

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்கள், பெண்ணை குறித்து இழிவாக பேசும் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திகளில் கூறி யிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்: தஞ்சாவூரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்திய மொழி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் தனது கருத்தை திரும்பப்பெற்று, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: எதிர்க்கட்சித் தலைவர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. மலிவான இழி மொழிகளை பேசுவது அவர் வகித்துவரும் பொறுப்புக்கு உகந்தது அல்ல. ‘யாகாவராயினும் நா காக்க’ எனும் குறள் மொழியை அவர் கடைபிடிக்க வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: கிண்டலாக பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி உதயநிதி ஸ்டாலின் பேசியது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு பிரச்சினையாக மாறியுள்ளது. ஒரு பெண்ணைக் குறித்து இழிவாக பேசும் இத்தகைய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.
அதேநேரம் சட்டப்பேரவை கூடும் சூழலில், எதிர்க்கட்சி தலைவரை சிறைப்படுத்துவதை தவிர்ப்பது ஆளுங்கட்சி மீதான நன்மதிப்பை உயர்த்தும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: எதிர்க்கட்சித் தலைவர் பொதுவெளியில் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது.
இப்பிரச்சினையை சட்டப்படி அவர் எதிர்கொள்ளட்டும். அதேநேரம் சட்டப்பேரவையில் அவரது பங்கேற்பு அவசியமானது. அதை அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: எதிர்க்கட்சி தலைவர் கண்ணியக் குறைவாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது அவர் வகித்து வரும் உயரிய பொறுப்புக்கு உகந்ததல்ல.
அதேநேரம் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் வேளையில் எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருந்து கடமை ஆற்ற அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
வீ த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை: வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, “இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?” என்று தோன்றியது. பிறகுதான் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கேட்டேன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின், உதிர்த்திருக்கும் தரமற்ற சொல், மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயரையும், புகழையும் கெடுக்கும் வகையில் வெளிவந் திருப்பது வேதனையும், வருத்தமும் தருகிறது.
பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு: உதயநிதி ஸ்டாலினின் பேச்சு நாகரிகமற்றது. மலிவானது. இத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் ஒரு நாள் மாநிலத்தை ஆட்சி செய்தால் கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.
பொது மேடையில் நடிகை த்ரிஷாவை காயப்படுத்தியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளனர்.