

முதல்வர் விஜய்
சென்னை: “முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்படுகிறது. எம்எல்ஏ.க்களுக்குக் கார் மற்றும் ஓட்டுநர், மாதாந்திர பராமரிப்பு செலவுக்கு ரூ.75,000 வழங்கப்படும்” என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை நேற்று காலை கூடியதும் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் விஜய் பேசியதாவது:
ஒரு உயிரின் மதிப்பை, அவரது வருமானம் தீர்மானிக்கக் கூடாது. வசதி படைத்தவர், வசதி குறைவானவர் என்ற நிலை, மருத்துவத் துறையில் இருக்கக் கூடாது. அனைவருக்கும் சமமான மருத்துவச் சேவை, எளிதாகக் கிடைக்க வேண்டும் என்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது.
மருத்துவம் என்பது சலுகை அல்ல; ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை.
ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவதில் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் மிக கொடியது. மருத்துவத்தைத் தேடி வரும் மக்களின் பாதையில் இருக்கும் தடைகளான வறுமை, தொலைவு, மருத்துவர் பற்றாக்குறை, மருந்துகளின் விலை, மருத்துவ விழிப்புணர்வு இல்லாமை, காத்திருப்பு, அவசர கால வசதியின்மை போன்றவற்றைப் படிப்படியாக அகற்றி, ஏழை - பணக்காரர், கிராமம் - நகரம் என்ற பாகுபாடின்றி, ஒவ்வொருவருக்கும் தரமான மற்றும் எளிதான மருத்துவச் சேவை கிடைக்க செய்வதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவச் சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஓராண்டுக்குத் தற்போதுள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து, ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.
திருநங்கையர்களுக்கான மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை சேவைகள் கூடுதலாகச் சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தருமபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ.351 கோடியில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும். 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, 660 பிஎஸ்சி செவிலியர் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும்.
ஏற்கெனவே உள்ள செவிலியர் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பள்ளிகளில் கூடுதலாக 1,925 கூடுதல் மாணாக்கர் இடங்கள், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,778 மாணாக்கர் இடங்கள், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் என மொத்தம் 6,098 கூடுதல் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும்.
ரோபோடிக் அறுவை சிகிச்சை, லீனியர் ஆக்சலரேட்டர் கதிர்வீச்சு, நவீன கருவிகள், இலக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சைகளுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.106.17 கோடி வழங்கப்படும். மருத்துவர்களுக்குப் பயிற்சியும், நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவும் ரூ.2.77 கோடியில் அளிக்கப்படும். மேலும், தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 1.22 லட்சம் பெண்களுக்கு ரூ.8.70 கோடி மதிப்பில் எச்பிவி டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
மொத்தம் ரூ.673.44 கோடி மதிப்பீட்டில், புற்றுநோய் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.
கார்கள், சலுகைகள்
கடந்த ஆக.12-ம் தேதி காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதிமணி பேசும்போது, பல எம்எல்ஏ.க்களிடம் சொந்தமாக வாகனம் இல்லை. தொகுதிப் பணிகளை ஆய்வு செய்யவும், பார்வையிடவும் கடினமாக உள்ளது. லஞ்சமில்லாத நேர்மையான ஆட்சி அமைய உறுப்பினர்களின் அடிப்படை தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
தமிழக பேரவை வரலாற்றில், எளிய பின்னணியில் இருந்து பண பலமோ, அரசியல் பின்னணியோ இன்றி மக்களின் பேராதரவோடு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் தலைமுறை சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கைக் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
பொருளாதார பலமில்லாமல் எம்எல்ஏ.க்களாகப் பணியாற்றும் மற்றும் முதல் முதலாக எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியைத் தொய்வின்றித் தொடர்வதற்கும், அவர்கள் தங்கள் தொகுதிப் பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்கும் வசதியாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.
இந்த அறிவிப்பு எம்எல்ஏக்கள் எவ்வித சமரசமும் இன்றி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தொகுதிக்குட்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு எளிதாகப் பயணம் செய்து, தொகுதி முழுவதும் உள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளுக்கு தீர்வு காண வழிவகுக்கும். மேலும், எம்எல்ஏக்கள் தொகுதி சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அவர்கள் ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்வதும் அவசியம்.
எனவே, எம்எல்ஏ.க்களுக்கு அரசு வழங்கும் வாகனத்தை பராமரிக்க, ஓட்டுநர், எரிபொருள் உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப் படியாகவும், அலுவலகப்
பணிகளில் உதவி செய்ய ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் உதவியாளர் படியாகவும் வழங்கப்படும். இதற்காக உரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு ஆணைகள் வெளியிடப்படும். இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்தார்.
பெரம்பூரில் பன்னோக்கு மருத்துவமனை
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் நேற்று கூறியதாவது: வட சென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவச் சேவை எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் புற்றுநோயைத் தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும், ‘முதல்வரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்’ ரூ.673.44 கோடியில் மேம்படுத்தப்படும்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.471.80 கோடியில் தரைதளம் மற்றும் 14 தளங்களுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.
மேலும், ஐந்து மண்டல புற்றுநோய் மையங்கள் தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்படும். முதல் கட்டமாக, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூ.84 கோடியில் தரை மற்றும் 8 தளங்களுடன் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்கப்படும். இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்தார்.