

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு பெடல் தறிகளில் புதிய ரக சேலை உற்பத்திக்கு அச்சு கோக்கும் பணிக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறையால் 50 சதவீதம் தறிகளில் சேலை உற்பத்தியை தொடங்க முடியாமல் நெசவாளர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசு 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு புதிய ரக சேலை வழங்கப்படும் என அறிவித்தது. அதில் பாவுக்கு பாலிகாட்டன் கிரே கலர் நூல், ஊடைக்கு 60 எஸ் சாயமிடப்பட்ட காட்டன் நூல், சரிகைக்கு சில்வர் அல்லது தங்க நிறத்தில் 250 டிபிஎம் பாலியஸ்டர் நூல் பயன்படுத்தி புதிய வடிவமைப்புடன் சேலை உற்பத்தி செய்ய ஜூலை 1-ம் தேதி அரசாணை வெளியிட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் 29 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 3,500-க்கும் அதிகமான தறிகளில் தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு வழங்கும் சேலை உற்பத்தி செய்யப்படுகிறது.
புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம் செய்ய வேண்டும், இருப்பில் உள்ள பழைய ரக சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும், புதிய ரக சேலை உற்பத்திக்காக தறிகளில் செய்யும் மாற்றத்துக்கான செலவுகளை அரசு ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட நெசவாளர்கள் நடத்திய போராட்டம் 3 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்தது.
பழைய ரக சேலை கொள்முதல் செய்ய தொடங்கியதை அடுத்து, தறிகளில் மாற்றம் செய்து செப்டம்பர் இறுதி வாரத்தில் நெசவாளர்கள் புதிய ரக சேலை உற்பத்திக்கு நூல் எடுத்து பணிகளை தொடங்கினர். ஆனால், தறிகளில் அச்சு மற்றும் ஐஸ் நூல் கோக்க வேலை தெரிந்த பணியாளர்கள் பற்றாக்குறையால் 50 சதவீததுக்கும் மேற்பட்ட தறிகளில் பாவு நூல் ஏற்ற முடியாமல் நெசவாளர்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் 3,500-க்கும் மேற்பட்ட பெடல் தறிகள் உள்ள நிலையில், 1500 தறிகளில் மட்டுமே புதிய ரக சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 29 கூட்டுறவு சங்கங்களுக்கு 8.75 லட்சம் சேலைகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கைத்தறித் துறையினர் அச்சு கோக்கும் பணிக்கு வெளி மாவட்டங்களில் இருந்து பணியாளர்களை கொண்டு வந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.