

கதர் கட்சிக்கென இருக்கும் ஒரே ஒரு ‘வணக்கத்துக்குரியவர்’ பொய்கைக் கடவுள் பெயர் கொண்ட அவர் மட்டும்தான். டெல்டா மாவட்டத்தில் கோயில் மாநகரைச் சேர்ந்த அவருக்கும், அந்த தொகுதியின் தற்போதைய ‘வினோத’மான மாண்புமிகுவானவருக்கும் சமீபகாலமாக சரிப்பட்டு வரவில்லையாம்.
அண்மையில் அம்மா உணவகத்தை ஆய்வு செய்ய, பரிவாரங்களோடு போனாராம் மிஸ்டர் ‘மாண்புமிகு’. இத்தகவல் தெரிந்து, “எங்க கட்டுப்பாட்டுல இருக்கிற அம்மா உணவகத்துக்கு ஆய்வுக்குப் போறீங்க... என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே...” என்று போன் போட்டு ஆதங்கப்பட்டாராம் ‘வணக்கத்துக்குரியவர்’.
அதற்கு சரியான பதில் வராத நிலையில், அடுத்த சில நாட்களில் தனது பரிவாரங்களோடு அம்மா உணவகம், நீரேற்று நிலையம், உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களுக்கு ஆய்வுக்குப் போயிருக்கிறார் திருவாளர் ‘வணக்கம்’.
இதைக் கேள்விப்பட்ட ‘மாண்புமிகு’, உடனே ‘வணக்கத்துக்குரியவருக்கு’ போன் போட்டு, “என்ன நீங்க... பொறுப்பு மாண்புமிகு நான் இங்க இருக்கும்போது எனக்கே தெரியாம ஆய்வுக்கு கிளம்பிருக்கீங்க. எதுவா இருந்தாலும் எங்கக்கிட்ட சொல்லிட்டுச் செய்யுங்க” என்று குரலை உயர்த்தினாராம். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ‘வணக்கத்துக்குரியவரை’ புறக்கணிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறாராம் ‘மாண்புமிகு’.
இதையெல்லாம் தனது நட்பு வட்டாரத்தில் சொல்லிப் புலம்பிய திருவாளர் வணக்கம், “இன்னிக்கு வந்த ஆளு நம்மள படுத்தி எடுக்கிறாம்பா” என்று வெந்து நொந்து கொண்டாராம்.
கடந்த முறை, ‘வணக்கத்துக்குரிய’ பதவி யோகம் அடித்தபோது ‘பாவர்ட்டி லைன்’ பார்டரில் இருந்தவர், இப்போது எம்எல்ஏ சீட் கேட்கும் அளவுக்கு தன்னை அரசியல்ரீதியாக ‘பலப்படுத்திக்’ கொண்டிருக்கிறார். அதனால், இம்முறையும் ‘வணக்கத்துக்குரிய’ பதவியை வசமாக்கிக் கொள்ள வேண்டும் என துடிக்கிறாராம் ‘பொய்கை’ பார்ட்டி.
ஆனால், அந்த இருக்கையை இம்முறை விசில் பார்ட்டியின் தனது விசுவாசி ஒருவருக்கு உறுதிசெய்வதில் தெளிவாக இருக்கிறாராம் ‘மாண்புமிகு’. இந்த அபிலாஷைகளின் வெளிப்பாடுகள்தான் ஆளுக்கொரு பக்கம் ஆய்வுக்குப் போகும் அரசியல் அதகளங்கள் என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.