

“தமிழகத்தில் இண்டியா கூட்டணிக்கு திமுக தலைமை ஏற்பது போல் புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்கும்” என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்திருந்த நிலையில், “கூட்டணியின் ஒத்துழைப்புடன் எங்கள் ஆட்சி அமையும்” என திமுக பதில் சொல்லி இருப்பது புதுச்சேரி அரசிலை பரபரப்பாக்கி இருக்கிறது.
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் புதுச்சேரியில் கூட்டணி தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவரிடம், “மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் இம்முறை காங்கிரஸ் 21 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்” என நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்தனர். “இதுபற்றி கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு பேசி முடிவு செய்யும்” என்று தெரிவித்த சோடங்கர், திமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்த புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தைக் குழுவையும் அறிவித்தார்.
இதனிடையே, புதுச்சேரி திமுக-வும் வெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரிக்கான தேர்தல் பொறுப்பாளரான ஜெகத்ரட்சகன் எம்.பி தலைமையில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டது. “கூடுதல் தொகுதிகளை காங்கிரஸிடம் கேட்டுப் பெற வேண்டும்” என்று இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர். இந்தச் சூழலில் காங்கிரஸை பேச்சுவார்த்தைக்கு வரும்படி திமுக அழைத்தது. ஆனால், மேலிட அனுமதியை பெற்று பேச்சுவார்த்தைக்கு வருவதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
இதனால், வெள்ளிக்கிழமையே தொடங்க வேண்டிய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. கடந்த தேர்தலில் 13 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக இம்முறை அதைவிட அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. அதேசமயம் கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட சில தொகுதிகளில் திமுக-வும், திமுக போட்டியிட்ட சில தொகுதிகளில் காங்கிரஸும் இம்முறை போட்டியிட முஸ்தீபு காட்டி வருகின்றன.
இது பற்றி புதுச்சேரி திமுக அமைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான சிவா நம்மிடம் பேசுகையில், “தமிழகத்தில் எங்கள் தலைவர் என்ன வியூகம் எடுக்கிறாரோ, அதே தான் இங்கும் எடுக்கப்படும். தமிழகத்தின் ‘திராவிட மாடல்’ ஆட்சியை புதுச்சேரியில் கொண்டு வர வேண்டும் என்று இங்குள்ள மக்களே விரும்புகின்றனர். நாங்களும் அதை நோக்கித்தான் பயணிக்கிறோம். தேர்தல் பணிகள் தொடர்பாக எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசியுள்ளோம்.
எங்களுக்கு வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து பேசியிருக்கிறோம். அதற்கான பட்டியலையும் எங்கள் தலைமையிடம் அளித்துள்ளோம்.
அவர்கள், அந்தப் பட்டியலை காங்கிரஸாரிடம் கொடுத்திருப்பார்கள். அதன்படி. அவர்கள் கலந்து பேசிவிட்டு வரும்போது பேச்சுவார்த்தையை தொடங்குவோம். கூட்டணிக்கு யார் தலைமை என்பதை எங்கள் தலைமை முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இதுவரை எங்களோடு அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராதது குறித்து, அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தமிழகத்தைப் போலவே, எங்கள் தலைமையில் இங்கும் கூட்டணி அமைய வேண்டும் என்று விரும்புகிறோம். திமுக புதுச்சேரியில் 4 முறை ஆட்சியில் இருந்த கட்சி. இப்போது எங்களுக்கான மதிப்பு என்னவென்று தெரியும். கூட்டணியின் ஒத்துழைப்புடன் புதுச்சேரியில் எங்களின் ஆட்சி அமையும்” என்றார்.
இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “நான் திமுக மாநில அமைப்பாளர் சிவாவிடம் பேச்சுவார்த்தைக்கு வருவது தொடர்பாகப் பேசினேன். தலைமையிடம் கேட்டுவிட்டு பேசுவதாகச் சொன்னவர், இரண்டு நாட்களாகியும் பதில் சொல்லாமல் இருக்கிறார். அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளில் அங்கம் வகித்த போது அந்தக் கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை ஏற்றுள்ளது.
அதே ஃபார்முலாவைத் தான் இப்போது வலியுறுத்துகிறோம். நாங்கள் ஈகோ பார்க்கவில்லை. திமுக பார்க்கிறதா என்று அவர்களைத்தான் நீங்கள் கேட்கவேண்டும். பேச்சுவார்த்தை எங்கு நடக்கும் என்பதில் பிரச்சினை இல்லை. ஆனால், கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை ஏற்கும்” என்று உறுதிபடத் தெரிவித்தார்.