ஐந்து தொகுதி இடைத்தேர்தல் தடை நீட்டிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 28-ம்தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டை பாஜக பிரமுகர் வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டது. தேர்தல் ஆணையமும், தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கில், முதல்வர் விஜய் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுது. அதில், திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஜூன் 17-ம் தேதி தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மே10-ம் தேதியே தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும்; ராஜினாமா செய்து, அதை சபாநாயகர் ஏற்ற நாளில் எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல மனுவைத் தாக்கல் செய்துள்ள மனுதாரர் சம்மந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் வழக்கு தொடர்ந்தவரோ அல்ல, வாக்காளரும் அல்ல. திருச்சி கிழக்கு தொகுத்தியில மக்கள் பிரதிநிதி இல்லாமல் காலவரையின்றி இடைத்தேர்தலை தாமதப்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார்.

இதே போல் தடையை நீக்கக் கோரி முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெருந்துறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முரளிதர், ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டதாகவும் எனவே தடையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தேர்தல் ஆணையம் சார்பாக வழக்கறிஞர் நிரஞ்சன் உத்தரவு நகல் கிடைக்கப்பெறவில்லை என்றும் வந்தபின் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

அனைத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 28-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம்
பெருந்துறை எம்எல்ஏ வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கு: ஐகோர்ட் நிராகரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in