

பால்கனகராஜ், அறிவழகன்
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (எம்எச்ஏஏ) புதிய தலைவராக பாஜக மாநிலத் துணைத் தலைவராக பதவி வகிக்கும் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் 5-வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதேபோல செயலாளர் பதவிக்கு தவெக-வைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.அறிவழகன் தேர்வாகியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் சுமார் 20 ஆயிரம் வழக்கறிஞர்களை உறுப்பினர்களாக கொண்ட பாரம்பரியமிக்க, மிகப்பெரிய வழக்கறிஞர்கள் சங்கமான சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (எம்எச்ஏஏ) தேர்தல் கடந்த ஏப்.29 அன்று நடந்தது.
இதில் தங்களது நிலுவைக் கட்டணத்தை முறையாக செலுத்தி உறுப்பினர் பதிவை புதுப்பித்த 5 ஆயிரத்து 902 பேருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 353 வாக்குகள் பதிவானது.
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக மாநிலத் துணைத் தலைவரான ஆர்.சி. பால்கனகராஜ் ஆயிரத்து 892 வாக்குகள் பெற்று மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சங்கத்தின் முன்னாள் செயலாளரான ஆர்.கிருஷ்ணகுமார் ஆயிரத்து 307 வாக்குகள் பெற்று இரண்டாமிடமும், பார் கவுன்சில் உறுப்பினரான எம்.வேல்முருகன் 860 வாக்குகள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர்.
இதேபோல செயலாளர் பதவிக்கு போட்டியி்ட்ட தவெக வழக்கறிஞரணி மாநில ஒருங்கிணைப்பாளரும், சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவருமான எஸ். அறிவழகன் வெற்றி பெற்றார்.
இதேபோல துணைத் தலைவர் பதவிக்கு சசிக்குமாரும், பொருளாளர் பதவி்க்கு ஜி.ராஜேஷூம் வெற்றி பெற்றனர். மற்ற பதவிக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.
தலைவராக மீண்டும் தேர்வாகியுள்ள ஆர்.சி,பால்கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “என் மீது நம்பிக்கை வைத்து ஆசியாவிலேயே மிக பழமையான இந்த வழக்கறிஞர்கள் சங்கத்தில் என்னை 5-வது முறையாக தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
வழக்கறிஞர்களின் நலன் தான் முக்கியம். அரசியலுக்கு இந்த சங்கத்தில் எந்த வேலையும் இல்லை. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு வழக்கறிஞர்களின் குரலாக நடுநிலைமையுடன் செயல்படுவேன் என்றார்.