Published : 26 Oct 2023 10:09 PM
Last Updated : 26 Oct 2023 10:09 PM

AI சூழ் உலகு 12 | மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் உறுதுணைகள்!

பிரதிநிதித்துவப் படம்

செயற்கை நுண்ணறிவின் (AI) செயல்பாடு மனிதனின் அறிவாற்றலை பல்வேறு அம்சங்களின் ஊடாக பிரதிபலிப்பதுதான். இப்போதைக்கு மனித குலத்துக்கு பல்வேறு வகையில் உதவுவது அதன் பிரதான பணி. நவீன டெக் யுகத்தில் அனைத்து துறைகளிலும் அங்கம் வகிக்கிறது ஏஐ. பிணிகளை நீக்கி இன்னுயிர் காக்கும் மருத்துவ துறையும் இதில் அடக்கம். அந்த வகையில் மருத்துவம் சார்ந்து பல்வேறு வகையான நோயை கண்டறிதல் தொடங்கி அதற்கான சிகிச்சை வரையில் ஏஐ-யின் உதவி உள்ளது. ஆனால், இங்கு எழுகின்ற ஒரே கேள்வி மனிதர்களை விட அஃறிணை சிறந்து செயல்படுமா என்பதுதான். ரோபோக்களின் துணையுடன் துல்லியமான முறையில் உலக நாடுகளில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. நோயாளியின் ஆரோக்கியம் சார்ந்து மருத்துவ துறையில் ஏஐ சிறப்பான பயனளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், மருத்துவத் துறையில் தொழில்நுட்ப எந்திரங்களின் வரவு பக்கபலமாகவே இதுவரை அமைந்துள்ளது.

பக்கவாதத்தால் முடங்கியவரை பேச வைத்த ஏஐ: அமெரிக்க நாட்டில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 18 ஆண்டு காலம் பக்கவாத பாதிப்பால் முடங்கியிருந்த ஆன் (Ann) என்ற பெண் நோயாளியை பேச வைத்துள்ளது ஏஐ. நிமிடத்துக்கு 14 வார்த்தைகள் என அவரால் நிதானமாக பேச முடிகிறது. மோஷன் - ட்ரேக்கிங் தொழில்நுட்பம் மூலம் இது சாத்தியமாகி உள்ளது. இதற்காக அவரது மூளையின் மேற்பரப்பில் காகிதம் போன்ற மெல்லிய 253 Electrodes-களை பொருத்தியுள்ளது ஆய்வுக்குழு. அதன் மூலம் அவர் பேச முயலும்போது அதனை அடையாளம் காணும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. அதனை வாக்கியமாக பெறும் ஏஐ, அவதார் மூலம் குரல் வழியாக உரையாடுகிறது. இதற்காக பக்கவாத பாதிப்புக்கு முன்பாக ஆன் பேசிய குரல் பதிவை பயன்படுத்தி உள்ளது ஆய்வுக்குழு. அவரது திருமண விழாவின் வீடியோவில் இருந்து குரல் பிரதி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியில் ஆனின் எண்ணத்தை அல்லது அவர் பேச முயற்சிக்கும் வார்த்தைகள் அனைத்தையும் முழுவதுமாக டீகோட் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எர்ரர் ரேட் சுமார் 28 சதவீதமாக உள்ளது. இந்த ஆய்வுப் பணியை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் மேற்கொண்டது. (வீடியோ லிங்க்)

