Published : 13 Oct 2023 10:06 PM
Last Updated : 13 Oct 2023 10:06 PM

AI சூழ் உலகு 11 | யுத்தக் களத்தில் ‘ஏஐ’ உறுதுணையால் மனிதகுலத்துக்கு ஆக்கமா, அழிவா?

கோப்புப்படம்

‘யுத்தம்’ இல்லாத உலகம் வேண்டுமென சாமானிய மனிதர் ஒவ்வொருவரும் விரும்புவர். ஆனாலும் மண், பொன் என வளங்களை சுரண்டவும், பிரிவினையின் பெயராலும், ஆட்சி அதிகாரத்தினாலும் உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் யுத்தம் மேற்கொள்ளப்படுகிறது. ஆதி காலம் முதலே யுத்தம் குறித்த தகவல்களை இலக்கியங்களின் ஊடாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் காலத்துக்கு ஏற்ற வகையில் யுத்த முறை மாற்றம் கண்டுள்ளது. உலக நாடுகளில் அரங்கேறும் போர்களும் அந்த வலி மிகுந்த வரலாற்றை சுட்டிக் காட்டுகிறது. மொத்தத்தில், தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்ப யுத்தமும் அப்டேட் காண்பது எதிர்மறை விளைவு.

அலெக்சாண்டர் வாள் ஏந்தியும், ஹிட்லரின் நாஜி படை குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளில் இருந்து தோட்டாக்களை தெறிக்கவிட்டும் யுத்தம் புரிந்த காலம் மலையேறி மொபைல் போன் கேமில் வருவது போல பாராகிளைடரில் ஆகாய மார்க்கமாக அந்நிய நாட்டு எல்லைக்குள் பறந்து வந்து குண்டு வீசும் அல்லது கணைகளை ஏவும் வீடியோ காட்சிகள் அதற்கு உதாரணம். காலாட்படை, குதிரைப்படை காலமெல்லாம் வரலாறாக மாறிவிட்டது.

பண்டைய காலத்தில் சீனர்கள் கன் பவுடரை தயாரித்தது இதற்கான தொடக்கப் புள்ளி. ரைபிள், மெஷின் கன் மற்றும் வெடிபொருள் பயன்பாடு போரில் அதிகரித்தது அதற்கு பிறகுதான். அது போர் முறையை அப்படியே அடியோடு மாற்றியது. இதற்கு முன் வாள், வேல் கம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களை ஏந்தி நிற்பவர்கள் நிராயுதபாணிகள் தான். பின்னர் அணுகுண்டின் வரவு யுத்த முறையை கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு மாற்றியது. ஒற்றை அணுகுண்டு ஒரு நாட்டின் நிலப்பரப்பின் பெரும் பகுதியை அழித்துவிட போதுமானதாக அமைந்தது. இப்படியாக பல மாற்றங்களை கண்டு இப்போது ஆட்டோமேஷன் மயமாக மாற்றம் கண்டுள்ளது.

போர் களத்தில் செயற்கை நுண்ணறிவு: உலகம் எதிர்கொண்ட இரண்டு உலகப் போர்கள் உட்பட மேற்கொள்ளப்பட்டு வந்த யுத்த முறையை முற்றிலுமாக மடை மாற்றியுள்ளது ஏஐ வரவு. அதிக பொருட்செலவில் இயங்கும் பெரிய மனித படைகளை தானியங்கு முறையில் இயங்கும் வகையில் மாற்றியுள்ளது. இதன் செலவும் மலிவுதான். அதற்கான கட்டளைகளை உள்ளிடவும், புரோகிராமிங்கும் செய்து வைத்தால் போதும். யுத்த பூமியில் ஏஐ சித்து வேலையை பார்க்க தொடங்கிய நிகழ்வாக ரஷ்யா மற்றும் உக்ரைன் (2022) இடையிலான போரை சொல்லலாம்.

ரஷ்யா ஏஐ ஸ்மார்ட் மைன்களை (Anti Personnel Mines) பயன்படுத்தியது. இந்த ஸ்மார்ட் மைன்கள் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அருகாமையில் (சுமார் 16 மீட்டர் பரப்பளவு) காலடி தடங்களை சென்ஸ் செய்தால், அது தானாகவே வெடிக்கும். இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

மறுபக்கம் உக்ரைனோ தானியங்கு முறையில் இயங்கும் ட்ரோன் போட்களை கொண்டு கடந்த 2022-ல் ரஷ்யாவின் செவஸ்டபோல் துறைமுகப் பகுதியில் ரஷ்ய கடற்படையை உக்கிரமாக தாக்கியது. அதில் ரஷ்யாவின் போர்க் கப்பல் மூழ்கியது. வான் வழியாகவும் ட்ரோன்களை உக்ரைன் இந்த தாக்குதலின் போது பயன்படுத்தியதாக தகவல். இந்த வகை ட்ரோன் போட்களை (USV) அமெரிக்கா, சீனா, பிரிட்டன், தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் வெள்ளோட்டம் பார்த்துள்ளன. இதன் மூலம் துறைமுக பாதுகாப்பு மற்றும் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட முடியும்.

கடலின் மோசமான வானிலையை தாக்குப்பிடித்து இதனால் துல்லியமாக நீண்ட நாட்களுக்கு இயங்க முடியும். இதில் ஆயுதம் இருந்தால் எதிரே உள்ளே டார்கெட்டை ஒரே ஒரு பட்டனை அழுத்தி துவம்சம் செய்யும். அல்லது அதற்கு இருக்கும் செயற்கை நுண்ணறிவு திறனை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளும். 2050-களில் அமெரிக்க கடற்படை பணியில் 50 சதவீதம் இந்த வகை போட்கள் இருக்கும். அந்த அளவுக்கு அமெரிக்கா பெரிய அளவில் இதில் முதலீடு செய்துள்ளது.

