சென்னை: பிரபல குளிர்பான நிறுவனமான டெய்லி ஃபிரெஷ் ஃபுரூட்ஸ் இந்தியா நிறுவனம், கடந்த 18 ஆண்டுகளாக குளிர்பானங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் கீழ் டெய்லி (Dailee), ஜிந்தா (Jinthaaa), மெரிபா (MERIBA), அக்னி (AGNEE) உட்பட மொத்தம் 10 பிராண்டுகளில் பல்வேறு வகையான குளிர்பானங்கள் தயாரிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனத்தின் விற்பனை முகவராகச் செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த வி.செந்தில் குமார் (ஆர்.சி.டிரேடர்ஸ்) என்ற விற்பனை முகவர், டெய்லி ஃபிரேஷ் நிறுவனத்திலிருந்து குளிர்பானங்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும், பின்னர் 2024-ம் ஆண்டு அந்த நிறுவனத்துடன் இருந்த வணிகத் தொடர்பை நிறுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் வி.செந்தில் குமார், டெய்லி ஃபிரேஷ் நிறுவனத்தின் டெய்லி தயாரிப்புகளைப் போலவே தோற்றமளிக்கும் லேபிள் மற்றும் பாட்டில்களை வடிவமைத்து தயாரித்து, டெய்லி பிராண்ட் வாடிக்கையாளர்களைக் குழப்பும் வகையில் ‘கூல் டிரிங்கி’ மற்றும் ‘சில்க்’ என்ற பெயர்களில் குளிர்பானங்களை சந்தையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து டெய்லி ஃபிரேஷ் நிறுவனம் தனது வர்த்தக அடையாளம் (Trade Mark & Copyright) மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை பாதுகாக்கும் நோக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டெய்லி நிறுவனத்தின் லேபிள்களை போலவே வி.செந்தில் குமார் தவறான உள்நோக்கத்துடன் தயாரித்து விற்பனை செய்த குளிர்பான மாதிரிகளை ஆய்வு செய்து, அவை டெய்லி ஃபிரேஷ் தயாரிப்புகளைப் போலவே வடிவமைக்கப்பட்டு நுகர்வோருக்கு குழப்பம் ஏற்படுத்தி வர்த்தக லாபம் ஈட்டியதை உறுதி செய்தது.
இதன் அடிப்படையில் ஆர்.சி.டிரேடர்ஸ் நிறுவனம் கூல் டிரிங்கி தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்தது.
மேலும் சில்க் என்ற பெயரில் டெய்லி ஃபிரெஷ் குளிர்பான பிராண்டுகளின் லேபிள் போன்று தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த தீர்ப்பு, வர்த்தக அடையாள பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலனை உறுதிசெய்யும் வகையில் முக்கியமான தீர்ப்பாகக் கருதப்படுகிறது.