

சென்னை: காவிரி பிரிக்கும் சுவரல்ல; இணைக்கும் பாலம் என கர்நாடக முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எழுதிய கடிதத்தின் விவரம்: தமிழகமும் கர்நாடகமும் சகோதர மாநிலங்கள். காவிரி விவகாரம் குறித்துப் பேச தமிழக முதல்வரை முதலில் அழைத்துவிட்டு, பின்னர் அவர் கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என்று கூறியது 8 கோடி தமிழக மக்களை அவமதிக்கும் செயல்.
கடந்த 2009-ல் எடியூரப்பாவும், கருணாநிதியும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையையும், சென்னையில் சர்வக்ஞர் சிலையையும் திறந்து வைத்து கலாச்சார ஒற்றுமையை நிலைநாட்டினர். அத்தகைய முதிர்ச்சியை இன்றைய முதல்வர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நீரையே வழங்க மறுக்கும் கர்நாடகா, மேகேதாட்டுவில் பெரிய அணையைக் கட்டினால், தமிழகத்தின் உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்படும். தண்ணீர் பற்றாக்குறையால் தமிழகத்தில் குறுவை சாகுபடி பரப்பு 4.4 லட்சம் ஏக்கரில் இருந்து 3.47 லட்சம் ஏக்கராகக் குறைந்துள்ளது. அரிசி விலை கிலோவுக்கு 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது சாதாரண குடும்பங்களைப் பாதித்து வருகிறது.
காவிரிப் படுகையில் நிலவும் நீர் நெருக்கடியைத் தீர்க்க 3 தீர்வுகளை முன்வைக்கிறேன். முதலாவது, கர்நாடகாவில் வீணாக அரபிக் கடலில் கலக்கும் மேற்கு நோக்கிப் பாயும் நதிநீரின் ஒரு பகுதியை பெங்களூருவின் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்த தேசிய அளவிலான திட்டத்தை முன்மொழிய வேண்டும். இரண்டாவது, கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணார் - காவிரி நதி இணைப்புத் திட்டத்துக்கு கர்நாடகா முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மூன்றாவது, மேட்டூருக்கு மேலே தமிழக எல்லைக்குள் ராசிமணலில் ஒரு சமநிலை நீர்த்தேக்கம் கட்டுவதை கர்நாடகா பரிசீலிக்கலாம். இது உபரி நீரைத் தேக்கி வைக்கவும், இரு மாநில விவசாயிகளுக்கு உதவவும் செய்யும்.
எனவே, காவிரி நம்மை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர, பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைப் பின்பற்றி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை நீரைத் திறந்துவிட வேண்டும். முதல்வர் மட்டத்திலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.