கண் சிகிச்சை: கண் சிகிச்சை சார்ந்து நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறையை மேம்படுத்தவும் ஏஐ உதவுகிறது. விழித்திரை பாதிப்பு, ஆட்டோமேட்டேட் ஸ்கிரீனிங், கிளகோமா பாதிப்பு (Glaucoma), சிகிச்சை முறை போன்றவற்றில் ஏஐ உதவுகிறது. கண் சிகிச்சை சார்ந்து பல்வேறு வகையில் நோயாளிகளின் தரவுகளை மருத்துவர்களுக்கு வழங்கி ஏஐ உதவும் என தெரிகிறது. கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது ரியல்-டைம் கைடன்ஸ்களை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிபுணர்களுக்கு ஏஐ வழங்கும். இது கண்ணில் நகர்வுகளை ட்ரேக் செய்வதன் மூலம் சாத்தியம் என சென்னையை சேர்ந்த கண் மருத்துவர் மோகன் ராஜன் தனது கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் விஷன் கிளாசஸ்: பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகள் பெரிதும் உதவும் என சொல்லப்பட்டுள்ளது. இதில் உள்ள அம்சங்கள் இதனை அணிந்திருப்பவருக்கு பருந்து பார்வையை போல விரிவடைய செய்கிறது. அதனை கருத்தில் கொண்டே இதன் வடிவமைப்பும் உள்ளது. ஏஐ அப்ளிகேஷன் மூலம் இதனை அணிந்திருப்பவர்கள் பொருட்கள், எழுத்து மற்றும் எதிரேல் உள்ள நபர்கள் என பலவற்றை அடையாளம் காண முடியும். அது குறித்த தகவலை ஆடியோ வழியில் தெரியப்படுத்துகிறது. புத்தகம் படிக்க உதவும் என்றும், ஜிபிஎஸ் துணையுடன் ரியல் டைம் வழிகாட்டியாகவும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்பக புற்றுநோய் கண்டறிதலில் உதவும் ஏஐ: மார்பக புற்றுநோயை கண்டறிய Mammograms முறை பயன்படுத்தப்படுகிறது. இது நோய் பாதிப்பின் ஆரம்ப நிலைய கண்டறிய உதவுகிறது. மார்பக திசுக்களை எக்ஸ்ரே எடுத்து, அதனை ரேடியாலஜிஸ்ட் பகுப்பாய்வு செய்வார்கள். இந்த பணியில் ஏஐ துணையை நாடியது ஸ்வீடன் நாட்டு மறுத்து ஆய்வுக்குழு. இதற்காக 40 முதல் 80 வயது வரையிலான பெண்களை பரிசோதித்துள்ளது. அதன் முடிவுகளை லான்செட் மருத்துவ ஆய்வு இதழில் வெளியிட்டுள்ளது. வணிக ரீதியாக உதவும் ஏஐ சப்போர்ட் உடன் மேமோகிராம் ரீடிங் சிஸ்டம் பயன்படுத்தியுள்ளது. அதனடிப்படையில் திசுக்களில் புற்றுநோய் பாதிப்புக்கான அறிகுறியை ஏஐ கண்டறிந்தால், அதனை ஒன்றுக்கும் மேற்பட்ட ரேடியாலஜிஸ்ட் தீவிரமாக ஆய்வு செய்து, முடிவை அறிவித்துள்ளனர். வழக்கமான முறையை காட்டிலும் ஏஐ மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை துல்லியமானதாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் திசுக்களில் உள்ள சிறு சிறு கட்டிகளையும் ஏஐ அடையாளம் கண்டு சொல்லியுள்ளது. அதனால் பாதிப்பு ஏதும் இல்லை என ஆய்வாளர்கள் சொல்லி உள்ளனர்.

இவை அனைத்தையும் வைத்து பார்க்கும்போது சுகாதார அமைப்பில் ஏஐ கருவிகள், அப்ளிகேஷன்கள் பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் உலக நாடுகளில் பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவ ரீதியிலான அமைப்புகளுக்கு ஏற்ப அது செயல்படும் விதம் குறித்து பார்க்க வேண்டும். இதில் மருத்துவத்தின் தரம் சார்ந்தும் கவனிக்க வேண்டியுள்ளது. முக்கியமாக மருத்துவர்களுக்கு ஏஐ பயன்பாடு சார்ந்து பயிற்சி அளிக்கப்படுவது அவசியம். அது இருந்தால் மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் ஏஐ பயனளிக்கும்.

முந்தைய அத்தியாயம்: AI சூழ் உலகு 11 | யுத்தக் களத்தில் ‘ஏஐ’ உறுதுணையால் மனிதகுலத்துக்கு ஆக்கமா, அழிவா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x