தளம் புதிது: சிறு புத்தகங்களைப் பரிந்துரைக்கும் இணையதளம்

தளம் புதிது: சிறு புத்தகங்களைப் பரிந்துரைக்கும் இணையதளம்
Updated on
1 min read

உங்கள் ரசனைக்கேற்ற புத்தகங்களைப் பரிந்துரைக்கும் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. அந்த வரிசையில், ‘ஷார்ட்புக்ஸ்’ தளம் வழக்கமான பரிந்துரைகளிலிருந்து மாறுபட்டு, குறைந்த பக்கங்களைக் கொண்ட புத்தகங்களைப் பரிந்துரைக்கிறது.

புத்தகக் காதலர்களுக்குப் பக்கங்களின் எண்ணிக்கை ஒரு தடையில்லைதான். அது மட்டுமல்லாமல் மகத்தான நாவல்கள் உள்ளிட்ட பல சிறந்த நூல்கள் அதிகப் பக்கங்களைக் கொண்டவை.

ஆனால் வாசிக்க வேண்டும் என விருப்பம் கொண்ட பலர், இந்தப் புத்தகங்களின் அளவைப் பார்த்தே மிரண்டு விடலாம். தலையணை அளவு புத்தகத்தை எப்படிப் படிப்பது என அவர்கள் மலைத்து நிற்கலாம். இத்தகைய வாசகர்களில் பலர், குறைந்த பக்கங்களைக் கொண்ட புத்தகங்கள் இருந்தால் படிக்கலாம் என நினைத்து ஏங்கவும் செய்யலாம் அல்லவா?

இந்த ஏக்கத்தை தீர்க்கும் வகையில்தான் இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 500 பக்கங்களுக்கு மேல் உள்ள புத்தகங்களை எல்லாம் எப்படி வாசிப்பது எனும் தயக்கம் கொண்டவர்களுக்கு, இதே தலைப்புகளில் குறைந்த பக்கங்களைக் கொண்ட‌ புத்தகங்களைப் பரிந்துரைப்பதாக இந்தத் தளம் தெரிவிக்கிறது. ஒரு புத்தகத்தை வாசிக்கத் தேவைப்படும் நேரத்தின் அடிப்படையில் இதைக் கணக்கிட்டுப் பரிந்துரைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தத் தலைப்பிலுமே நீளமான வாசிப்புத் தேவைப்படும் புத்தகங்களுடன் ஒப்பிட்டு, குறைவான நேரத்தில் படிக்கக் கூடிய புத்தகங்களை இந்தத் தளம் தேடித் தருகிறது. விரும்பிய தலைப்புகளைத் தெரிவித்துத் தேடலாம் அல்லது இதில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைப் பார்க்கலாம். கொஞ்சம் மாறுபட்ட சேவைதான். அவசர யுகத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சிறு புத்தகங்கள் தேவைப்படுபவர்கள் மட்டுமல்லாமல், மற்ற வாசகர்களும்கூடப்

புத்தகப் பரிந்துரைக்காகப் பயன்படுத்திப் பார்க்கலாம். இது ஆங்கிலப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது. புத்தகங்களை அமேசான் தளத்தில் வாங்கும் இணைப்பும் இருக்கிறது. இதில் கலந்திருக்கும் விளம்பர நோக்கம் பற்றியும் தளத்தின் அறிமுகத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையதள முகவரி: >http://www.shortbooks.co/index.php

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in