“ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு தரும்” - நயினார் நம்பிக்கை

“ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு தரும்” - நயினார் நம்பிக்கை
Updated on
2 min read

சென்னை: “மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைப் பயணத்தின் மூலம் இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு சுமுக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இரு நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது,” என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை, இந்தியா நாடுகளின் ராஜ்ஜிய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங்கின் இலங்கைப் பயணம் பார்க்கப்படுகிறது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 8 முதல் 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.

இதற்கு முன்பு 1988ல் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த கே.சி.பந்த், கொழும்பு சென்றார்! இதைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இலங்கை செல்வது கடந்த 38 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

வரலாற்றுப் பூர்வமாக இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இந்தியாவின் நேரடி ராணுவ பங்களிப்பு, அந்நாட்டில் நீண்ட கால அரசியல் வடுக்களை ஏற்படுத்தியதால், இருதரப்பிலும் தலைவர்கள் வெளியேறவும், அமைச்சர்கள் துறைச் செயலர்கள் நிலையிலான சந்திப்புகள் தொடர்ந்த போதிலும், பாதுகாப்பு அமைச்சக நிலையிலான இலங்கைப் பயணம் திட்டமிட்டே தவிர்க்கப்பட்டு வந்தது!

இந்தியப் பெருங்கடலின் சர்வதேசக் கடல்சார் பாதையில் இலங்கை மிக முக்கியமான இடத்தில் உள்ளது! இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்புத் துறைமுகங்களுக்கு யுவான் வாங் போன்ற சீன உணவு மற்றும் ஆய்வுக் கப்பல்களின் வருகை, கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது! இது தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் ஆந்திரத்தின் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ மையங்களுக்கு மறைமுக அச்சுறுத்தலாக அமையலாம் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் கவலை எழுப்பி வருகின்றனர்.

இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக, இந்தியா அதன் கண்காணிப்பு வலை அமைப்பை விரிவுபடுத்தியுள்ளதுடன், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை மேம்படுத்தும் பொறுப்பையும் மேற்கொண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் மகாசாகர் பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர முன்னேற்றம் மற்றும் நட்பு நாடுகளுக்கு முன்னுரிமைக் கொள்கைகள் இதற்கு உதவியுள்ளன!

இலங்கைக்கு இந்தியா வழங்கும் ரோந்து கப்பல்கள், டோர்னியர் உளவு விமானங்கள் மற்றும் கடன் உதவிகள் மூலம் அந்நாடு அதன் ராணுவ பலத்தை வலுப்படுத்த முடியும்! இந்தியாவுக்குத் தனது உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தி வாயிலாக உதிரிபாக ஏற்றுமதிச் சந்தை விரிவடைகிறது. மேலும், இரு தரப்புத் தகவல் பகிர்வு மையம் மூலம் கடல் வழிப் பாதைகள் பலப்படுவதோடு, இந்திய பெருங்கடலில் அந்நிய நீர்மூழ்கிக் கப்பல்களின் நகர்வுகளை இந்தியா நிகழ் நேரத்தில் கண்காணிக்க முடியும்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் சீனா குத்தகைக்கு எடுத்தது போன்ற இலங்கையின் ஒற்றைச் சார்பு நிலையை இந்தியாவின் பொருளாதார உதவிகளும், அதானி குழுமத்தின் கொழும்புத் துறைமுகம் மேற்கு முனைய மேம்படுத்துதல் திட்டமும் மாற்றி அமைத்துள்ளன.

இத்தகைய சூழலில் அமையும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங்கின் பயணத்தின் மூலம் “ஸ்லினெக்ஸ்” எனப்படும் இலங்கை இந்தியக் கூட்டு ராணுவ ஒத்திகைகள் மற்றும் மித்ர சக்தி எனப்படும் கூட்டுறவுப் பயிற்சிகள் வலுப்பெறும்! அத்துடன் திருகோணமலை எண்ணெய்ச் சேமிப்பு வளாகப் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்.

இலங்கை முப்படையினருக்கு இந்திய பாதுகாப்பு நிறுவனங்களில் வழங்கப்படும் பயிற்சித் திட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது! அந்த வகையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைப் பயணம் இருதரப்புகளுக்குமான புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக கருதப்படுகிறது.

ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணத்தின் மூலம் இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு சுமுகத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இரு நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது. இருநாட்டுக் கடலோரக் காவல் படைகளுக்கு இடையே உடனடித் தகவல் தொடர்பு வசதிகளை உருவாக்குவதன் மூலம், தவறான புரிதலால் மீனவர்கள் கைது செய்யப்படுவதையும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நாட்டின் எதிர்கால வளர்ச்சிகளுக்கு மற்றும் அண்டை நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு, இத்தகைய பயணங்கள் அவசியம் என கருதப்படுகிறது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைப்பயணம் வெற்றிகரமாக அமைய மனமார வாழ்த்துகிறேன்!’ என தெரிவித்துள்ளார்.

“ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு தரும்” - நயினார் நம்பிக்கை
“சட்டம் தன் கடமையைச் செய்யும்” - பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கில் வி.டி.சதீசன் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in