Last Updated : 19 Apr, 2016 02:09 PM

 

Published : 19 Apr 2016 02:09 PM
Last Updated : 19 Apr 2016 02:09 PM

ஆவலை வீசுவோம் 20 - பயனுள்ள பிடிஎப் தேடியந்திரங்கள்!

பிடிஎப் வடிவிலான கோப்புகள் மற்றும் மின்னூல்களை தேடித்தர உதவும் சிறப்புத் தேடியந்திரங்கள்!

இணையத்தில் தேடும்போது நீங்கள் எதிர்பார்க்கும் தகவல் அல்லது உங்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் பிடிஎப் வடிவிலான கோப்புகளில் மறைந்திருக்கலாம். வழக்கமான தேடலில் இந்தக் கோப்புகள் முன்னிறுத்தப்படாமல் பின் தங்கிவிடலாம். ஆனால் கவலையே வேண்டாம் பிடிஎப் கோப்புகளை தேடுவதற்கு என்றே சிறப்புத் தேடியந்திரங்கள் இருக்கின்றன. பிடிஎப் வடிவிலான கோப்புகள் தேவை என்றாலும் இவற்றை பயன்படுத்தலாம்; அல்லது நீங்கள் தேடும் தகவல்கள் அநேகமாக பிடிஎப் கோப்பு வடிவில் மறைந்திருக்கலாம் என நினைத்தாலும் இவற்றை நாடலாம்.

பிடிஎப் எனும் பிரபலமான கோப்பு வடிவத்தை நீங்கள் நிச்சயம் அறிந்திருக்கலாம். நீங்கள் பலவற்றுக்கு பிடிஎப் கோப்பு வடிவை நாடியிருக்கலாம். கம்ப்யூட்டர், அதன் இயங்குதளம் மற்றும் சாப்ட்வேர் போன்றவை பற்றி எல்லாம் கவலை இல்லாமல் கோப்புகளை அவற்றின் வடிவிலேயே பகிர்ந்துகொள்ள இது உதவுகிறது. அச்சிடக்கூடிய வடிவத்தை அப்படியே மின்னணு காட்சியாக மாற்றிக்கொள்வதை இது சாத்தியமாக்குகிறது.

பிடிஎப் வடிவம் ஏன்?

பிடிஎப் கோப்பாக மாற்றும்போது அதில் உள்ள படங்கள், வரைகலை மற்றும் பட்டியல் புள்ளிவிவரங்கள் எல்லாம் அப்படியே அதே வடிவில் காக்கப்படுகின்றன. பிடிஎப் கோப்புகளுக்கு பாஸ்வேர்ட் பூட்டுக்கள் எல்லாம் கூட இருக்கின்றன. பிடிஎப் தவிர வேறுபல கோப்பு வடிவங்களும் இருக்கின்றன.

இணையத்தில் பிடிஎப் உள்ளிட்ட வடிவங்களிலும் எண்ணற்ற கோப்புகள் பதிவேற்றப்படுகின்றன. அதிலும் குறிப்பிட்ட சில தகவல்களுக்கு பிடிஎப் கோப்புதான் ஏற்றதாக கருதப்படுகிறது. பயனர்களுக்கான கையேடு, பத்திரிகை கட்டுரைகள், அட்டவணை கொண்ட ஆய்வுக்கட்டுரைகள் போன்றவை பிடிஎப் வடிவில் இருப்பதே சிறந்தது. இவற்றில் மின்னூல்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

எனவே தான் பிடிஎப் கோப்புகளை தேடுவதற்கு என்று தனியே தேடியந்திரங்கள் தேவைப்படுகின்றன.

உங்களுக்கும் இந்த தேவை ஏற்பட்டு பிடிஎப் கோப்புகளுக்கு வலைவீச வேண்டிய நிலை ஏற்பட்டால் பைண்ட் பிடிஎப் டாக்.காம், பிடிஎப் சர்ச் இஞ்சின்.ஆர்க், பிடிஎப் ஜெனி, சர்ச் பிடிஎப்.காம், பிடிஎப் சர்ச் இஞ்சின்.நெட், பிடிஎப் சர்ச் இஞ்சின்.இன்போ உள்ளிட்ட பிரத்யேக பிடிஎப் தேடியந்திரங்களை பயன்படுத்தலாம்.

பிடிஎப் மட்டும்!

வழக்கமான தேடியந்திரங்களை பயன்படுத்துவது போலவே இவற்றிலும் தேவையான குறிச்சொல்லை டைப் செய்து தேடலாம். ஆனால் தேடல் முடிவுகளில் பிடிஎப் உள்ளிட்ட கோப்பு வடிவங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டிருக்கும். இவற்றின் செயல்பாடு அடிப்படையில் ஒரே விதமானவை என்றாலும் முடிவுகளை முன்வைப்பதிலும், கோப்புகளை அணுகும் வசதியிலும் சிறிய வேறுபாடுகள் இருக்கின்றன.