படை பலம்: திறன் வாய்ந்த ஆயுதங்களை அல்லது படைகளை கொண்டுள்ள நாடுகள் உலகில் தங்களது ஆதிக்கத்தை அதன்மூலம் செலுத்த முனைவது வழக்கம். அந்த வகையில் பாதுகாப்பு படையின் அனைத்துப் பிரிவிலும் தானியங்கு எந்திரங்களை பயன்படுத்துவது அமெரிக்காவின் பலே திட்டம். ரோபாட்டிக் சிஸ்டத்தின் மேம்பாடு காரணமாக இதை அந்த நாடு சாத்தியம் ஆக்கியுள்ளது. போர் புரியும் வல்லமை கொண்ட ரோபோக்களை களத்தில் பயன்படுத்த முனைகிறது. இதில் ஏராளமான சாதகங்களும் இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது. முக்கியமாக, இதன் மூலம் படை பலம் கொண்ட சீனாவுக்கு சவால் கொடுக்கலாம்.

Kamikaze: இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய விமானிகள் எதிரி நாட்டு போர்க்கப்பலை அழிக்க மேற்கொண்ட தற்கொலை படை தாக்குதலை ‘Kamikaze’ என சொல்வதுண்டு. அதை அடிப்படையாக கொண்டு ஏஐ ட்ரோன்களை பயன்படுத்தி நிலம் மற்றும் நீரில் உள்ள எதிரியின் டாங்கிகள் மற்றும் போர்க் கப்பல்களை உலக நாடுகள் டார்கெட் செய்கின்றன. ரஷ்யாவின் டாங்கிகளை உக்ரைன் இந்த முறையில் துவம்சம் செய்துள்ளது. இதற்கு அமெரிக்கா உதவியுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: 2023 அக்டோபரில் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணைகளை ஏவி தாக்கியது. இதில் தெற்கு இஸ்ரேல் பகுதி பாதிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் உயிரிழந்தனர். இத்தகையச் சூழலில் உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களை அடையாளம் காண இஸ்ரேல் மருத்துவமனைகளில் ஃபேஷியல் ரெகக்னிஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. காணாமல் போனவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தரப்பில் அனுப்பிய படங்களுடன் ஒப்பிட்டு, அது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு Corsight AI பயன்படுத்தப்பட்டுள்ளது. முகத்தின் ஒரு பகுதியை வைத்தே இதனால் தகுந்த நபரை அடையாளம் காண முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவமனையில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை காசாவுக்கு அருகில் அமைந்துள்ளது. ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு போர் என பிரகடனம் செய்தது இஸ்ரேல். உக்ரைன் - ரஷ்யா போரிலும் உயிரிழந்த ரஷ்ய வீரர்களை அடையாளம் காண உக்ரைனும் இதே மாதிரியான ஏஐ உதவியை நாடியது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸுக்கு எதிராக ஏஐ துணையை நாடிய இஸ்ரேல்: துல்லியமான வான்வழி தாக்குதல் மற்றும் தளவாட அமைப்பு சார்ந்து ஏஐ தொழில்நுட்பத்தை இஸ்ரேல் பாதுகாப்பு படை பயன்படுத்துகிறது. வான்வழி தாக்குதலுக்கான இலக்கை தேர்வு செய்யவும், அது சார்ந்த முடிவுகளை எடுக்கவும் ஏஐ உதவியை நாடுகிறது. தொடர்ந்து மற்றொரு ஏஐ மென்பொருளின் துணையுடன் ரெய்டுகளை மேற்கொள்வது தொடர்பாக முடிவுகளை எடுக்கிறது. ஏஐ-யின் பரிந்துரையை மனிதர்கள் மேற்பார்வையிட்டு, ஏதேனும் மாற்றம் இருந்தால் அதை மேற்கொள்வதாகவும் தகவல். போரில் ஏஐ பயன்பாடு ராணுவம் மற்றும் அப்பாவி மக்கள் உயிரிழப்பை வெகுவாக குறைக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.

இதேபோல கடந்த 2021-ல் ராக்கெட் ஏவுதளங்களை அடையாளம் காணவும் ஏஐ உதவியை இஸ்ரேல் பயன்படுத்திக்கொண்டது. மேலும், செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ய, அந்நிய நாட்டில் ஆயுத தளவாட நகர்வை கண்காணிக்கவும் செயற்கை நுண்ணறிவை இஸ்ரேல் பயன்படுத்தியது. இது தவிர பாலஸ்தீனர்களை அடையாளம் காண ஃபேஷியல் ரெகக்னிஷன் ஏஐ மென்பொருளை பயன்படுத்துகிறது.

இப்படி போர்க் களத்தில் வீரர்களுக்கு ஏஐ அசிஸ்ட் இருந்தாலும் இது அனைத்தும் ‘Mission Impossible Dead Reckoning Part One’ படத்தில் மனிதர்களுக்கு எதிராக இயங்கும் ‘Entity’ ஏஐ போல செயல்படாமல் இருந்தால் சரி. அல்லது ஒரு நாட்டின் பாதுகாப்புப் படைக்கு எதிராக தீவிரவாதிகள் கையில் கிடைத்தால் என்ன ஆகும்? அதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை மற்றொரு அத்தியாயத்தில் பார்க்கலாம்.

| தொடர்வோம்... |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x