Call Me Chihiro: ‘அன்பென்னும் மழை’ சிஹிரோ | திரை தேவதைகள் 39

Call Me Chihiro: ‘அன்பென்னும் மழை’ சிஹிரோ | திரை தேவதைகள் 39
Updated on: 
7 min read

“அன்பென்பது ஓர் ஆன்மா இன்னொன்றுக்கு அளிக்கும் ஆழமான பரிசு. அது சம்பந்தப்பட்ட இரண்டு ஆன்மாக்களையும் பூரணமாக்கக் கூடியது.” - எங்கேயோ தற்செயலாக எனைக் கடந்து என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய வாசகம் இது.

அன்பைப் பற்றி நம் ஒவ்வொருவருக்குமே வெவ்வேறு புரிதல் இருக்கலாம். அதன் நீட்சியாக நாம் எப்போதெல்லாம் / யாரிடமெல்லாம் அன்பாக இருக்கிறோம் என்று பட்டியலிட்டால்... 1.நம் அன்புக்கு தகுதியானவர் என்று நாம் முடிவு செய்த நபர்களிடம், 2.நாம் அன்பானவர் என்ற நிரந்தர அடையாளம் பெற வேண்டும் என்று நாம் முயற்சிக்கும்போது, 3.நாம் ஒருவர் மீது அன்பாக இருந்தால் பதிலுக்கு அந்த நபரோ / இயற்கையோ / இறைவனோ / கர்மாவோ நமக்கு அதை வேறுவித நன்மையாக திருப்பித் தரும் என்ற எதிர்பார்ப்பு எழும்போது.

இதுபோன்று நீளக்கூடிய விளக்கப் பட்டியலில் அரிதாக நிபந்தனையற்ற, எதிர்பார்ப்பற்ற, தன்னலமற்ற அன்பைக் காண முடியும்.

அனைத்து உயிர்களும் இன்பமாக இருக்க வேண்டும் என்ற தூய எண்ணம்; பிறர் துயர் துடைக்க முயற்சிக்கும் இரக்க உணர்வு; பிறர் வெற்றி, மகிழ்ச்சியில் மகிழ்ச்சியடைவது; பற்றுதலும், எதிர்பார்ப்பும் இல்லாத நேசம் என்று அன்பை 4 படிநிலைகளில் விளக்கும் புத்த மதத்தின் கோட்பாடு எனக்கு நினைவுக்கு வருகிறது.

இந்த அத்தியாயத்தில் நாம் சந்திக்கவிருக்கும் தேவதை சிஹிரோவின் அன்பு இந்த 4 படிநிலைகளிலும் கச்சிதமாகப் பொருந்திப் போவதுபோல் எனக்குத் தோன்றியது.

‘Call Me Chihiro’ 2023-ல் வெளியான ஜப்பானிய மொழிப் படம். உங்களுக்கு ஸ்லோ பர்னர், டிராமா ஜானர் படம் பிடிக்கும் என்றாலோ, ‘இடி விழுந்து ரணமாகியிருக்கிறது என் மனது’ என்று நினைத்தாலோ இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பாருங்கள். 2 மணி நேரத்தில் படம் முடியும்போது ஒரு தியான வகுப்பில் மனம் சலவையானதுபோல் உணர்வீர்கள்.

வாருங்கள் சிஹிரோவின் அன்பெனும் மழையில் நனைந்து மகிழ்வோம்; மகிழ்ந்து தெளிவோம்.

ஜப்பானின் ஒரு சிறிய கடற்கரை நகரம்தான் கதைக்களம். படபடவென ஒலிக்கும் டிரம் இசையுடன் படம் தொடங்கும். கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள் நம் நாயகி சிஹிரோ. ஏதோ அழுத்தத்தில் இருந்து தன்னைத் தானே ஆசுவாசப்படுத்த முயற்சித் தோற்றுப்போனவள் போல் நமக்குத் தெரிவாள்.

