

மதுரை: “பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்ப்பதில் தவெக அரசுக்கு எந்த சமரசமும் இல்லை” என காங்கிரஸ் முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாலர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெறும் கொலை, குற்றச்சம்பவங்கள் மற்றும் வன்முறை நிகழ்வுகள் வருந்தத்தக்கவை, கண்டிக்கப்பட வேண்டியவை. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1995-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்திலும் வேலூர் சிறையிலிருந்து 43 கைதிகள் தப்பிச் சென்றனர். தற்போதைய தேனி சம்பவத்தில் தப்பிய கைதிகள் 24 மணி நேரத்திற்குள் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறைத்துறை உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆங்காங்கே நடைபெறும் தனிப்பட்ட குற்றச் சம்பவங்களை மட்டும் வைத்து ஒட்டுமொத்தமாக சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் கூறுவது தவறு. மதம், சாதி மற்றும் இனக் கலவரங்கள், குழுக்களாக மோதிக்கொள்ளும் சம்பவங்களே சட்டம் - ஒழுங்கு பிரச்சினையின் முக்கியமான அடையாளங்கள் என்பது எனது கருத்து.
மின்தடை என்பது தற்போதைய ஆட்சியில் மட்டுமே நடைபெறும் நிகழ்வு அல்ல. அனைத்து ஆட்சிக் காலங்களிலும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதைய மின்சாரப் பற்றாக்குறைக்கு உடனடியாகப் பொறுப்பேற்க வேண்டியது தற்போதைய அரசு அல்ல. முந்தைய ஆட்சியில் முறையாகத் திட்டமிடப்படாததே தற்போதைய பற்றாக்குறைக்குக் காரணம். தொழிற்சாலைகள் மற்றும் எதிர்கால மின்தேவைகளைக் கணக்கிட்டு ஐந்தாண்டுத் திட்டமிடலுடன் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
பாஜக எதிர்ப்பில் சமரசம் இல்லை!
தலைமைத் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எங்களது தரப்பிலும் வலியுறுத்தியுள்ளோம். கொள்கை ரீதியாக பாஜகவை எதிர்ப்பதில் எந்த சமரசமும் இல்லை என்றும், அதே நேரத்தில் மாநில அரசின் நிர்வாகத்திற்காக மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுவதில் தவறில்லை.
மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவு என்பது கட்சிகளின் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டது. மாநிலத்தின் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீட்டிற்கும் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மேலும், அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் சட்ட விதிமுறைகளை மீறினால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். ஆளுங்கட்சி, கூட்டணிக் கட்சி எனப் பாராமல் அனைவருக்கும் பொதுவான முறையில் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.” என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.