

பழநி திருஆவினன்குடி கோயிலில் கேரள பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் பெண் இடைத்தரகர்.
பழநி: பழநி மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயிலே 3-ம் படை வீடாகும். பழநி வரும் பக்தர்கள் முதலில் இக்கோயிலில் வழிபட்ட பிறகே, மலைக்கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை, மாத கிருத்திகை ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். முக்கிய நாட்கள், சுபமுகூர்த்த தினங்களில் ஏராளமான திருமணங்களும் நடைபெறுகின்றன.
இக்கோயிலில் சுவாமியை தரிசிக்க பொது தரிசனம் மற்றும் ரூ.10 கட்டண சிறப்பு தரிசனம் என 2 வழித்தடம் உள்ளது. சாதாரண நாட்களில் அதிகபட்சம் 10 நிமிடத்திலும், விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அதிகபட்சம் 30 நிமிடத்திலும் சுவாமி தரிசனம் செய்ய முடியும். இருப்பினும், வரிசையில் காத்திருக்காமல் விரைவாகவும், சிறப்பு தரிசனம் செய்ய வைப்பதாகவும் அழைக்கும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என பக்தர்களை தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.
ஆனால், கூட்டம் அதிகமாக இருக்கும் சனி, ஞாயிறு வார விடுமுறை, விசேஷ நாட்களில் இடைத்தரகர்கள் பக்தர்களிடம் சிறப்பு தரிசனம் செய்ய வைப்பதாக கூறி பணம் பறித்து வருகின்றனர்.
இடைத்தரகர்கள் கோயிலில் உள்ள ஒரு சில பணியாளர்கள், அர்ச்சகர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, விரைவு தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களை அடையாளம் காணுகின்றனர். ஒரு நபருக்கு இவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர். இதற்கு சம்மதிக்கும் பக்தர்களை, சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வரும் பாதை வழியாக அழைத்து செல்கின்றனர்.
அங்கு, 10 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனத்துக்கு ஒரு நபருக்கு குறைந்தது ரூ.100-ம், 5 பேருக்கு மேல் வந்தால் ரூ.1000 முதல் ரூ.1,500 வரையும் வசூலிக்கின்றனர்.
வெளி மாநில பக்தர்கள், காதணி மற்றும் திருமண விழா வீட்டார் என்று தெரிந்தால் அதற்கு தனியாக பெருந்தொகையை வசூலிக்கின்றனர். தரிசனம் செய்ய வைத்த பிறகு, அவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு தேங்காய் பழம் அடங்கிய பிரசாத பை, மாலை, அபிஷேக பால் கொடுத்து நம்ப வைக்கின்றனர்.
ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இடைத்தரகர்களாக கோயிலுக்குள்ளே வைத்து, சுவாமி தரிசனம் செய்ய வைக்க பேரம் பேசுகின்றனர். இவர்கள் மீது தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.