

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பூஜை உள்ளிட்ட தர்ம காரியங்களுக்கென வழங்கிய ரூ.60 கோடி மதிப்புள்ள அறக்கட்டளை சொத்துகள் அபகரித்த வழக்கில் ராமநாதபுரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளரை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகர் கோயில் பூஜை மற்றும் தர்ம காரியங்களுக்கு புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி துரைராஜா, துரைராணி அறக்கட்டளை மூலம் 1930-ம் ஆண்டு வழங்கிய மதுரையிலுள்ள ரூ.60 கோடி (தற்போதைய மதிப்பு) 1.79 ஏக்கர் இடத்தை முறைகேடாக பட்டா மாறுதல் செய்து பத்திரம் பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை கொடுத்த புகாரின்பேரில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வெள்ளைச்சாமி என்பவரின் மனைவி ராமாயி, அவரது மகன்கள் ராஜ்குமார், ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், மதுரை பிபீகுளம் முன்னாள் விஏஓ அரசன், முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், முன்னாள் சார் பதிவாளர்கள் அனந்த ராமன், பிரசாந்த் சந்தன கருப்பன், உசிலம்பட்டி இளையராஜா உட்பட 19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான ஆவணங்களை சேகரித்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் முறைகேட்டாக பட்டா பெற்று அபகரித்த வழக்கில் ராஜ்குமார், இதற்கு முக்கிய நபராக இருந்த உசிலம்பட்டி இளையராஜா ஆகியோர் ஏற்கெனவே கைதான நிலையில், வழக்கில் தொடர்புடைய முன்னாள் வட்டாட்சியர், தற்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக இருக்கும் (நில எடுப்பு பிரிவு) அன்பழகனை இன்று கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.