பொள்ளாச்சி அருகே உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு - விவசாயிகள் போராட்டம்

பொள்ளாச்சி அருகே உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு - விவசாயிகள் போராட்டம்
Updated on
1 min read

பொள்ளாச்சி: உப்பாறு அணைக்கு நீர் திறக்க பரிந்துரை செய்வதை கண்டித்தும், பிஏபி கால்வாய்களை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும், பிஏபி விவசாயிகள் இன்று கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து, நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு பாசனத்துக்கு நீர் விநியோகம் செய்யப்படுகிறது. நடப்பாண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இச்சூழலில் உப்பாறுக்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் கூறியது: “பிஏபி பாசனத்தில், திருமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து இந்த ஆண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் மண்டல பாசனத்தில் தலா ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற வேண்டும்.

கடந்த ஆண்டு மழைப்பொழிவு நன்றாக இருந்ததால் ஒவ்வொரு மண்டலத்திலும் 5 சுற்றுகள் தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது மழை பொழிவில்லாததால் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு சுற்று தண்ணீர் உயிர் தண்ணீராக மட்டுமே வழங்கக்கூடிய நிலை உள்ளது.

இரண்டு மற்றும் மூன்றாம் மண்டல கால்வாய்களை துார்வாரி கடைமடை வரைக்கும் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என கடந்த ஐந்து மாதங்களாக தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம்.

விரைவில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து பொள்ளாச்சி எம்எல்ஏ சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார். நிதியமைச்சரும் ரூ.14.98 கோடி நிதி ஒதுக்கி தருகிறோம் என சட்டப்பேரவையில் உத்தரவாதம் தெரிவித்தார். 15 நாட்களாகியும் இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில், பிஏபி திட்டத்துக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இதற்கு திட்ட குழு மற்றும் 134 பாசன சங்க தலைவர்கள் ஆயிரக்கணக்கான ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். உப்பாறு அணைக்கு எக்காரணம் கொண்டும் தண்ணீர் திறக்கக் கூடாது.

அதையும் மீறி தண்ணீர் திறந்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கால்வாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம். கால்வாய்களை தூர்வார போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று பொள்ளாச்சி - உடுமலை சாலையில் அமைந்துள்ள, பிஏபி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்று மெடிக்கல் பரமசிவம் தெரிவித்தார்.

பொள்ளாச்சி அருகே உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு - விவசாயிகள் போராட்டம்
‘பரந்தூர் அருகே 410 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்துவது நியாயமா?’ - அன்புமணி காட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in