ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய மறுப்பது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி

ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய மறுப்பது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி
Updated on: 
1 min read

மதுரை: அரசு துறைகளில் ஒப்பந்த ஊழியர்களை 10 முதல் 20 ஆண்டுகள் வரை வேலை வாங்கிவிட்டு பணி நிரந்தரம் செய்ய மறுப்பது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நெல்லை வேளாண் விற்பனைக் குழு ஓட்டுநர் தனுஷ்கோடி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: வேளாண் விற்பனைக் குழுவில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். என்னை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். என்னைப் போல் பணிபுரிந்த மற்றொரு பணியாளர் 30.12.2013 முதல் பணி நிரந்தரம் செய்யப்பட்டார். தனக்கும் 30.12.2013 முதல் பணி நிரந்தரம் செய்து பணப்பலன்களை வழங்க மனு அளித்தேன்.

என் மனுவை நிராகரித்து நெல்லை விற்பனைக் குழுவின் செயலாளர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு பணி நிரந்தரம் மற்றும் பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை தனி நீதிபதி விசாரித்து விற்பனைக் குழு செயலாளரின் உத்தரவை ரத்து செய்து பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், ‘அரசுத் துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பது ஏன்? அவர்களை 10 முதல் 20 ஆண்டுகள் வரை வேலை வாங்கிக் கொண்டு பணி நிரந்தரம் செய்ய மறுப்பது ஏன்? அதிகாரிகள் செய்யும் தவறுக்காக ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் அனைத்து அரசுத் துறைகளிலும் ஒப்பந்த ஊழியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.

ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய மறுப்பது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி
அனைவருக்கும் பள்ளிகள் ஒன்றாக இருக்கும்போது ஏன் தனித் தனி மயானங்கள்? - ஐகோர்ட் கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in