

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் அறங்காவலர் குழு தலைவர் சண்முகசுந்தரம் வீட்டின் முன்பு போராட்ட அறிவிப்பு மற்றும் தொலைபேசி மிரட்டலால் அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நவ.24-ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றவி்ல்லை. இது பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு, மதுரை ஆட்சியர், அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளன. சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆட்சியர் பங்களா மற்றும் திருநகரில் உள்ள அமைச்சர் வீடு, அலுவலகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்கெனவே போடப்பட்டுள்ளது.
இதனிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதைத் தவிர்த்துவிட்டு, திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படியே மலையிலுள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது என கோயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
அறங்காவலர் குழு தலைவரை கண்டித்து போராட்டம் அறிவிப்பு போஸ்டர் | மதுரை ஆட்சியர் வீட்டில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு
இதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சண்முக சுந்தரத்துக்கு செல்போனிலும், சமூக வலைத்தளங்களிலும் அவரை சிலர் விமர்சித்தும் மிரட்டல் விடுக்கின்றனர்.
மேலும், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சண்முக சுந்தரத்தின் நிலைப்பாட்டை கண்டித்து அவரது வீட்டுக்கு முன்பு அறவழி போராட்டம் நடத்தப்படும் என அகில பாரத அனுமன் சேனா அமைப்பு இன்று அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக சண்முக சுந்தரம், காவல் ஆணையர் மற்றும் திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து திருநகர் பாண்டியன் நகரில் உள்ள அவரது வீட்டுக்கும், அடுத்த தெருவிலுள்ள அவருடைய அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்.