

2025 மார்ச் மாதம் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி காண்போரை பதறவைத்தது. அன்றாடம் கேளிக்கைக்காகவும், நேரத்தைக் கடத்துவதற்கும் ஆயிரக்கணக்கில் வைரலாகும் வீடியோக்களில் ஓராண்டுக்கு முன்னர் வெளியான அந்த வீடியோ நம்மில் பலருக்கும் மறந்திருக்கலாம்.
நினைவலைகளை தூசி தட்ட, கிருஷ்ணகிரியில் பதிவான அந்த வீடியோவின் விவரத்தை பகிர்கிறேன். ஓசூர் அருகே உள்ள ஒரு மலைக்கிராமத்தில் ஒரு சிறுமிக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின் செயல் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. அது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில், ஒன்னேபுரம், சித்தப்பனூர், சிக்கமஞ்சி, கிரியானூர், பெல்லட்டி, தொட்டமஞ்சி என 20-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு 20 கி.மீ. தொலைவில் உள்ள அஞ்செட்டிக்கு சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இங்குள்ள மாணவர்கள் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படிப்பதால், அதற்கு மேல் படிக்க அஞ்செட்டிக்கு தினமும் சென்று வருகின்றனர். நீண்டதூரம் சென்று படிப்பதற்கு பெண் குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்புவதற்கு தயங்கி, 10-ம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்காமல் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர்.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் சிறுமிகளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் அந்த மலைக்கிராமத்தில் குழந்தைத் திருமணம் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
அப்படி, அங்குள்ள மலைக்கிராமத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு வரை படித்த 14 வயது சிறுமியின் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி செய்யப்பட்ட திருமணம் தொடர்பானதுதான் அந்த வீடியோவும்.
இந்நிலையில், ‘அந்த மலைக்கிராமத்தில் இன்னும் 10-ம் வகுப்புக்குப் பின்னர் மாணவர்கள் உயர் கல்விக்கு அஞ்செட்டி செல்லும் நிலையே உள்ளது. எதுவும் மாறவில்லை’ என்பது ‘இந்து தமிழ் திசை’ ஓசூர் நிருபர் கி.ஜெயகாந்தன் பகிர்ந்த கள நிலவரத் தகவல்.
பதின்ம வயது பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றலைத் தடுப்பது என்பது குழந்தைத் திருமணத்தைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
நிலைமை இப்படியிருக்க, சில தினங்களுக்கு முன்னர், சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. 2026-ம் ஆண்டுக்கான சர்வதேச பெண் குழந்தைகள் தின கருப்பொருள் ‘குழந்தைத் திருமணத்தை ஒழிப்போம்; அவர்கள் உரிமைகளில் முதலீடு செய்வோம்’ என்பதாகும்.
குழந்தைத் திருமணத்தை ஒழிக்கும் நோக்கில், 2024-ல், மத்திய அரசு ‘குழந்தை திருமணமில்லா இந்தியா’ இயக்கத்தைத் தொடங்கியது. வரும் 2030-க்குள் குழந்தைத் திருமணத்தை முற்றிலும் ஒழிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் இந்த இலக்கை நாம் எவ்வளவு தூரம் வெற்றிகரமாகக் கடந்திருக்கிறோம், இலக்கை துல்லியமாக அடைய நாம் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழ்நாடு கள நிலவரத்தை ஒட்டிப் பார்க்கலாம்.
உத்தரப் பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தான் இந்தியாவில் நடந்தேறும் குழந்தைத் திருமணங்களில் 50% நடைபெறுகின்றன என்கிறது யுனிசெப் (UNICEF) மற்றும் சில புள்ளிவிவரங்கள். அதேவேளையில் கேரளம் மாநிலம், லட்சத்தீவு யூனியன் பிரதேசம் குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதில் சிறப்பாக செயல்படுவதாகத் தெரிகிறது.
இந்தியா முழுவதுமே பெண் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, சிறார் நலன் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் மீதான முதலீடுகள் மூலம் பெண் குழந்தைகள் உரிமை பேணுதல் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. அதேவேளையில், இந்த முதலீடுகளை ஆழப்படுத்துவதன் மூலமும், பெண்களின் குரல், செயல்பாடு மற்றும் பங்கேற்பை வலுப்படுத்துவதன் மூலமும், முன்னேற்றம் துரிதப்படுத்தப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
ஏனென்றால், உலகளவில் உள்ள குழந்தை மணமகள்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளனர். இந்தியாவில் ஐந்தில் ஓர் இளம் பெண் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகிறார். 1996-ல் 50 சதவீதத்துக்கும் மேலாக இருந்த குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை தற்போது 20 சதவீதத்துக்கு சற்று அதிகமாக குறைந்துள்ளது. ஆனால், இது நிச்சயமாக 2030-க்குள் ‘குழந்தை திருமணங்கள் இல்லா இந்தியா’ என்ற இலக்கை எட்டப் போதுமானது அல்ல என்பது நிபுணர்கள் கணிப்பு.