ஜப்பானில் ‘பெண்டோ’ என்ற மதிய உணவுப்பெட்டி மிகப் பிரபலம். சமச்சீரான உணவு அந்தப் பெட்டியில் இருக்கும். அதைத் தயாரிக்கும் பெண்டோ ஷாப்பில் வேலை செய்கிறாள் சிஹிரோ. அதற்கு முன்னர் அவள் பாலியல் தொழிலாளியாக வேலை செய்திருப்பாள். அதை எங்கேயும் அவள் மறைப்பதில்லை, அதை வைத்து சீண்டும் ஆண்களையும் கூட புன்சிரிப்பால் புறந்தள்ளும் கெத்துக்காரி. பார்த்தவுடன் அவள் புன்னகை நம்மை தொற்றிக் கொள்ளும்.

அமைதியான ஊர், வேலை. பெரும்பாலும் அன்பு அக்கறை அடைமொழிகளுக்கு பொருந்தாத முதலாளித்துவம் என்றாலும் சிஹிரோ முதலாளி சம்பளத்துடன் அதையும் சேர்த்தே வழங்குபவர். பாலியல் தொழிலாளியாக இருந்த பெண்தான் என்றாலும் சீண்டுவதை ஊக்குவிக்காவிட்டால் ஒதுங்கும் ஆண்கள் என எல்லா நிம்மதியும் பெற்றவள் சிஹிரோ.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்கு நமக்கு அப்படித்தான் தோன்றும். ‘அவளுக்கென்ன அழகிய முகம், இளகிய மனம்’ என்று. கதைக்குள் செல்ல கொஞ்சம் பொறுமை அவசியம்.

சிஹிரோவின் சிறிய வாழ்க்கை வட்டத்துக்குள் சில மனிதர்கள் வந்து செல்வார்கள். அவர்கள் மூலம் தான் நாம் சிஹிரோவை அறிய முடியும்.

பூனைக்குட்டி தான் முதல் பிரவேசம். சாலையின் நடுவே தனியாகத் திரியும் பூனையை, பார்த்தவுடனேயே ‘மேடம்’ என்று பெயரிட்டு தத்தெடுத்துக் கொள்வாள் சிஹிரோ. அதனால் என்ன! பிராணிகள் ஆர்வலர் என்று நீங்கள் கடக்கலாம்.

நாய், பூனை அல்ல ஏதேனும் செல்லப் பிராணிகளிடம் அன்பு காட்டுபவர்களை பெரும்பான்மை சமூகம் எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமாகத் தான் பார்க்கிறது. உயிரில் மேல் என்றும் கீழ் என்றும் இருக்கிறதா என்ன?

சிஹிரோ கடையில் பூனை, வீட்டில் மீன் வளர்ப்பாள். தன் வழி வரும் மனிதர்களிடம் எல்லாம் அன்பு செலுத்துவாள்.

இன்னொரு நாள், அவள் வீடு செல்லும் வழியில் ஓர் ஆதரவற்ற முதியவரைக் காண்பாள். அவரை சீண்டிக் கொண்டிருக்கும் சிறுபிள்ளை கும்பலை விரட்டிவிட்டு விட்டு, ‘நீங்கள் இந்த ஊரா? என்ன பேரு? எங்க போறீங்க? என்று அவள் அடுக்கும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காத முதியவர் ‘என்னிடம் ஒரு பென்டோ இருக்கிறது. சாப்பிடுகிறீர்களா?’ என்றதும் பல்லில்லாத வாய்திறந்து பூச்செண்டாய் சிரிப்பார்.

ஆதரவற்றோருக்கு உணவு தருவதை ஒரு ஃபேஷனாகவும், விளம்பரமாகவும் செய்யும் உலக மக்கள் மத்தியில் சிஹிரோ மேலானவள். ரொம்பவே அழுக்காக இருக்கிறீர்கள், குளிக்கலாமா என்று அவரை குழந்தையை குளிக்கவைப்பதுபோல் குளிப்பாட்டிவிடுவாள்.

சிஹிரோவுக்கு பூனையும், முதியவரும் ஒன்றுதான். பூனை பேசாது. முதியவரால் பேச முடியாது. அவர்களிடத்தில் அவளுக்கு எதிர்பார்ப்பு என்று ஏதுமில்லை.

