ராணிப்பேட்டை அருகே மாயமான ஒரு வயது பெண் குழந்தை 35 நாட்களுக்கு பிறகு மீட்பு

ஆந்திராவுக்கு கடத்திய 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது
ராணிப்பேட்டை அருகே மாயமான ஒரு வயது பெண் குழந்தை 35 நாட்களுக்கு பிறகு மீட்பு
Updated on: 
1 min read

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கடத்தப்பட்ட ஒரு வயது பெண் குழந்தை 35 நாட்கள் கழித்து ஆந்திராவில் மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த லாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (46). இவரது மனைவி பிரேமா (33). இவர்கள், சாலையோரங்களில் பாட்டில்களை சேகரித்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மகேஸ்வரி (1) என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த செப்.23-ம் தேதி சிப்காட் அருகே சாலையோரத்தில் சேகர், பிரேமா தம்பதியர் தங்களின் ஒரு வயது பெண் குழந்தை மகேஸ்வரியுடன் உறங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு ஒரு மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது, குழந்தை மகேஸ்வரி திடீரென மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து சந்தேகத்துக்குரிய அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த பூபதி-கவுசல்யா தம்பதியினரிடம் சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, கவுசல்யாவின் தோழியான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மல்லேஸ்வரியிடம் குழந்தை இருப்பது தெரிய வந்ததது.

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் மல்லேஸ்வரி (44), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 24 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால், அவரது கணவர் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே அவரை பிரிந்து சென்றுவிட்டார். மல்லேஸ்வரி தனது தாயுடன் தனியாக வசித்து வருவது குறித்து அடிக்கடி தனது தோழியான அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த கவுசல்யாவிடம் கைபேசியில் கூறி வந்துள்ளார்.

தனிமையில் வசித்து வந்த மல்லேஸ்வரிக்கு உதவும் நோக்கில், பூபதி-கவுசல்யா தம்பதியினர் மற்றும் அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் அடிக்கடி பேசி வந்தனர். அந்த சமயத்தில், சேகர்-பிரேமா தம்பதியர் தனது பெண் குழந்தை மகேஸ்வரியுடன் அப்பகுதியில் அவ்வப்போது சுற்றி வந்தனர்.

இதனைப்பார்த்த கவுசல்யா அவரது கணவர் மற்றும் சந்தோஷ் ஆகியோர் இந்த பெண் குழந்தையை மல்லேஸ்வரியிடம் கடத்திச்சென்று கொடுக்க திட்டமிட்டனர். கடந்த செப்.23-ம் தேதி நள்ளிரவு குழந்தை மகேஸ்வரியை யாருக்கும் தெரியாமல் சந்தோஷ் எடுத்துச் சென்றுள்ளார். பின்னர், சந்தோஷ் மற்றும் கவுசல்யா தம்பதியினர் கூட்டாக சேர்ந்து குழந்தை இல்லாத மல்லேஸ்வரியிடம் ஒப்படைத்துள்ளது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் உள்ள மல்லேஸ்வரியின் வீட்டுக்கு சென்று ஏசி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்த குழந்தை மகேஸ்வரியை பத்திரமாக மீட்டனர்.

இந்தச்சம்பவம் தொடர்பாக சிப்காட் அருகே உள்ள அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (32), குமரன் (30), பூபதி (42), கவுசல்யா (40) மற்றும் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவைச் சேர்ந்த மல்லேஸ்வரி (44) ஆகிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை அருகே மாயமான ஒரு வயது பெண் குழந்தை 35 நாட்களுக்கு பிறகு மீட்பு
ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய மறுப்பது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in