>பைண்ட் பிடிஎப் டாக்.காம் தேடியந்திரம் மிக எளிமையான வடிவமைப்பை கொண்டது. இதில் உங்களுக்கு தேவையான கோப்பு வடிவத்தை குறிப்பிட்டு தேடலாம். தேடல் முடிவுகள் தனி பக்கத்தில் தோன்றுகிறது. அதில் கிளிக் செய்து மூலப்பக்கத்திற்கு செல்லலாம். எந்த பிடிஎப் கோப்பையும் இந்த தளம் தன்னிடத்தில் கொண்டிருக்கவில்லை.அவற்றுக்கு இணைப்பை மட்டுமே வழங்குகிறது.

>பிடிஎப் சர்ச் இஞ்சின்.நெட் தேடியந்திரமும் எளிமையானது தான். இதிலும் கோப்பு வடிவை குறிப்பிட்டு தேடலாம்.

>பிடிஎப் சர்ச் இஞ்சின்.ஆர்க் தேடியந்திரமும் இதே ரகம் தான். ஆனால் பிடிஎப் கோப்புகளை மாற்றும் வசதி உள்ளிட்ட பல உப அம்சங்களை இது கொண்டிருக்கிறது. >பிடிஎப் சர்ச் இஞ்சின்.இன்போ தேடியந்திரமும் இதே ரகம் தான். >பைண்ட்பிடிஎப்.நெட்டையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

சார்பு தேடியந்திரங்கள்

இந்த இடத்தில் பிடிஎப் தேடியந்திரங்கள் பற்றி ஒரு ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும். இவை பெரும்பாலும் மூல தேடியந்திரங்கள் அல்ல; சார்பு தேடியந்திரங்கள் தான். அதாவது இவை கூகுள் உள்ளிட்ட பிற பொது தேடியந்திரங்களின் தேடல் நுட்பத்தை பயன்படுத்தியே தேடல் சேவையை அளிக்கின்றன. இந்த தேடியந்திரங்களியே கவனித்தால் கூகுலை அடிப்படையாக கொண்டு இயங்கும் விஷயம் சின்னதாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் பிடிஎப் கோப்புகளை மட்டுமே இவை வடிகட்டித்தருகின்றன என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

நீங்கள் விரும்பினால் கூட கூகுளில் குறிச்சொல்லை அருகே பிடிஎப் எனும் சொல்லையும் சேர்த்து டைப் செய்தால் பிடிஎப் கோப்புகளை மட்டும் தேடலில் பெறலாம். ஆனால் இதற்கு கொஞ்சம் தனியே மெனக்கெட வேண்டும். அந்த தேவை இல்லாமல் பிடிஎப் கோப்புகளை மட்டும் சலித்து தருகின்றன பிடிஎப் தேடியந்திரங்கள்.

>சர்ச் பிடிஎப்.காம் கொஞ்சம் மாறுபட்டது. இது பிங் தேடியந்திரத்தை சார்ந்து இயங்குகிறது. >பிரி புல் பிடிஎப் அறிவியல் தகவல்கள சார்ந்த கோப்புகளை மட்டும் தேடித்தருகிறது.

>பிடிஎப் ஜெனி. நெட், > பிடி எப் குவின் ஆகிய தேடியந்திரங்களையும் பயன்படுத்தி பார்க்கலாம். பிடிஎப் குவின் தளத்தில் தேடல் முடிவிலேயே பிடிஎப் கோப்பு உள்ளடக்கத்தையும் படிக்கும் வசதி இருக்கிறது. >ஓபன் பிடிஎப் தேடியந்திரத்தையும் முயன்று பார்க்கலாம்.

பயனர் கையேடு!

விஷயம் என்ன என்றால் பிடிஎப் தேடல் வசதி இருப்பதை அறிந்திருப்பது மட்டும் அல்ல, குறிப்பிட்ட தேடல்களின் போது இந்த வசதி ஏற்றதாக இருக்கும் என்பதும் தான். ஆய்வுக்கட்டுரைகள், பயனர் கையேடுகள், அட்டவணைகள் போன்றவை சார்ந்த தகவல்களை தேடும் போது பிடிஎப் தேடல் மிகவும் உதவுயாக இருக்கும்.

இவை தவிர மின்னூல் வடிவங்களை தேடித்தருவதற்கு என்றே >இபுக் இஞ்சின், >ஜஸ்ட்பார்புகஸ், >இபுக்சர்சிஞ்சின்.நெட் உள்ளிட்ட தேடியந்திரங்கள் இருக்கின்றன.

>புக் கோல்ட் மைன் தேடியந்திரத்தில் மின்னூல்கள் மற்றும் உரை வடிவங்களை தேடலாம்.

இந்த தேடியந்திரங்களை பயன்படுத்தும் போது மின்னூல்களை வழங்கும் பல அருமையான மூல தளங்களை தேடல் பட்டியலில் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

- சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம் >>ஆ'வலை' வீசுவோம் 19 - வியத்தகு வீடியோ தேடியந்திரங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x