போகப்போக முதியவருடன் அன்பை வலுப்படுத்திக் கொள்ளும் சிஹிரோவுக்கு யாராலோ கைவிடப்பட்ட ஒரு வீட்டை காட்டித் தருவார் அந்த முதியவர். சில நாட்களில் அவர் இறந்துபோக, புத்தகங்கள் நிறைந்த அந்த வீடு அவளுக்கு அவர் விட்டுச் சென்ற ட்ரெஷர் ஹன்ட் மாதிரி ஆகிவிடும்.

அடுத்ததாக, சிஹிரோவின் அன்பு வளையத்துக்குள் மகோடோ சடாகே என்ற குட்டிப் பையன் வருவான். அவ்வப்போது ஏகாந்த நிலைக்குள் சென்றுவிடும் சிஹிரோவை சீண்டிப் பார்த்து, முட்டி மோதி நட்பாவான் மகோடோ. தொடக்கமே அதகளமாக இருக்கும்.

தனது கையில் காம்பஸால் குத்திக் காயப்படுத்தியிருந்தாலும் கூட தன் கடையிலேயே ஒரு பெண்டோ பெட்டியை வாங்கிக் கொடுத்து அவனை ஆசுவாசப்படுத்தாவள் சிஹிரோ.

தம்மை யாரேனும் காயப்படுத்தினால் அதில் உள்நோக்கம் இல்லாவிட்டாலும் கூட சின்னதாகவோ, பெரியதாகவோ அதைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் மனிதர்களில் பெரும்பாலானோரின் இயல்பு.

சிஹிரோ அந்த இயல்பைக் கடந்தவள். அதனால், தன்னை காயப்படுத்திய மகோடோவின் சேட்டைகளின் பின்னால் இருக்கும் தனிமையை இனம் கண்டு அவனை அரவணைக்கிறாள்.

அவனுக்கு சிஹிரோ கடத்தும் இரண்டு விஷயங்கள் நம் எல்லோருக்குமான வாழ்க்கைப் பாடம்.

‘உனக்கு முன் என்னை நிறையபேர் முதுகில் குத்தி காயப்படுத்தி இருக்கிறார்கள். பிடித்தவர்கள் தான் அதை அதிகமாகச் செய்திருக்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை’

’நீ யாரிடமாவது மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் அவர்களின் கண்களைப் பார்த்துக் கேள்’ - என்பாள்.

“எதிர்பார்ப்புடன் கூடிய அன்பு காயங்களையும் சேர்த்தே கொண்டு வரும்; மன்னிப்பையும் தலை நிமிர்ந்து கேள்” என்று ஒவ்வொரு குழந்தைக்கும் போதித்தால் உளவியல் ரீதியாக ஓர் ஆரோக்கியமான சிறார் சமூகத்தை உருவாக்கிவிடலாம் அல்லவா!

மகோடோவுடன் சிஹிரோ பயணப்பட்டுக் கொண்டிருக்கும்போது தான் ஒகாச்சி அறிமுகவாள். ஒகாச்சியை நான் தான் இந்த இடத்தில் குறிப்பிடுகிறேன். படத்தில் முதல் காட்சியிலிருந்தே அவள் நம் சிஹிரோவை ரகசியமாக பின்தொடர்பவளாக நமக்கு அறிமுகமாகிவிடுவாள்.

ஜப்பானிய குடும்ப அமைப்பு தந்தைவழி கூட்டுக் குடும்ப அமைப்பு. அங்கு தந்தையின் கட்டுப்பாடு மிகவும் கெடுபிடியானது. வார்த்தைகள், வன்முறைகள் அதிகம் இருக்காது ஆனால் பாரம்பரியம் என்பது கணவன் சம்பாத்திக்க வேண்டும், மனைவி சமைக்க வேண்டும், பிள்ளைகள் படிக்க வேண்டும், கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பைக் கொண்டது. காலப்போக்கில் இப்போதைய சூழலில் இதில் சில தளர்வுகள் இருந்தாலும் நம் படத்தில் வரும் ஒகாச்சி அந்த இறுக்கமான குடும்ப அமைப்பால் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பவள்.

