

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில், “திமுக தாங்கள் வெற்றிபெற முடியாத தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கக்கூடும்” என முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் மூத்த பார்வையாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள் தெரிவித்ததாவது: திருநாவுக்கரசர் பேசும்போது, “திமுக தாங்கள் வெற்றிபெற முடியாத தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் அவர்களுக்குச் சிக்கலான தொகுதிகளை நம்மிடம் தள்ளப் பார்ப்பார்கள். அதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு வாங்கினால் தோல்வியே மிஞ்சும்” என்றார்.
இதை மறுத்துப் பேசிய பீட்டர் அல்போன்ஸ், “திமுக எடுத்துள்ள கள ஆய்வில், காங்கிரஸுக்கு சாதகமில்லாத தொகுதிகளையும் அடையாளம் கண்டுள்ளனர். அதில் நமது சில சிட்டிங் தொகுதிகளும் அடங்கும். எனவே, அவர்கள் சொல்வதைக் கேட்டால் தான் நாம் வெற்றிபெற முடியும்” என்றார். இதைக் கேட்டு திருநாவுக்கரசர் சற்றே அதிர்ந்துவிட்டார்.
மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத், “காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 28 இடங்களில் 9 இடங்களை பெண்களுக்கு வழங்க வேண்டும்” என்றார். தொடர்ந்து பேசிய மற்ற நிர்வாகிகள், “கூடுதல் இடங்கள் மற்றும் தேர்தல் செலவுக்குப் பணம் தருவதாகச் சொல்லித்தான் தவெக நம்மை கூட்டணிக்கு அழைத்தது. ஆனால், நாம் அதையெல்லாம் விட்டுவிட்டு திமுக கூட்டணியிலேயே நீடிக்கிறோம். இப்போது தேர்தல் செலவுக்கான தொகையை திமுக குறைப்பதாகச் சொல்வதை ஏற்க முடியாது” என்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கூட்டம் முடிந்து அனைவரும் வெளியேறியபோது, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திடீரென மயக்கம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவிக்குப் பின் அவர் குணமடைந்தார்.
முன்னதாக முகுல் வாஸ்னிக் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக விவாதித்தோம். இரு மாநிலங்களிலும் கட்சித் தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. எங்களது கட்சியின் கட்டமைப்பு தேர்தல் களத்திற்கு முழுமையாகத் தயாராக உள்ளது. தமிழக மற்றும் புதுச்சேரி மக்கள் மீண்டும் எங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
கூட்டணி என்று வரும்போது பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். எங்களுக்கென்று சில எதிர்பார்ப்புகள் இருக்கலாம், மற்ற கட்சிகளுக்கு வேறொன்று இருக்கலாம். ஆனால் இறுதி முடிவு எடுக்கப்பட்ட பிறகு, அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் எங்கள் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மற்ற கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெறுவார்கள் என்று நான் கருதவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய கிரிஷ் சோடங்கர், "தமிழகத்தில் எங்களது தேர்தல் தயாரிப்புகளைத் தொகுதி வாரியாக ஆய்வு செய்துள்ளோம். 22 ஆயிரம் கிராமக் குழுக்கள், 2 லட்சம் தீவிர உறுப்பினர்கள் மற்றும் தொகுதிக்கு தலா ஆயிரம் நேரடித் தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 206 தொகுதிகளில் எங்களது கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக, காங்கிரஸ் வேட்பாளரே நிற்பதைப் போன்ற உணர்வோடு எங்கள் தொண்டர்கள் உழைப்பார்கள்" என்றார்.