மிசா தழும்பை அடையாளமாக கொண்ட தலைவர் ஸ்டாலின் மட்டும் தான்: திமுக

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

Updated on
2 min read

சென்னை: “இந்தியாவிலேயே மச்சத்தை தாண்டி மிசா தழும்பை அடையாளமாக காட்டுகிற ஒரே அரசியல் தலைவர் ஸ்டாலின் தான். ஓராண்டு காலம் ஸ்டாலின் மிசா கைதியாக சிறைச்சாலையில் இருந்தார்” என திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு சட்டப்பேரவையை திரைப்பட அரங்கமாக மாற்றிய பெருமை வரலாறு இந்த தவெக அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போதும் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிற பொழுது, அந்த மானிய கோரிக்கையில் பேசுகிற சட்டப்பேரவை உறுப்பினருடைய கருத்துகளை உள்வாங்கி கொண்டு அதற்கான பதிலை அமைச்சர்கள் கொடுப்பதும், புதிய அறிவிப்புகளை வெளியிடுவதும் தான் இதுவரை இருந்த சட்டப்பேரவை மரபு.

ஏற்கனவே இருந்த தமிழக முதல்வர்கள் எல்லாம் காவல் துறை, உள்துறை உட்பட அவர்கள் வகிக்கிற துறைகளில் வரக்கூடிய மானிய கோரிக்கை மீது எதிரே இருக்கக் கூடிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் உரையாற்றுவதை எல்லாம் குறிப்பெடுத்து கொண்டு இறுதியாக பதிலளிப்பார்கள்.

காவல் துறை மானியக் கோரிக்கையில் எதிர்கட்சித் தலைவர் உட்பட 13 பேர் உரையாற்றினார்கள். ஒரு முதல்வராக இருக்கிறவர் காவல் துறை மானியத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கிறவர் 13 சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்ன பேசினார்கள்? இந்த அரசின் மீது என்ன குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார்கள்? அதற்கு எந்த வகையில் பதில் கொடுக்க வேண்டும் என்பதுதான் இவ்வளவு காலம் முதல்வர்கள் பார்த்த வேலை.

ஆனால் எப்படி எதிர்க்கட்சியை ட்ரிக்கர் பண்ணலாம், எப்படி கன்டென்ட் ரீல்ஸுக்கு கொடுக்கலாம், எவ்ளோ ரீல்ஸ் நம்ம டெலிவரி பண்ணலாம் இதை மட்டுமே மையமாக வைத்துக்கொண்டு முதல்வர் விஜய், எதிர்கட்சி தலைவர் எழுப்பிய 15 கேள்விகளில் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாமல் தொடை நடுங்கி ஓடிவிட்டார் .

எதிர்கட்சிகள் யார் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லாமல், முதல்வர் விஜய் அவராக தயாரித்து கொண்டு வந்திருக்கக் கூடிய அந்த டயலாக்கை உச்சபட்ச ஆக்ரோஷத்தில சினிமா கிளைமாக்ஸில் பேசுவது மாதிரி நடித்துவிட்டு போனார். இதனால யாருக்கு என்ன லாபம்?

மிசாவை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி முதல்வர் விஜய்க்கு இருக்கிறது. ஓர் உடல்மொழி வேற காட்டுகிறார். அந்த மிசாவில் பல வழக்குகளில் கைது செய்வார்கள் என்று இன்று ஒரு அறிவு ஜீவி சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசுகிறார்.

மிசா என்றால் என்னவென்று இவர்களுக்கு தெரியுமா? மெயின்டனன்ஸ் ஆப் இன்டர்னல் செக்யூரிட்டி ஆக்ட். உள்நாட்டினுடைய பாதுகாப்பை உறுதி செய்ய போடப்பட்ட ஒரு ஒரு சட்டம் அது. இந்திரா காந்தி எமர்ஜென்சி டிக்ளேர் செய்தபோது மிசாவில் எல்லா அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள். அதை எவ்வளவு கொச்சையாக பேசுகிறார் இந்த நிர்மல் குமார்.

“பெண்கள் குற்றங்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்கிறார்கள், வழிப்பறி, திருட்டில் கைது செய்தார்கள்” என்று சொல்கிறீர்களே. மிசா-வில் யாரைக் கைது செய்ய முடியும்? இந்தியாவுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தக் கூடிய வகையில் இருந்தால் கைது செய்யப்படுவார்கள். உள்நாட்டில் கலவரங்களை ஏற்படுத்துவது, சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது அல்லது குந்தகம் விளைவிப்பது போன்ற காரணங்களுக்காக கைது செய்வார்கள்.

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்திருந்தால் கைது செய்வார்கள். பொது ஒழுங்குக்காக கைது செய்வார்கள். இப்படிப்பட்ட கைதுகளுக்குத்தான் மிசா இருக்கிறதே தவிர, நிர்மல் குமார் சொல்கிற மாதிரி பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குக்கோ, வழிப்பறிக் கொள்ளைக்கோ அல்ல. மிசாவுக்கு அர்த்தம் தெரியாமலயே ஒரு சட்டப்பேரவையில் ஒரு சட்ட அமைச்சர் இருப்பது கேவலம்.

மிசா கைதியாக இருந்து துன்புறுத்தப்பட்டவர்கள் தாக்குதலுக்கு ஆளானதை விசாரிப்பதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி இஸ்மாயில் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் யார் யாரெல்லாம் இதில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டார்கள் என சொல்லப்பட்டது. ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன், என்விஎன் சோமு, என்விஎன் செல்வம் கைது செய்யப்பட்டார்கள் என சொல்லப்பட்டுள்ளது. நான் ஆதாரத்தை தருகிறேன்.

ஸ்டாலின் கையில் ஒரு தழும்பு உள்ளது. இந்திய நாட்டினுடைய வரலாற்றுல ஓர் அரசியல் தலைவருக்கு மச்சத்தை தாண்டி மிசா தழும்பை அடையாளமாக காட்டுகிற ஒரே தலைவர் ஸ்டாலின் தான். ஓராண்டு காலம் ஸ்டாலின் மிசா கைதியாக சிறைச்சாலையில் இருந்தார்.

ஒரு முதல்வருடைய பையனாக அவருக்கு சல்யூட் அடிச்ச போலீஸ்காரர்கள் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார்கள். சிறையில் பல கொடுமைகளை அனுபவித்தார். இந்த வரலாறு யாருக்காவது உள்ளதா? விஜய்க்கு என்ன வரலாறு இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

<div class="paragraphs"><p>திமுக தலைவர் ஸ்டாலின்</p></div>
“மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை” - பேரவையில் நிர்மல் குமார் பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in