நகரின் புகழ்பெற்ற பெண்டோ ஷாப் ஊழியரான சிஹிரோவின் புன்னகையும், சுதந்திரமும் தூரத்திலிருந்து காணும்போதே விடுதலை வாசத்தை ஒகாச்சிக்கு ஊட்டும். அதனாலேயே சிஹிரோவை அந்த டீன் ஏஜ் சிறுமி வளைத்து வளைத்து தன் செல்ஃபோனில் புகைப்படமாகப் பதிந்து கொள்வாள்.

முதன்முதலில் கடற்கரையில் சிஹிரோவை நெருங்கிப் பேசும் ஒகாச்சியிடம், அவளது தயக்கங்களை தகர்த்து குழந்தையை வெளிக் கொண்டுவரும் காட்சி அத்தனை அழகானது. சிஹிரோவுடன் நாமும் அந்தத் தண்ணீரில் கால் நனைத்ததுபோல் உணர்வோம். ஒகாச்சி வீடு போய் சேர்ந்து தன் கட்டிலில் படுத்திருக்கும்போது கூட தண்ணீரை காலால் உதைத்து விளையாடுவதுபோல் செய்து நகைப்பாள். படத்தில் அந்த ஒரு காட்சியில் மட்டும்தான் ஒகாச்சி அவள் வீட்டுக்குள் மனமார புன்னகைப்பதுபோல் இருக்கும்.

மீயூசியம் போன்ற நேர்த்தியும், விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் நிபந்தனைகளும் கொண்ட வீடு தான் ஒகாச்சியின் மனவலிக்குக் காரணம்.

குடும்பங்கள் வாழுமிடம் வெறும் வீடாக இல்லாது உணர்வுகள் சங்கமிக்கும் இல்லமாக இருக்க வேண்டும்.

ஒகாச்சியை உளவியல் ரீதியாக விடுவிக்க வேண்டும் என்று விரும்புவாள் சிஹிரோ.

“நாம் எல்லோரும் மனிதர்கள் உடலில் வாழும் ஏலியன்கள். இங்கே ஒவ்வொருவரும் வெவ்வேறு கிரகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் இங்கே ஒருவரை இன்னொருவர் புரிந்துகொள்ள முடியாமல் போவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. வேண்டுமென்றால் நம்மைப் போல் இன்னொரு கிரகம் இந்த உலகில் இருக்குமென்று நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்” என்று தான் நான் பாலியல் தொழிலாளியாக இருந்தபோது தன்னிடம் ஒரு வாடிக்கையாளர் சொன்னதாக ஒகாச்சியிடம் சிஹிரோ சொல்வாள்.

பதின்ம வயதில் அடையாளச் சிக்கல் எழுவது இயல்பு. பெற்றோர் நிழலில் இருந்து விலகி தங்களுக்கென்று ஓர் உலகை உருவாக்க விரும்புவார்கள். அப்போது பெற்றோர் அதிகாரத்தை தவிர்க்க வேண்டும்.

ஆனால், அதிகாரத்தை மட்டுமே செலுத்திப் பழகிய ஒகாச்சி குடும்பம் அவளது அடையாள சிக்கலை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சேர்ந்திருக்கும்.

அப்போது அவளை சரியான நேரத்தில் கரை சேர்த்திருப்பாள் சிஹிரோ. நம்மைப் போல் இன்னொரு கிரகம் இந்த உலகில் இருக்குமென்று நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவளுக்கு அறிவுரை சொன்னவள்.

முதியவர் அடையாளம் காட்டிய ட்ரஷெர் ஹன்ட்டுக்கு அவளை அனுப்பிவைப்பாள். அங்கே ஒகாச்சிக்கு நிகழ்வதை திரையில் காணுங்கள்.