இந்தியாவில் பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும், ஆண்களுக்கு 21 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் திருமணம் செய்து வைப்பது குழந்தைத் திருமணமாகக் கருதப்படும். குழந்தைத் திருமணங்களைத் தடுக்க சைல்டு ஹெல்ப் லைன் எண்கள் ‘1098’, 181 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்.
இருந்தாலும் குழந்தைத் திருமணங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழகத்தில் சேலம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தேனி, திருவண்ணாமலை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் இன்னமும் அதிகளவில் பதிவாகின்றன. இவை தவிர பல மாவட்டங்களிலும் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் நடக்கும் 100 திருமணங்களில் 12.5 திருமணங்கள் குழந்தைத் திருமணங்கள் என்கிறது தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS-5). இந்தச் சூழலில், குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதில் தமிழகம் எங்கு சறுக்குகிறது என்பது குறித்து குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயனிடம் கேட்டபோது, அவர் பகிர்ந்த தகவல்கள்:
‘குழந்தைத் திருமணத்தின் வேர் பால்ய விவாகத்தில் தொடங்கி இன்றளவும் நிலவும் உலகளாவியப் பிரச்சினை. குழந்தைத் திருமண தடைச் சட்டம் என்பது விரிவான சட்டம் தான். வெறும் சட்டத்தால் மட்டுமே குழந்தைத் திருமணங்களைத் தடுத்துவிட முடியாது. குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன என்று எங்கேயோ ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தினால் மட்டும் போதாது. இலக்கை நோக்கி பயணப்பட வேண்டும்.
அதில் மிக முக்கியமானது ‘ஹாட்ஸ்பாட் இன்டர்வென்ஷன்’ (தீவிரப் பகுதி கண்காணிப்பு நடவடிக்கை). தமிழகம் முழுவதும் குழந்தைத் திருமணங்கள் இல்லை. ஆனால் சேலம், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை போன்ற சில மாவட்டங்களில் நடைபெறுகிறது. அதேபோல் இளம் வயது கர்ப்பமும் (டீன் ஏஜ் பிரெக்னன்சி) தமிழகத்தில் அதிகரித்துள்ளது. குழந்தைத் திருமணத்தையும் - இளம் வயது கர்ப்பத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.
குழந்தைத் திருமணங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் துல்லியமாகவே கிடைக்கின்றன. 1098 உதவி மையத்தில் பதிவாகும் புகார்கள், காவல் துறையில் பதிவாகும் புகார்களைக் கொண்டு இந்த எண்கள் திரட்டப்படுகின்றன.
அதேபோல், இளம் வயது கர்ப்பம் தொடர்பான தரவுகள் சுகாதாரத் துறையிடம் இருக்கும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும், அதில் உள்ள தாலுகாவிலும் நிலவும் பிரச்சினையின் அடிப்படையில் துல்லியமான தலையீடு தேவை.
திருவண்ணாமலையில் பழங்குடிகள் மத்தியில் நிலவலாம். இன்னொரு மாவட்டத்தில் மதம் அல்லது சாதி ரீதியிலான பழக்கங்களால் குழந்தைத் திருமணங்கள் நடக்கலாம். ஆகவே, ஒவ்வொரு பகுதிக்கும் பொருந்தும் தலையீடுகளும், திட்டங்களும் தேவை.
பல்வேறு சமூக - பொருளாதார, சமய சடங்குகள் தாக்கங்கள் அடிப்படையில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. 2023-ல் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள், 'பால்ய விவாகம்' எனப்படும் குழந்தைகள் திருமணம் நடத்துவதாக புகார் வந்தது. அதனால் தான் சட்டம், திட்டங்கள் மட்டும் போதாது என்கின்றேன்.
