

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: வழிகாட்டி மதிப்பை வரையறுக்கும் அதிகாரம் சார் பதிவாளர்களுக்கு இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை அப்துல் கலாம் அறிவியல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் அபெல் மூர்த்தி, திருமங்கலம் காசிமாயன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: விவசாய நிலங்கள் விற்பனை செய்யப்படும்போது சந்தை மதிப்பைவிட வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இதனால் விவசாய நிலங்களை கூடுதல் விலைக்கு வாங்க யாரும் முன்வருவதில்லை. விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன.
எனவே, கிராமங்களில் விவசாய நிலத்தின் வழிகாட்டி மதிப்பை தேவையில்லாமல் உயர்த்துவதை முறைப்படுத்தவும், சட்டவிரோதச் செயல்பாடுகளில் இருந்து விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கவும், நிலத்தின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தி பத்திரப்பதிவு கட்டணம் பெறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர்.
மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் மனுதாரர் குற்றச்சாட்டுகளுக்கு சான்றுகளை தாக்கல் செய்யவில்லை. பதிவுக்குப் பிறகு சார் பதிவாளர் அனுப்பிய அறிவிப்பு ஆதாரமாக அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 2018-ல் பதிவு செய்த ஆவணம் 2025-ல் துறைசார் தணிக்கை செய்யப்பட்டபோது முத்திரைதாள் கட்டணம், பதிவுக் கட்டணம் குறைவாக வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. கட்டணப் பாக்கியை வசூலிக்க அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே சட்டப்படி எடுக்கப்பட்ட நிலைப்பாடு உள்ளது. கிரையம், உரிமை மாற்றம், பரிமாற்றம், தானம், உரிமை விடுவிப்பு, பினாமி உரிமை தீர்வு உள்ளிட்ட முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தப்பட வேண்டிய ஆவணம் பதிவுக்கு வழங்கும்போது, ஆவணத்தில் சொத்தின் சந்தை மதிப்பு உண்மையாக குறிப்பிடப்படவில்லை என பதிவு அதிகாரி கருதினால் ஆவணத்தைப் பதிவு செய்யலாம். பின்னர், இந்திய முத்திரைத்தாள் சட்டத்தின் பிரிவு 47 ஏ-ன் கீழ் சொத்தின் சந்தை மதிப்பையும் அதற்கான சரியான முத்திரைத்தாள் கட்டணத்தையும் தீர்மானிக்க மாவட்ட ஆட்சியரின் (முத்திரைத்தாள் பிரிவு) பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும்.
ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தை மதிப்பின் துல்லியம் குறித்து பதிவு செய்யும் அதிகாரிக்கு தொடக்கத்திலிருந்தே சந்தேகம் எழுந்தால், பதிவு செய்யும் நிலையிலேயே அதிக முத்திரைத்தாள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என வலியுறுத்த அவருக்கு அதிகாரம் இல்லை. பதிவு அதிகாரிக்கு உள்ள ஒரே வழி ஆவணத்தைப் பதிவு செய்துவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் (முத்திரைத்தாள் பிரிவு) பரிந்துரைப்பது மட்டுமே ஆகும். இதன்படி வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் அதிகாரம் பதிவு அதிகாரிக்கு இல்லை. வழிகாட்டி மதிப்புகளை நிர்ணயிக்கும் அல்லது திருத்தி அமைக்கும் அதிகாரம் அதற்கான குழுவிடம் மட்டுமே உள்ளது.
ஆவணம் பதிவு செய்யப்பட்டு 3 ஆண்டுக்குள் பற்றாக்குறையான முத்திரைத் தாள் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். அதற்குப் பிறகு சட்டப்படி எந்தவொரு வசூல் நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. இதனால் மனுதாரர் கோரிக்கை தொடர்பாக வேறு உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை. நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களையும், சட்ட விதிகளையும் சார் பதிவாளர்கள் சட்டப்படி பின்பற்ற வேண்டும். மனு முடிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.