்ள உதவும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஒரு வீடியோ குறைந்தபட்சம் 30 வினாடிகள் பார்க்க வேண்டும் என்ற விதி இருந்தது. 30 வினாடிகள் கூட பார்க்கப்படாத வீடியோக்கள் வியூஸாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

வழக்கமாக, புதிய வீடியோக்களுக்கு 301 வியூஸ் வந்தவுடன், அவை போலியானவையா என்று ஆய்வு செய்யப் பார்வைகளின் எண்ணிக்கை சில மணி நேரங்கள் முடக்கப்படும். இனிமேல்  இந்த நடைமுறை கிடையாது. வீடியோ ஓடத் தொடங்கியவுடன் பார்வையாளர் ஒரு ‘ஃப்ரேம்’ பார்த்தால்கூட, அது ஒரு ‘வியூ’ எனக் கணக்கிடப்படும். அதாவது ஷார்ட்ஸ் வீடியோக்களிலும், இன்ஸ்டாகிராமிலும் பின்பற்றப்படும் விதியே யூடியூபிலும் பின்பற்றப்படும்.

இந்த புதிய விதி உலகம் முழுவதும் உள்ள நீண்ட வீடியோக்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் நேரலைகளுக்கும் பொருந்தும். இதன்படி, ஒரு பார்வையாளர் யூடியூப் செயலி அல்லது இணையதளத்தைச் ஸ்க்ரோல் செய்யும்போதும், வீடியோவைக் கிளிக் செய்யாமல் அதன் ‘ஆட்டோ-ப்ளே’ காட்சியைக் கண்டாலே ஒரு ‘வியூ’ எனக் கணக்கிடப்படும். பழைய அளவீடு ‘தொடர்ந்து பார்க்கும் பார்வையாளர்கள்’ எனப் பெயர் மாற்றப்பட்டு, அனலிட்டிக்ஸ் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மாற்றம் ஏன்?

யூடியூப் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ‘வெவ்வேறு தளங்களில் பார்வையாளர்களைக் கணக்கிடுவதில் பல முறைகள் இருந்ததால் குழப்பங்கள் ஏற்பட்டன. இவற்றைக் களைந்து, கன்டென்ட் கிரியேட்டர்கள் தங்களின் உண்மையான வீச்சை அறிந்துகொள்ள உதவவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வியூஸ் எண்ணிக்கை ஒரே சீராக இருக்கும்.

மேலும், 2027-ம் ஆண்டு பிப்ரவரி முதல்,‘யூடியூப் பார்ட்னர் புரோகிராமில்’ (YPP) புதிதாக இணைய விண்ணப்பம் செய்பவர்களுக்கான ‘வாட்ச்-ஹவர்’ மற்றும் ‘ஷார்ட்ஸ்-வியூ’ வரம்புகளை யூடியூப் இரண்டு மடங்காக மாற்ற இருக்கிறது. அதாவது, வீடியோ பார்க்கப்பட்ட நேர வரம்பு இப்போதுள்ள 4,000 மணி நேரத்தில் இருந்து 8,000 மணி நேரமாகவும், ஷார்ட்ஸ் வீடியோக்களின் வியூஸ் 10 மில்லியனில் இருந்து 20 மில்லியனாகவும் உயரும்’ எனத் தெரிவித்துள்ளது.

வருவாய் பாதிக்கப்படுமா?

பார்வைகளைக் கணக்கிடும் முறையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வருவாயில் நேரடித் தாக்கம் இருக்காது. புதிய விதியின் கீழ் வியூஸ் அதிகமாக இருந்தாலும், அந்த வீடியோவில் விளம்பரம் வந்தால் மட்டுமே வருமானம் கிடைக்கும்.

ஊதிய முறை முன்பு இருந்தது போல ‘பார்க்கப்பட்ட நேரம் மற்றும் எங்கேஜ்மென்ட்’ அடிப்படையிலேயே கணக்கிடப்படும். இன்லைன் ப்ளேபேக் மூலமாக வரும் வியூஸ்களில் விளம்பரம் வரவில்லை என்றால், வருவாய் சற்று குறையலாம். ஆனால், வீடியோ அதிக நபர்களுக்குப் பகிரப்படும்போது ஒட்டுமொத்த வருமானம் உயரும்.

