

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக சாலை மறியலில் ஈடுபட முயன்ற வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினரைக் கைது செய்து அழைத்துச் சென்ற போலீஸார்.
ஓசூர்: தமிழக - கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் சாலை மறியலில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் 65 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால், தமிழக வாகனங்கள் ஓசூர் அருகே நிறுத்தப்பட்டன.
கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் தமிழக - கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதனால், ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு 60 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே நேற்று காலை இயக்கப்பட்டன. மதியம் 12 மணி முதல் தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
மதியம் 1 மணியளவில் கன்னட சலுவாளி வாட்டாள் பக் ஷா கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், கன்னட ரக் ஷண வேதிகே உள்ளிட்ட கன்னடஅமைப்பினர் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து பேரணியாக வந்து தமிழக எல்லையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த கர்நாடக போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
இதுகுறித்து வாட்டாள் நாகராஜ் கூறியதாவது: மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் தேவையின்றி போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேகேதாட்டு அணை கட்டப்படுவதால் தமிழகத்துக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து தமிழக அரசு தெளிவான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.
தமிழக எல்லையான ஜுஜுவாடியில் நிறுத்தப்பட்ட தமிழக வாகனங்கள்.
அணை கட்டுவதன் மூலம் சேமிக்கப்படும் நீர், மின் உற்பத்திக்கும் பெங்களூரு மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மட்டுமே பயன்படுத்தப்படும். மீதமுள்ள நீர் வழக்கம் போல் தமிழகத்துக்குத் திறந்து விடப்படும். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.13-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் ‘பந்த்’ நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேகேதாட்டு அணைத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தால், கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிட முழுமையாகத் தடை விதிக்க நேரிடும். மேலும், சென்னை தலைமைச் செயலகம் முன்பு சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்புகளைச் சேர்ந்த 65 பேரைப் போலீஸார் கைது செய்தனர். போராட்டம் காரணமாக மதியம் 1 மணி முதல் தமிழகப் பதிவெண் கொண்ட வாகனங்கள் தமிழக எல்லையான ஜுஜு வாடியில் நிறுத்தப்பட்டன. மதியம் 1.45 மணிக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டன.