வெல்லமண்டிக்கு இனிப்பான செய்தி: அமைப்புச் செயலாளராக்கி அரவணைத்த பழனிசாமி

வெல்லமண்டிக்கு இனிப்பான செய்தி: அமைப்புச் செயலாளராக்கி அரவணைத்த பழனிசாமி
Updated on
1 min read

ஓபிஎஸ் அணியில் இருந்துவிட்டு அண்மையில் மீண்டும் அதிமுக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கி அரவணைத்திருக்கிறார் பொதுச்செயலாளர் பழனிசாமி.

கடந்த 1972-ம் ஆண்டுக்கு முன்பு திமுக-வில் இருந்த வெல்லமண்டி நடராஜன், எம்ஜிஆர் அதிமுக-வை தொடங்கியபோது, எம்ஜிஆர் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து அதிமுக-வில் சேர்ந்தார். எம்ஜிஆர் மறைந்தபோது, அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணியாக பிரிந்ததது. அப்போது, ஜெயலலிதா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்.

திருச்சியை சேர்ந்த இவர், 2016-ல் ஜெயலலிதா மற்றும் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். 2017-ல் ஓபிஎஸ் அணி, டிடிவி. தினகரன் அணி எனப் பிரிந்தபோது, தினகரன் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். அதன் பிறகு பழனிசாமி, தினகரன் அணி உருவானபோது, பழனிசாமி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். 2021-ல் அதிமுக-வில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்தபோது ஓபிஎஸ் பக்கம் நின்றார் நடராஜன். அதனால் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் இருந்து நடராஜன் எடுத்த நிலைப்பாடுகள் எல்லாம் சரியாகவே இருந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு அவரது அரசியல் வாழ்க்கையில் சரிவை ஏற்படுத்தியது. தற்போது ஓபிஎஸ்ஸும் அவரது விசுவாசிகளும் திமுக-வில் ஐக்கியமான நிலையில், அதை ஏற்க மனமின்றி அண்மையில் மீண்டும் அதிமுக-வில் இணைந்தார். அவருக்கு தற்போது அமைப்புச் செயலாளர் பதவி வழங்கி அங்கீகரித்திருக்கிறார் பழனிசாமி.

தற்சமயம் தினகரன், சசிகலா, ஓபிஎஸ் பக்கம் இருக்கும் அதிமுக-வினர் பலரும் தங்களுக்கு உரிய அங்கீகாரம் இன்றி அதிருப்தியுடன் இருந்து வருகின்றனர். அரசியல் எதிர்காலம் கருதி அதிமுக-வுக்கே மீண்டும் சென்றுவிடலாமா என்ற ஊசலாட்டத்திலும் அவர்களில் பலர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அதிமுக-வுக்கு இழுக்கும் விதமாகவே வெல்லமண்டி நடராஜனுக்கு பழனிசாமி அமைப்புச் செயலாளர் பதவி வழங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

தனது இந்த நடவடிக்கையின் மூலம், தவறை உணர்ந்து மீண்டும் அதிமுக-வுக்கு திரும்புவோருக்கு கட்சியில் உரிய மரியாதை வழங்கப்படும் என்பதை சூசகமாக பழனிசாமி தெரிவித்திருக்கிறார். விஜய் வரவால் தேர்தல் களம் கடுமையாக இருக்கும் என்பதால் பிரிந்து போனவர்களை மீண்டும் உள்ளே கொண்டு வந்து அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் பழனிசாமி.

வெல்லமண்டிக்கு இனிப்பான செய்தி: அமைப்புச் செயலாளராக்கி அரவணைத்த பழனிசாமி
தேர்தலில் போட்டியிட ஓபிஎஸ் அவரது மகன் திமுகவில் விருப்ப மனு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in