“முட்டாள்தனமான விதிமீறல்!” - ஹார்முஸ் ஜலசந்தியில் ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு ட்ரம்ப் கடும் கண்டனம்

“முட்டாள்தனமான விதிமீறல்!” - ஹார்முஸ் ஜலசந்தியில் ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு ட்ரம்ப் கடும் கண்டனம்
Updated on
2 min read

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். 

ஈரானின் இந்த நடவடிக்கை இருதரப்பு அமைதி ஒப்பந்தத்தை முட்டாள்தனமாக மீறும் செயல் என்றும் அவர் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.  

ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்ற கப்பல்களைக் குறிவைத்து, ஈரான் குடியரசு குறைந்தது நான்கு தற்கொலைப்படை ட்ரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒரு ட்ரோன், மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க ஒரு சரக்குக் கப்பலின் மேல் தளத்தைத் துல்லியமாகத் தாக்கியுள்ளது. இதனால் கப்பலுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அது தனது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

எஞ்சிய மூன்று ட்ரோன்களை எங்கள் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன. இது நிச்சயமாக எங்களின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் முட்டாள்தனமாக மீறியுள்ளதைக் காட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.  

ட்ரம்ப் குறிப்பிட்ட கப்பலின் பெயரைத் தனது பதிவில் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், தைவானைச் சேர்ந்த பிரபல கப்பல் போக்குவரத்து நிறுவனமான எவர்க்ரீன் மெரைன் இதுகுறித்து அதிகாரபூர்வ விளக்கமளித்துள்ளது. தங்களுக்குச் சொந்தமான, சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த எவர் லவ்லி என்ற கன்டெய்னர் கப்பல், ஓமன் கடற்பரப்புக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் சென்றபோது அடையாளம் தெரியாத பொருள் ஒன்றால் தாக்கப்பட்டது உண்மைதான் என்று அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இத்தாக்குதலில் கப்பலின் மேல் தளத்தின் சில ஜன்னல்கள் சேதமடைந்த போதிலும், கப்பலில் இருந்த 21 ஊழியர்களுக்கும், உள்ளே இருந்த சரக்குகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், கப்பல் பாதுகாப்பாகத் தனது பயணத்தைத் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த வாரம் தான் 60 நாட்களுக்கான தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு வணிகக் கப்பல் மீது நடத்தப்படும் முதல் தாக்குதல் இது என்பதால்,ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஐநா சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு தனது மீட்புப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.  

மறுபுறம், ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசிம் கரீபாபாடி, ஈரானின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியின்றி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பலின் பாதுகாப்பிற்கும் தங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று எக்ஸ் பக்கத்தில் எச்சரித்துள்ளார். 

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ “ஈரான் தொடர்ந்து கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தினால், அது மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்துள்ள சூழலில், இந்த ட்ரோன் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையேயான இறுதி அமைதிப் பேச்சுவார்த்தையைப் பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

“முட்டாள்தனமான விதிமீறல்!” - ஹார்முஸ் ஜலசந்தியில் ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு ட்ரம்ப் கடும் கண்டனம்
இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து அணி முதல்முறை வரலாற்று வெற்றி | T20i

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in