

போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
சென்னை: ‘போதிய போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற, மலை மற்றும் உட்புறப் பகுதிகளில் பள்ளி நேரங்களுக்கு ஏற்ப காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்’ என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்: > அரசு பேருந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பேருந்துகளின் நிகழ்நேர கண்காணிப்பை மேம்படுத்தவும், 13,490 அரசு பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி மற்றும் அவசர உதவி பொத்தான்கள் ரூ.17.99 கோடி செலவில் பொருத்தப்படும்.
> அரசு போக்குவரத்து கழகங்களில் நிலுவையில் உள்ள 5,665 மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் ரூ.500.67 கோடியில் விரைந்து தீர்வு காணப்படும்.
> விபத்து மரண வழக்குகளில் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு விரைவான நிவாரணம் கிடைக்க, நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் மேற்கொள்ளும் குழுவின் நிதி வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.
> அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 35.03 ஏக்கர் பரப்பளவிலான பேருந்துப் பணிமனைகள் மற்றும் பேருந்து முனையங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.124.28 கோடி பயணக் கட்டணமில்லா வருவாய் கிடைக்கும் வகையில் பொது - தனியார் கூட்டாண்மை முறையில் நவீன பயணிகள் வசதிகள் மற்றும் வணிகப் பயன்பாடுகள் உருவாக்கப்படும்.
> மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பணிமனையில் இயங்கும் 40 பேருந்துகளில் எரிபொருள் சென்சார் மற்றும் டயர் காற்றழுத்த கண்காணிப்பு அமைப்பு முன்னோடி திட்டமாக ரூ.16.34 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
> மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 7 ஆண்டுகள் பழமையான நல்ல நிலையில் உள்ள 100 டீசல் பேருந்துகள் மின்சார பேருந்துகளாக மாற்றப்பட்டு இயக்கப்படும். அதற்கு தேவையான மின்சாரக் கட்டமைப்பு வசதிகள் ரூ.13.60 கோடியில் ஏற்படுத்தப்படும்.
> போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தலா 8 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 16 பேர் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு, விருது வழங்கும் திட்டம் ரூ.10 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.
> போதிய போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற, மலை மற்றும் உட்புறப் பகுதிகளில் பள்ளி நேரங்களுக்கு ஏற்ப காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
> தமிழகம் முழுவதும் பயணிகளின் எளிதான, விரைவான மற்றும் பாதுகாப்பான கட்டண பரிவர்த்தனை வசதியை ஏற்படுத்த, தற்போது சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் நடைமுறையில் உள்ள ‘சிங்கார சென்னை’ தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
> திண்ணை (ThinnAI) - சாலை பாதுகாப்பு தொடர்பான செயற்கை தள பயிற்சி அறிமுகப்படுத்தப்படும். வாகனங்களில் டேஷ்போர்டு கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமுறைகள் அமலாக்கம் செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும்.
> சென்னை மந்தைவெளியில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் நாமக்கல் பரமத்திவேலூரில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் கட்டப்படும்.