

சென்னை: “காவிரி நீரை தமிழகத்துக்கு உடனடியாக திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மத்திய அமைச்சரிடம் நாகை எம்.பி. செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மத்திய ஜல்சக்தி, நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை சந்தித்து அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பியுள்ள விவசாயம், பொதுமக்களின் குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை உடனடியாக திறந்துவிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர் மேலாண்மை அமைப்புகளால் அறிவிக்கப்பட்டுள்ள நீரளவை, தமிழகத்தின் தற்போதைய குடிநீர் மற்றும் அத்தியாவசிய நீர்த் தேவைகளை கருத்தில் கொண்டு, எந்தவித தாமதமும் இன்றி தமிழகத்துக்கு திறந்துவிட சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கும் அதிகாரிகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
குறிப்பாக, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குடிநீருக்கே கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை நிலவுவதால், காவிரி நீர் தொடர்பான பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டின் நியாயமான நீர்ப்பங்கை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநிலத்தில் முன்மொழியப்பட்டுள்ள மேகதாது அணைத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி நீரை நம்பியுள்ள தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட கீழ்ப்பகுதி மாநிலங்களின் குடிநீர் மற்றும் பிற அத்தியாவசிய நீர்த் தேவைகளிலும் இத்திட்டம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் அவர் தெரிவித்து உள்ளார்.