முதியவர், மகோடோ, ஒகாச்சி என மூவருமே சிஹிரோவின் அன்பை அறிந்து குடைக்குள் அடைக்கலம் புகுந்த மழையாகியிருப்பார்கள். ஆம், கவிதை போல் தான் அவர்கள் பிணைப்பு இருக்கும்.

படத்தில் சிஹிரோவின் தோழியாக வரும் பாசில் மிக முக்கியமான கதாபாத்திரம். பாசிலாக நடித்தவர் வான் (Van) என்ற திருநங்கை. படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பார்.

சிஹிரோ பாசிலை தன் சகோதரி போல் பாவிப்பாள். அவளுடன் உணவருந்துவதும், உலாவுவதும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். காதல், கலவி என்று நிறைய விஷயங்கள் பற்றிப் பேசிக் கொள்வார்கள்.

“எனக்கு கண்மூடித்தனமான அன்பு தேவையில்லை. நான் எப்போதும் காதல் போதையில் மூழ்க விரும்பவில்லை. கலவி என்பது தவிக்கையில் தண்ணீர் அருந்துவது போல் இயல்பாக நடக்க வேண்டும். எனக்கே எனக்கு என்று நாம் யாருடைய இதயத்தையும் உரிமை கொண்டாட முடியாது. எனது இதயத்தையும் அப்படிப் பிடித்துவைக்க அனுமதிக்க மாட்டேன்” என்று சிஹிரோ பாசிலிடம் சொல்வாள்.

அன்பு, அக்கறை என்ற பெயரில் பெரும்பாலும் நாம் வெளிப்படுத்தும் மிகை உணர்வுகள் கட்டுப்பாடுகளாகவே இருக்கின்றன. உண்மையான அன்பு அதிகாரத்தின் நேரெதிர்.

அதுபோலவே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான அன்பை காதலின்பம் என்று மட்டும் சுருக்குவது அபத்தம் என்றும் சிஹிரோ சொல்லும்போது அன்பில் உயர்ந்து நிற்பாள்.

சிஹிரோ, ஒருநாள் தனது முன்னாள் முதலாளி உட்ஸுமியை சந்திப்பாள். உட்ஸுமி அவளை அவளது இயற்பெயர் அயா என்று அழைத்து நலம் விசாரிப்பார். அந்த சந்திப்பில் ஒரு தந்தை - மகளுக்கு இடையேயான பாந்தத்தை நம்மால் உணர முடியும்.

சிஹிரோ தன்னை கடப்பவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவக்கூடியவள். ஆனால் யார் மீது பற்றும் கொள்ளமாட்டாள், உரிமையும் செலுத்த மாட்டாள். முதியவர், சிறுவன் மகோடோ, சிறுமி ஒகாச்சி எல்லோரும் அவளால் விடுவிக்கப்பட்டவர்கள் என்பதில் பெருமிதம் கொள்ளமாட்டாள், மாறாக அவர்களின் மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சியைக் காண்பாள்.

ஆரம்பத்தில் சொன்னதுபோலவே அவள் அவ்வப்போது தனிமையுணர்வுக்குள் சென்றுவிடுவது உண்டு. அப்படியொரு நாள் அவள் ஆழ்ந்துபோன நிலையில் அவளது முன்னாள் முதலாளி இரவு உணவுக்கு அழைப்பார். அவரிடம் நான் கடலின் ஆழத்தில் இருக்கிறேன் என்று தன் மனநிலையைச் சொல்வாள்.

அப்போது அவர், “மனிதர்கள் எப்போதும் மிதக்க வேண்டும். அமைதியாக இருந்தால் நீ மிதப்பாய்; பதற்றமடைந்தால் நீ மூழ்கிவிடுவாய்” என்பார்.

எத்தனை ஆழமான அறிவுரை. துயரங்கள் அழுத்திக் கொண்டே தான் இருக்கும். அதை அமைதியாக அணுகும் மனப்பக்குவம் மட்டும் கிடைத்துவிட்டால் நாம் வெற்றியாளர் தான்.

