

சென்னை: நவராத்திரி நிறைவாக கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியுள்ளதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: ஆதிபராசக்தியை துர்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும். லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும். சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும்.
இதையொட்டியே நவராத்திரியின் முதல் மூன்று நாள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியையும் வணங்குகிறோம்.
‘செய்யும் தொழிலே தெய்வம்’, ‘உழைப்பின் மூலமே வெற்றி’ என்பதை உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும், நலமும் பெற்று சிறப்போடு வாழ உளமார வாழ்த்துகிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நம் வாழ்வில் அறிவின் ஒளியையும், வளத்தின் வழியையும் அளிக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி நன்னாளில் அனைவரது வாழ்வில் அறிவு, கல்வி சிறக்கவும், தொழில், செல்வம் பெருகவும், எதிர்கால கனவுகள் நிறைவேறவும் வாழ்த்துகிறேன்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: உழைப்பின் மேன்மையையும், அறிவின் ஆற்றலையும் போற்றி வணங்கும் ஆயுத பூஜை மற்றும் தீமைகளை வென்று நன்மை வெற்றி பெறுவதை குறிக்கும் விஜயதசமி நாளில், மக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும், வளமும், மகிழ்ச்சியும் பெருகவும், தமிழகமெங்கும் ஒற்றுமை, நல்லிணக்கம் தழைத்தோங்கவும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்: ஆயுத பூஜை, விஜயதசமியைக் கொண்டாடும் தருணத்தில் அனைவரும் வளமாக வாழ, தமிழகத்தில் வளமும், நலமும் சேர சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை எனும் முப்பெரும் தேவியரின் நல்லருள் கிடைக்க பிரார்த்தனை செய்து, எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், கோகுல மக்கள் கட்சி நிறுவனர் எம்.வி.சேகர் யாதவ், இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சித் தலைவர் எம்.எஸ்.மார்ட்டின், தமிழ்நாடு ஐஎன்டியுசி தலைவர் மு.பன்னீர்செல்வம், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சேம.நாராயணன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.