தமிழகத்தில் மத்திய அமைச்சர்களின் நிகழ்வுகளை புறக்கணிக்க காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தல்

தமிழகத்தில் மத்திய அமைச்சர்களின் நிகழ்வுகளை புறக்கணிக்க காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தல்
Updated on: 
1 min read

தஞ்சாவூர்: “தமிழகத்துக்கு காவிரி நீர் பெற்றுத் தராத மத்திய அரசை கண்டிக்கும் விதமாக மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் பங்கேற்கும் நிகழ்வுகளை தமிழர்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர் புறக்கணிக்க வேண்டும்” என காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், கர்நாடகாவின் காவிரி திருட்டை தடுப்போம் என்ற பெயரில் பேரணி நடைபெற்றது. திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்று பாலத்தின் வடகரைலிருந்து தொடங்கிய பேரணி கடை வீதி, பேருந்து நிலையம் வழியாக கூட நானல் சாலை சந்திப்பில் நிறைவடைந்தது.

பேரணியை காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தொடங்கி வைத்து கூறியது: “கர்நாடக அரசு காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திருட்டை மேற்கொண்டு வருகிறது. காவிரி நீர் தொடர்பாக பல்வேறு பொய் தகவல்களை கர்நாடகா அரசு தெரிவித்து வருகிறது. கர்நாடகா அரசுக்கு ஆதரவாக மத்திய அரசும், பிரதமரும் செயல்பட்டு வருகின்றனர்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் கர்நாடக அரசு முறையாக செயல்படுத்தவில்லை. இதை செயல்படுத்துமாறு பிரதமரும் கர்நாடக அரசை கண்டிக்கவில்லை. தற்போது காவிரி டெல்டாவில் போதிய தண்ணீர் இல்லாமல் நெற் பயிர்கள் காய்ந்து வருகிறது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முன்வர வேண்டும்.

தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத்தராத மத்திய அரசை கண்டிக்கும் விதமாக மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் பங்கேற்கும் நிகழ்வுகளை தமிழர்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர் புறக்கணித்து அவர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்ட வேண்டும்” என மணியரசன் தெரிவித்தார். இந்தட்ப் போராட்டத்தில் கர்நாடகா அரசு, மத்திய அரசுக்கு எதிராக பேரணியில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.

தமிழகத்தில் மத்திய அமைச்சர்களின் நிகழ்வுகளை புறக்கணிக்க காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தல்
நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாகவே நெல் கொள்முதல் செய்ய அரசுக்கு தினகரன் வலியுறுத்தல்

X