

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப். 23-ம் தேதியும் அதற்கு முன்பாக 2 நாட்கள் ஏப்.21, 22-ம் தேதி எனத் தொடர்ந்து 3 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி வாக்குப்பதிவுக்கு முன் 3 நாட்கள் கடைகள் முடப்பட்டபோது கடந்த 20-ம் தேதி மட்டுமே ரூ.400 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக விற்பனை நடைபெறும்.
கடைகள் மூடப்படுவது தெரிந்தால் அன்றைய நாளுக்கும் சேர்த்து முந்தைய நாளே மதுப்பிரியர்கள் வாங்கி வைத்துக்கொள்வார்கள். அதன்படி நேற்று ஏராளமானோர் மதுக்கடைகளில் குவிந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
ஒரு சிலர் இதைப் பயன்படுத்தி கள்ளத்தனமாக மது விற்பனை செய்யலாம் என்பதால் அதைத் தடுக்க கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.