அதிக வியூஸ் பெறுவது எப்படி?

நேரடித் தொடக்கம்:

சலிப்பூட்டும் நீண்ட அறிமுகங்களைத் தவிர்த்து, நேரடியாக விஷயத்துக்கு வந்து பார்வையாளர்களைத் தக்கவைக்க வேண்டும்.

காட்சி மாற்றம்:

ஒரே கோணத்தில் பேசாமல், 10 அல்லது 15 வினாடிகளுக்கு ஒருமுறை காட்சிகளையும் குரல் ஏற்ற இறக்கங்களையும் மாற்ற வேண்டும். அவ்வப்போது ஸ்பெஷல் எபெக்ட்ஸ் வழங்கலாம்.

பார்வை நேரம்:

வீடியோவின் சாராம்சத்தை எடுத்தவுடனேயே கூறாமல் கடைசி வரை அதன் சுவாரசியத்தை இழுக்க வேண்டும்.

தம்னைல் தலைப்பு:

தம்னைலில் அதிகபட்சம் 4 வார்த்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது. கூகுள் தேடலில் அதிகம் தேடப்படும் சொற்களை (Keywords) தலைப்பு, YouTube SEO, டிஸ்கிரிப்ஷன் மற்றும் ஹேஷ்டேக்-களில் பயன்படுத்த வேண்டும்.

அடுத்தடுத்த வீடியோக்கள்:

பார்வையாளர்களைத் தொடர்ந்து பார்க்க வைக்க ‘என்ட் ஸ்கிரீன்’ மற்றும் ‘ஐகார்ட்’ சேர்க்க வேண்டும்.

சீரான வீடியோ பதிவேற்றம்:

தினமும் அல்லது வாரத்துக்கு 3 - 4 முறை குறிப்பிட்ட நேரத்தில் வீடியோ பதிவேற்றுவது அல்காரிதத்தின் நம்பிக்கையை அதிகரிக்கும்.

பார்வையாளர்களுடன் தொடர்பு:

பார்வையாளர்கள் கருத்துகளுக்கு பதிலளிப்பது மற்றும் கம்யூனிட்டி போஸ்ட்கள் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இதை செய்யும்போது பார்வையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு வீடியோக்களை அதிகம் ஷேர் செய்வார்கள், வியூஸ் அதிகரிக்கும்.

யூடியூபில் வருமானத்தை அதிகரிப்பது எப்படி?

8 நிமிட வீடியோக்கள்:

வீடியோவை 8 நிமிடங்களுக்கு மேல் வைக்கும்போது நடுவில் கூடுதல் விளம்பரங்களை அமைத்து அதிக வருமானம் பெறலாம்.

அதிக வருவாய் தரும் துறைகள்:

நிதி (Finance), தனிநபர் நிதி மேலாண்மை, பொருளாதாரம், தொழில்நுட்பம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், சேமிப்புத் திட்டங்கள் போன்ற தலைப்புகளுக்கும், கன்டென்ட்களுக்கும் விளம்பரதாரர்கள் அதிகம் கிடைப்பார்கள். இதை அதிகம் மக்கள் விரும்புகிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கூடுதல் வழிகள்:

ஸ்பான்சர்ஷிப் வீடியோக்கள், அஃபிலியேட் மார்க்கெட்டிங் மற்றும் ‘சேனல் மெம்பர்ஷிப்’ மூலம் வருவாயைப் பெருக்கலாம்.

செய்யக்கூடாதவை:

வீடியோவின் உள்ளடக்கமும் தலைப்பும் வேறு வேறாக இருந்து பார்வையாளர்களை ஏமாற்றக் கூடாது. இது அவர்களை கோபப்படுத்தி வெளியேற வைக்கும். அதேபோல பிறரின் படங்கள், வீடியோக்கள் மற்றும் பதிப்புரிமை உள்ள காட்சியமைப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.

மாறிய யூடியூப் ‘அல்காரிதம்’ - அதிக வியூஸ், வருமானம் பெற என்ன வழி?
‘பேரழிவு’ அச்சமூட்டும் சீனாவின் 6 மெகா திட்டங்கள்: பிரம்மபுத்திரா முதல் ‘பைஹேடான்’ வரை - ஒரு பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in