

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திருவள்ளூர் விபத்தில் சிக்கியவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சைப் பிரிவு.
படம்: ஆர்.ரகு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டத்தில் பலி 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பகுதியில் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜோசப் ஜெகன், மோகன் ஆகியோர் இதை நடத்தி வருகின்றனர். இங்கு இரவு, பகல் என 2 ஷிப்ட்களில் 200-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
நேற்று காலை வழக்கம்போல சுமார் 120 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குளிர்சாதனப் பிரிவில் பயன்படுத்தப்படும் அமோனியா வாயு கசிந்துள்ளது. சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதும் வாயு பரவியதால் தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதில் 60 பெண்கள், 5 ஆண்கள் என மொத்தம் 65 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். சிலருக்கு வாய், மூக்கு, கண், காதுகளில் ரத்தக் கசிவும் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. பெரியபாளையம் போலீஸார், தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் பல்வேறு வாகனங்கள் மூலம் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பெரிதும் பாதிப்புக்கு உள்ளான 7 தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 9 பேர் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் என மூன்று பேர் உயிரிழந்தனர்.
இதனயைடுத்து திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 10-க்கும் மேற்பட்டோர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
விதி எண் 110-ன் கீழ் விளக்கம்: இதற்கிடையில் தமிழக சட்டப்பேரவையில் திருவள்ளூர் விபத்து குறித்து இன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் விதி எண் 110-ன் கீழ் விளக்கமளிக்கையில், "திருவள்ளூர் அமோனியா வாயு கசிவால் 70 பெண்கள், 4 ஆண்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 36 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 27 பேர் சாதாரண சிகிச்சையில் உள்ளனர். இதில் 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த தொழிலாளர்களின் உடல் அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கான செலவை அரசே மேற்கொள்ளும். தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
அப்போது அமைச்சரின் விளக்கத்துக்கு முன்னதாகவே தங்களைப் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரி திமுக, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனாால் அவையில் சிறிதுநேரம் சலசலப்பும் ஏற்பட்டது.
3 பேர் கைது: அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக, ஆலை உரிமையாளர் மோகன், அவரது சகோதரர் ஜோசப் ஜெகன், மேலாளர் டேனியல் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.