பாலியல் தொழில் மையத்தை நடத்தியவர் வாழ்க்கையின் தத்துவத்தைப் பேசுவது முரணாகத் தோன்றினாலும் கூட முன்பு வந்த காட்சியில், “நிழல் உலக வாழ்க்கை பிடிக்கவில்லை” என்று அவர் கூறியதையும் இந்தத் தத்துவத்தையும் நீங்கள் பொருத்திக் கொள்ளலாம். உட்ஸுமியை சிஹிரோ தந்தையாகப் பார்ப்பாள்.

படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் டே. சிஹிரோ வேலை செய்யும் பெண்டோ கடை முதலாளி பிட்டோவின் மனைவி. அவருக்கு பார்வை குறைபாடு இருக்கும்.

தீர்வு கிட்டாத நோயருக்கு ஆறுதலளிப்பது என்பது சவாலானது. அவரின் நோய் அதனால் அவர் இழக்கக்கூடிய இயல்பு பற்றி எதுவும் மறந்தும் குறிப்பிடாமல் அந்தக் குறையுடன் வாழப் பழகத் தயார் படுத்த வேண்டும்.

பார்வை மங்கிவரும் டே-வை அப்படியான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்துவாள் சிஹிரோ.

டே-வை சிஹிரோ ஒரு மழை இரவில் காரில் அழைத்துச் செல்வாள். அங்கே ஒருவேளை தான் அவரின் மகளாக இருந்திருந்தாள் தன் வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்பவளிடம், “நீ இப்போது இருப்பதைவிட எந்தவகையிலும் சிறப்பாக இருந்திருக்க முடியாது என்பார்” டே.

சிஹிரோ அதுவரை அனுபவித்துவந்த தனிமையுணர்வின் பின்னணியில் இருந்தது தன் மீதான அடையாளமும் ஒன்று. முன்னாள் பாலியல் தொழிலாளி என்ற அடையாளம் அவளை விட்டுவிலகவில்லை. அதை ஏற்றுக்கொள்வது என்பது வெறும் வார்த்தைகளில் வெளியுலகுக்கு சொல்வது மட்டுமல்ல, மனதளவிலும். ஆம், நான் அன்று அப்படியிருந்தேன். இன்று வேறு நிலையில் இருக்கிறேன் என்று ஏற்றுக் கொள்ளுதல் என்ற புரிதலை உருவாக்குவார். அதேபோல் உன்னைத் துரத்தும் தனிமையுணர்வை நீ இடத்தை மாற்றுவதால் மட்டும் விரட்டிவிட முடியாது என்பார்.

ஒரு வகையில் சிஹிரோ, வாரி வழங்கிய நிபந்தனையற்ற எதிர்பார்ப்பற்ற அன்பு தான் அவளுக்கு டே-வின் வார்த்தைகள் ரூபத்தில் விடிவெள்ளியாக திரும்பி வந்திருக்கிறது. வேறு ஊர், வேறு தொழில் என்று தன்னை மாற்றிக் கொள்ளும் சிஹிரோ, புது முதலாளியிடம் தனது முந்தைய தொழில் பெண்டோ கடை ஊழியர் என்று விவரிப்பதோடு முடிந்துவிடுகிறது.

அன்பு மீது எந்த சாயமும் இல்லாதவர்கள் சிஹிரோவைப் போல் செல்லுமிடமெல்லாம் அன்பென்னும் மழையாய் பொழிந்துவிட்டு போகிறார்கள். அவர்கள் யாரையும் அன்பால் கட்டிப்போட முயல்வதில்லை, அரவணைத்து நனைய விடுவதோடு நின்றுவிடுகிறார்கள்.

|தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

‘திரை தேவதைகள்’ முதல் 25 அத்தியாயங்கள் இப்போது புத்தகமாக வெளியாகி இருக்கிறது. நூலை வாங்க விரும்புவோருக்கான இணைப்பு > திரை தேவதைகள்

Call Me Chihiro: ‘அன்பென்னும் மழை’ சிஹிரோ | திரை தேவதைகள் 39
Dorothy: சாதி, ஆண் திமிர் வளர்த்த பாலின பாகுபாட்டை தகர்த்த டோரதி | திரை தேவதைகள் 38

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in