‘ஹாட்ஸ்பாட் இன்டர்வென்ஷன்’ என்பதையும் அடுத்தக் கட்டத்துக்கு நுணுக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்தில் கிராம அளவில் குழந்தைகளைப் பாதுகாக்கும் குழுக்கள் (Village Level Child Protection Committee) இருக்கின்றன. அந்தக் குழுவில் பஞ்சாயத்து தலைவர் உள்பட பலரும் இருப்பர். அவர்கள் தங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் தங்கள் வயதுக்கு ஏற்ப கல்வி கற்கிறார்களா என்பது உள்பட பல்வேறு விஷயங்களைக் கண்காணிக்க வேண்டும்.
அவ்வாறான கண்காணிப்பு தீவிரமாகும் போது கல்வி இடைநிற்றல் குறையும். கல்வி இடைநிற்றல் குறைந்தால் குழந்தைத் திருமணங்கள் குறையும், சிறுமிகள் குழந்தைத் தொழிலாளர்கள் ஆவது குறையும், இளமைக்கால கர்ப்பம் குறையும், இளம் வயது விதவைகள் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையும். எனவே குழந்தைத் திருமணம் என்ற ஒற்றைப் பிரச்சினை பல்வேறு பிரச்சினைகளுடனும் தொடர்புடையது.
ஆனால், இத்தனையும் செய்யவல்ல கிராம அளவிலான குழுக்களுக்கு பட்ஜெட் ஒதுக்கப்படுவதே இல்லை. அதேபோல் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பும் (இன்டர் டிபார்ட்மென்ட்டல் கன்வர்ஜென்ஸ்) மிகவும் அவசியம்.
குழந்தைகள் நல சிறப்பு சேவைத் துறை, சைல்டு லைன், காவல்துறை, கிராம வளர்ச்சித் துறை, சமூக நலத் துறை, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புத் துறை என எல்லாமே குழந்தைகள் நலனைப் பேணுவதில் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஆலோசனை செய்ய வேண்டும்.ஒரு கிராமப்புற பகுதிக்கு சரியான பேருந்து வசதி இல்லாமல் போனால் அந்தப் பகுதியில் இருக்கும் பெண் குழந்தை கல்வி இடைநிற்றல் செய்யலாம்.
எனவே, ஒரு நுண்ணோக்கு அணுகுமுறையுடன் இயங்கினால் மட்டுமே குழந்தைத் திருமணங்களைத் தடுக்க முடியும்’ என்று கூறினார்.
பட்ஜெட்டே இல்லை!
குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்கான முதன்மைத் துறையான குழந்தைகள் நல சிறப்பு சேவைத் துறைக்கு (Nodal Department) நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்படுகிறது. இந்தத் துறைக்கு கடந்த 10 மாதங்களாக முறையான இயக்குநர் கூட நியமிக்கப்படவில்லை, தற்காலிக இயக்குநரை வைத்தே இயங்கி வருகிறது.
அதேபோல், மாவட்ட அளவில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் (DCPU) நோடல் அலுவலர்களுக்கு களப்பணிக்கு செல்ல வாகன வசதி கூட இல்லை. அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை.
மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு (SCPCR) பட்ஜெட் மிகவும் குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன் தலைவர், உறுப்பினர்களுக்கு சரியான ஊதியம் இல்லை. வழக்கறிஞர்கள் இல்லை. ஆவணக் காப்பகம் இல்லை. இணையதளம் கூட இல்லை. இப்படியிருக்க குழந்தைத் திருமணங்களை எப்படி இரும்புக்கரம் கொண்டு தடுக்க முடியும் என்பது நிபுணர்களின் கேள்வியாக உள்ளது.
‘குழந்தை நேய தமிழ்நாடு’ வேண்டும்!
“குழந்தைத் திருமணம் என்பது குழந்தைகள் மீதான மிகக் கொடூரமான பாலியல் வன்முறை. குழந்தைகளை வைத்து அரசியல் செய்பவர்கள் கூட குழந்தைகளுக்கு நேர்மையாக இருப்பதில்லை. குழந்தைகள் நலனுக்கான அரசியல் உறுதிப்பாடு (Political Will) இல்லாமல், குழந்தைத் திருமணங்களை ஒழிப்பது சாத்தியமில்லை.
குழந்தைகளுக்கான அனைத்துவித பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும். குழந்தை நேய தமிழ்நாடு உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நிதி ஒதுக்கீடு அவசியம். குழந்தைகள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் ஆண்டுதோறும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதுமட்டும் தான் குழந்தைத் திருமணங்கள் உள்பட குழந்தைகளுக்கு எதிரான அத்தனை வன்முறைகளையும் கட்டுக்குள் கொண்டு வரும்,” என்கிறார் தேவநேயன்.