படம்: எல்.பாலச்சந்தர்
பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரனின் 69-வது நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதையொட்டி 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தியாகி இமானுவேல் சேகரனின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதலில் இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செல்லூர் கிராம மக்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் இமானுவேல் சேகரன் குடும்பத்தினரான அவரது மகள் சுந்தரி பிரபா ராணி, பேரன்கள் சக்கரவர்த்தி, ஆரோக்கிய கோமன், ஜீவன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து தேவேந்திர பண்பாட்டுக் கழகம் சார்பில் மரியாதை செய்தனர்.
தொடர்ந்து தவெக சார்பில் அமைச்சர் நிர்மல் குமார் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் அருண்ராஜ், டி.கே.பிரபு, மதன் ராஜா, ராஜுவ், எம்.எல்.ஏக்கள் சபரி ஐயங்கார் (பெரியகுளம்), இளங்கோவன் (மானாமதுரை), கார்த்திக் (ஸ்ரீவில்லிப்புத்தூர்), அய்யனார் (நிலக்கோட்டை), கார்த்திக்கேயன் (மதுரை கிழக்கு), கோபிசன் (மதுரை) தெற்கு, கருப்பையா (சோழவந்தான்) உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், “தமிழக முதல்வர் விஜய் அறிவுறுத்தலின்படி தவெக சார்பில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு நாளையொட்டி ஒட்டி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணத்துக்குப் பின் அமைச்சரவை மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தியாகி நினைவிடத்தில் அரசியல் பேச வேண்டாம்” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
படம்: எல்.பாலச்சந்தர்
அவர்களை தொடர்ந்து, திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம், கதிரவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார், மணிகண்டன், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மேலும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகை கஸ்தூரி, முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார், நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், தேமுதிக நகரச் செயலாளர் அன்பு தட்சிணாமூர்த்தி, விசிக சார்பில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மதிமுக சார்பில் சதன் திருமலைக் குமார், பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பின் தரணி முருகேசன், எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதனிடையே, நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி சந்தீஷ் தலைமையில் 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விதிமீறல்களை தடுக்க ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 38 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பரமக்குடி நகர் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.