

கோவை: “மது விற்பனை மூலம் வருமானத்தை பெருக்கும் திட்டம் அரசுக்கு இல்லை,” என கோவையில் அமைச்சர் கே.விக்னேஷ் தெரிவித்தார்.
ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதைப் போன்று தமிழ்நாட்டிலும் உணவங்களுடன் குடிப்பகங்களும் இணைக்கப்பட்ட ரெஸ்டோ பார்களை அமைக்க உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், கோவை சுந்தராபுரத்தில் இன்று (ஜூலை 18) நடைபெற்ற தனியார் மருத்துவமனை நிகழ்வில், தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் கே.விக்னேஷ் கலந்து கொண்ட போது ரெஸ்டோ பார் விவகாரம் பற்றி விளக்கம் அளித்தார்.
அமைச்சர் கே.விக்னேஷ் செய்தியாளர்களிடம் கூறியது: “மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையைச் சீரமைப்பதற்காகப் பலகட்ட ஆலோசனைகள் அரசு சார்பில் நடைபெற்றன. இதில், டாஸ்மாக் கடைகளைத் தனியார் மயமாக்கலாமா, தற்போதுள்ள டாஸ்மாக் கடைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாமா, அல்லது ரெஸ்டோ பார் கொண்டு வரலாமா என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டன.
மேலும், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றுவது குறித்தும், வெளிநாடுகளில் இருந்து தொழில் நிமித்தமாக வருபவர்களின் வசதிக்காகச் சில மாற்றங்கள் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினருக்கும் என்னென்ன தேவைகள் உள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கமான ஆலோசனைகள் நடந்தன.
ஆனால், இந்த ஆலோசனைகளில் 'ரெஸ்டோ பார்' என்ற ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சிலர் தவறாகப் பேசி வருகின்றனர். 'மது விற்பனை மூலம் அரசின் வருமானத்தைப் பெருக்குவது' என்ற வார்த்தையைத் தயவு செய்து தவிர்த்துவிடுங்கள். அவ்வாறு மது விற்பனை மூலம் வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கோ, முதல்வருக்கோ கிடையாது.
அப்படி ஒரு எண்ணம் இந்த அரசுக்கு இருந்திருந்தால், சமீபத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடியிருக்க மாட்டோம். அதைத் தாண்டியும் மேலும் சில கடைகளை மூடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
மதுவுக்கு அடிமையானவர்களை மீட்டு எடுப்பதும், அடுத்த தலைமுறையினர் இந்தப் பிரச்சினையில் சிக்காமல் தடுப்பதுமே அரசின் உறுதியான நோக்கமாகும்.
மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு விவகாரத்தில் தற்போது முதல் படியில் ஏறியுள்ளோம். எடுத்தவுடனே நேரடியாக மூன்றாவது, ஐந்தாவது படிக்குச் செல்ல முடியாது. டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாகப் பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.