

சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தொடர்பான தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் விஜய் பேசினார்.
சென்னை: “நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்படும்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தனித் தீர்மானமும் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது: நெல், கரும்புகளைப் பயிரிட, அறுவடை செய்ய, விற்பனை செய்ய விவசாயிகள் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவிட்டு வருகின்றனர். தமிழகத்தில் தற்போது நிதி நிலைமை சரியில்லாமல் இருந்தாலும், நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதி, தமிழக வரலாற்றில் இல்லாத அளவில் மாநில அரசின் நெல், கரும்புக்கான ஊக்கத் தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
நெல் கொள்முதல் பருவம் செப்.1-ம் தேதி தொடங்க இருப்பதால் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன், மாநில அரசின் ஊக்கத் தொகையாக ஒரு குவிண்டாலுக்கு சன்ன ரக நெல்லுக்கு ரூ.289, பொது ரக நெல்லுக்கு ரூ.159 உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் விவசாயிகளின் சன்ன ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,750, பொது ரக நெல்லுக்கு ரூ.2,600 என விலை கிடைக்கும்.
அதேபோல, 2025-26 கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு டன் ஒன்றுக்கு ரூ.3,290.50 விலை நிர்ணயம் செய்துள்ளது.
அதற்கு மேல் தமிழக அரசால் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.709.50 வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்குக் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 விலையாக கிடைக்கும். கடந்த 5 ஆண்டுகளில் கரும்புக்கான சிறப்பு ஊக்கத் தொகை ரூ.156 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில், தற்போது முதல் ஆண்டிலேயே ரூ.360.50 உயர்த்தப்பட்டுள்ளது.
மாநில அரசு ஓர் ஆண்டில் நெல்லுக்கான ஊக்கத் தொகையைக் குவிண்டாலுக்கு ரூ.156-க்கு மேல் உயர்த்தி வழங்குவதும், கரும்புக்கான சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.134-க்கு மேல் வழங்குவதும் வரலாற்றில் இதுவே முதல்முறை. விவசாயிகளை இந்த அரசு கைவிடாது. இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து: தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக, முதல்வர் விஜய் நேற்று கொண்டு வந்த தனித் தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: மனோன்மணீயம் சுந்தரனார் 1891-ம் ஆண்டு எழுதிய ‘மனோன்மணீயம்’ என்ற நாடக நூலின் பாயிரத்தில் இருந்து எடுக்கப்பட்ட ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ 1970-ல் நவ.23-ம் தேதி முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்பின், கடந்த 2021, டிச.17-ம் தேதி முதல் மாநிலப் பாடலாக அங்கீகாரம் வழங்கப்பட்டு, அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் 1970-ம் ஆண்டில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் பாடப்படுவது பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே, தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ் மொழிக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும்.
இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்தை நிலை நிறுத்தும் வகையில் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை ஏகமனதாக தீர்மானிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தீர்மானம் தொடர்பாக முதல்வர் விஜய் பேசியதாவது: தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல, அது நம் உயிர், அது ஒரு பண்பாடு, நாகரிகம், சிந்தனை. தமிழ்னா கெத்து, தமிழ்னா பவர். தமிழ்த்தாய் வாழ்த்து எந்த மொழியையும், மதத்தையும், இனத்தையும் தாழ்த்தி பேசவில்லை. நமக்கு, தமிழின் பெருமையைச் சொல்ல திருக்குறள் ஒன்று போதாதா? இவ்வளவு பெருமை கொண்ட தமிழ் மொழியின் ஒரு அடையாளம்தான் தமிழ்த்தாய் வாழ்த்து.
ஒட்டுமொத்த இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்தி பிடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து நம் தமிழகத்தில் முதல் இடத்தில்தான் இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையைப் பாதுகாப்பதில் தவெக அரசு ஒருபோதும் சமரசம் செய்யவே செய்யாது. எனவே, கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து அனைவரும் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
பின்னர் பல்வேறு கட்சிகள் சார்பில் தீர்மானத்தை வரவேற்று பேசினர்:
பேரவைத் தலைவர் பிரபாகர்: தமிழக சட்டப்பேரவையில் 1991-ம் ஆண்டு, முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தான் பேரவை நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
கோவி.செழியன் (திமுக): முதன் முதலில் அரசாணை வெளியிட்டு இதுதான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் என்று பாட வைத்தவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. அதன் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தைக் கட்டாயம் பாட வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதை தீர்மானமாக நிறைவேற்றினால் மட்டும் போதாது, சட்டமாக்க வேண்டும்.
பழனிசாமி (அதிமுக): தமிழ் தொன்மையான மொழி. அது நம் பண்பாட்டின் அடையாளம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பது யாருக்கும் எதிரான நடவடிக்கை இல்லை. தமிழுக்கும், தாய்மொழிக்கும் நாம் செலுத்தும் மரியாதை என்றார்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கே.மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ செல்வ சுவாமி, அமைச்சர்கள் ராஜ் மோகன், பெ.விஸ்வநாதன், வன்னி அரசு, ஷாஜஹான், பாமக எம்எல்ஏ சிவக்குமார் ஆகியோரும் தீர்மானத்தை வரவேற்று பேசினார். பின்னர் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.